மலைபடுகடாம் – மூலமும் உரையும்

 

மலைபடுகடாம்மூலமும் உரையும்

கூத்தர்களின் இசைக்கருவிகள்

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்

விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து

திண் வார் விசித்த முழவொடு ஆகுளி

நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்

மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு                5

 

கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு

விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ

நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை

கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி                   10

 

நொடி தரு பாணிய பதலையும் பிறவும்

கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப

நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்

அருஞ்சொற்பொருள்:

1. தலைஇய -மழைபெய்த ; விசும்புவானம்

2. இமிழ் -ஒலி; கடுப்பபோல

3. விசித்த - கட்டிய; முழவுமத்தளம்; ஆகுளிசிறு பறை

4. உருக்குற்ற உருக்கபட்ட; அடர் - தகடு; பாண்டில்கஞ்சதாளம் (ஜால்ரா, a pair of cymbols)

5. மின் - ஒளி; இரும் - கரிய; பீலிமயில் இறகு; கோடு  ஊதுகொம்பு வாத்தியம்

6. விடுத்த விடப்பட்ட; தூம்புபெருவங்கியம்

7. இளி -எழுவகைப் பண்களில் ஒன்று ; இமிரும் -ஒலிக்கும்; பரம் -மேன்மை ; தூம்பு  - பெருவங்கியம்

8. விளிப்பது பாடுவது; கவர்தல்  - தன்னிசையோடு உடன்படுத்தல்; தீம் - இனிய; துதைஇநெருங்கி

9. அரி- தவளை; தட்டைதட்டைப் பறை

10. கவர்பு -கைக்கொண்டு; எல்லரிஒருவகைப் பறை

11. பாணிகாலம்; நொடிதரு பாணியகால அளவைச் சொல்லும் தாளத்தையுடைய ; பதலைஒருகண் பறை

12. கார் - கார்காலம் ; பலவின் - பலாவின்; துணர் - கொத்து; கடுப்பபோல

13. நேர் சீர்  - சமமான எடை ; காய காய்களைக்கொண்ட; கலப்பை இசிக்கருவிகளை வைக்கும் பை

பதவுரை:

1. திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் - வளமையை உண்டாக்கும் மழையைப் பொழிந்த இருண்ட நிறத்தையுடைய வானத்தில்

2. விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து - விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப்போல், பண்கள் அமைத்து

3. திண் வார் விசித்த முழவொடு ஆகுளி - உறுதியான வாரால் இறுகக் கட்டிய மத்தளத்துடன், சிறுபறையும்,

4. நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில் - நன்றாக உருக்கப்பட்டு ஒளிர்கின்ற தகடாகத் தட்டப்பட்ட கஞ்சதாளமும்,

5. மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு - மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து கட்டப்பட்ட கொம்பு வாத்தியமும் சேர்த்து,        

6. கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின் - துளைகள் இடையிடையே விடப்பட்ட, யானையின் துதிக்கை போன்ற குழலமைப்புக்கொண்ட,

7. இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு - இளியென்னும் பண்ணின் ஓசையைத் தானொலிக்கும் குறுகிய பாரமான நெடுவங்கியத்துடன்

8. விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ - பாடுவதைச் சுருதி குன்றாமல் கைக்கொள்ளும் இனிய வேய்ங்குழலும் நெருக்கமாகச் சேர்க்கப்பட்டு,

9. நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை - தாளத்திற்கு  நடுவே நின்று ஒலிக்கும்,  தவளையின் குரலையுடைய தட்டைப் பறையும்

10. கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி -விளக்கத்தையுடைய தாளத்துடன் ஒலிக்கும் எல்லரி

11. நொடி தரு பாணிய பதலையும் பிறவும் - காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்,

12. கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப - கார்காலத்தே கொள்ளப்படும் பலாவின் காய்களைக்கொண்ட கொத்தைப் போல

13.நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் - சமமான எடையாகக் கட்டி (பைகளில் இட்டு வாயின் சுருக்கை)இறுக்கித் தோளின்(இருபுறமும்) தொங்கவிட்ட பைகளை உடையவராய்

 

கருத்துரை:

வளமையை உண்டாக்கும் மழையைப் பொழிந்த இருண்ட நிறத்தையுடைய வானத்தில் விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப்போல் ஒலிக்கும் மத்தளம் வலித்து இறுக்கிக் கட்டிய வார்க்கட்டுடையது.  கஞ்சதாளம் வெண்கலத்தை உருக்கித் தகடாகத் தட்டிச் செய்யப்பட்டது. கொம்பு வாத்தியம் மயிலிறகும் தழையும் கட்டப்பெற்றது. நெடுவங்கியம் யானையின் தும்பிக்கைபோல் துளைகள் உள்ளது. தூம்பு இளி என்னும் நரம்பின் ஓசையைத் தன்னிடத்தே தோற்றுவிக்கும் இயல்புடையது. குழல் பாட்டின் சுருதி குன்றாமல் மேற்கொண்டு நிற்கும். தட்டைப் பறை தவளையின்  குரலை உடையது. எல்லரி தாளத்திற்கேற்ப ஒலிக்கும். பதலை முரசு தாளத்தைச் சொல்லும் மாத்திரையை உடையது. இவற்றோடு சிறுபறையையும் வேறுபல வாத்தியங்களையும்  பைகளில் இட்டுச் சுருக்கிக் கட்டப்பட்டு, பலாக்காய்க் கொத்துகள் போன்ற தோற்றத்தை உடையனவாக இருக்கும். அவ்வாறு கட்டப்பட்ட வாத்தியங்களைக் காவடிபோல் கூத்தர்கள் தம் தோளில் சுமந்து செல்வர்.

 


 

கூத்தர்கள் கடந்துவந்த மலைவழியின் இயல்பு

கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் 

படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின்             15 

         

எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி

தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்

இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்

அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது

இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி               20        

அருஞ்சொற்பொருள்:

14. கடு மரம்கடுக்காய் மரம்; கலித்து மிகுந்து; கண் அகன் இடம் அகன்ற; சிலம்பு பக்க மலை

15. மருங்குபக்கம்

16. அன்ன போல

17. வாளி - அம்பு; துணை புணர் -துணைவியரோடு சேர்ந்து; கானவர்குறவர்

18. இயங்குநர் - போவோர்; இயக்கும்போகச்செய்யும்

19. அடுக்கல் - மலை; மீமிசை -உச்சி ; அருப்பம் - அருமை; பேணாதுஇலட்சியம் பண்ணாமல் (பெரிதாகக் கருதாமல்)

20. சுரம் -அரிய வழி ; நிவப்பு -உயரம்; இயவு -வழி

பதவுரை:

14. கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் - கடுக்காய் மரம் மிகுதியாக வளர்ந்த இடம் பெரிதான மலைச்சரிவில்

15. படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின்படுக்க வைத்தாற் போன்ற பாறைகளின் பக்கத்தே

16. எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி -(கீழே கிடப்பதை)எடுத்து நிறுத்திவைத்ததைப் போன்ற குறுகலான (ஏறுதற்குக்)கடினமான சிறிய வழியை

17. தொடுத்த வாளியர் துணை புணர் கானவர் - தொடுக்கப்பட்ட அம்பினை உடையவராய்த் தம் துணைவியரோடே சேர்ந்திருக்கும் கானவர்

18. இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் - இடற்பாடு செய்யாமல், வழிப்போக்கர்களைப் போகச்செய்யும்

19. அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது - மலையுச்சியில், நடந்துபோவதை அரிய செயல் என்று  கருதாமல் 

20. இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி -  கல்லை இடித்த உயர்ந்த வழியில் உறுதியான நெஞ்சத்துடன் சென்று

கருத்துரை:

கடுக்காய் மரம் மிகுதியாக வளர்ந்த இடம் பெரிதான மலைச்சரிவில்,  படுக்க வைத்தாற் போன்ற பாறைகளின் பக்கத்தில் கீழே கிடக்கும் பாறைகளை எடுத்து நிறுத்திவைத்ததைப் போன்ற குறுகலான, ஏறுதற்குக் கடினமான சிறிய வழி உள்ளது. அந்த வழியில், தம் வில்லில் அம்பைத் தொடுத்து, கானவர் தமது மனைவியருடன் சேர்ந்திருப்பர். அவர்கள் இடற்பாடு செய்யாமல், வழிப்போக்கர்களைப் போகச்செய்வர். செல்லுதற்கரிய அரிய உயரமான வழியில், நீங்கள் அஞ்சாமல் மனவுறுதியுடன் செல்லுங்கள்.

 

பேரியாழின் இயல்பு

தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்

கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா

குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்

அரலை தீர உரீஇ வரகின்

குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ               25      

 

சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி

இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி

புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து

புதுவது போர்த்த பொன் போல் பச்சை

வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்                   30    

 

மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து

அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப

அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது

கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி

நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை             35      

      

களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்

வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ்

அருஞ்சொற்பொருள்:

21. தொடி - வளை; திரிவு - மாறுபாடு; தொண்டு ஒன்பது ; திவவு வார்க்கட்டு

22. கடிப்பகை வெண்கடுகு; கேள்விகேட்டல்

23. குரல் -ஒலி ; ஓர்த்து கூர்ந்து கேட்டு; சுகிர் புரிதல்யாழ் நரம்பினை வடித்து முறுக்குதல்

24. அரலை குற்றம்; உரீஇ -தீற்றி

25. குரல் - கதிர்; வார்ந்த நீணட; இரீஇஇருத்திய

26. சிலம்பு - மலை; பத்தல்பத்தர் (யாழின் ஓர் உறுப்பு)

27. இலங்கல் - விளங்கல்; செறியநிரம்ப, அடையுமாறு

28. புதுவது - புதிதாக; புனைந்த செய்த; வெண்கை யானையின் தந்தம்; யாப்புயாழ்ப் பத்தரில் குறுக்கே வலிவுறச் செய்யும்  கட்டு

29. பச்சைதோல்

30.வதுவை திருமணம்; ஐம்பால்ஐந்து பகுதியையுடைய மயிர்

31. மாண்ட -மாட்சிமையுடைய; நுடங்குதல்அசைதல்;எழில்அழகு; ஆகம்மார்பு

32. கடுப்ப போல

33. அகடு - நடு; சேர்பு சேர்தல்; திரியாதுமாறுபடாமல்

34. கவடு - பிரிவு; கவைஇய அணைத்து, சூழ்ந்து; வாங்குதல் - வளைதல்; உந்திகொப்பூழ்ச்சுழி

35. நுணங்கு - நுண்மை; நுவறிய அராவிய (அரத்தால் தேய்த்த); மாமைகரிய நிறம்

36. களங்கனி -களாப் பழம்; அன்ன - போல; கதழ்ந்து நெருங்கிய; கிளர் - ஒளி; உருவின்வடிவில்

37. வணர்ந்து -வளைந்து; ஏந்து -உயர்ந்த; மருப்பு தண்டு, யாழின் உறுப்பு

 

பதவுரை:

21. தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் -(கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது வார்க்கட்டினையும்

22. கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா - பேய்க்குப் பகையாகிய வெண்கடுகளவும்(சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு இல்லாதவாறு கட்டிய

23. குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின் - ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய வகிர்ந்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில்

24. அரலை தீர உரீஇ வரகின் குற்றம் தீரத் தீற்றி, வரகின்

25. குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ -       கதிர்(மணிகள்) ஒவ்வொன்றாக உதிர்ந்ததைப்போல நுண்ணிய துளைகளை இட்டு

26. சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி - ஒலியை எதிரொலித்துப் பெரிதாக்கும் தன்மை அமைந்த (கூடு போன்ற)பத்தலினைப் பசையினால் சேர்த்து,

27. இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி - மின்னுகின்ற துளைகள் முற்றிலும் அடையுமாறு ஆணிகளை இறுகப் பதித்து,

28. புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து புதிதாக யானையின் கொம்பால் செய்த யாப்பை அமைத்து

29. புதுவது போர்த்த பொன் போல் பச்சை - புதியதாகப் போர்த்திய பொன்னின் நிறம் போன்ற நிறத்தையுடைய தோல்போர்வையை உடையதாய்;

30. வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்  -   மணமாலை (இன்னும்)மணக்கும்(புதுமணம் மாறாத), வண்டுகள் மொய்க்கும், மணம்வீசும் ஐந்து பகுதிகளாக உள்ள கூந்தலையுடைய  

31. மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து - இளம்பெண்ணின் அழகுநிறைந்த, மெல்லிதாக அசையும் அழகிய மார்பகத்தே

32. அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப - சென்று முடிவுறும் மயிர் முறைமையோடு அமைந்திருக்கும் அழகிய வயிற்றை ஒப்ப,

33. அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது - (இரண்டு ஓரங்களையும் இணைத்து)நடுவினில் சேர்வதுபோல் சீராக அமைத்து, தனக்குரிய அளவினில் மாறாது,

34. கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி - இரண்டாகப் பிரிவுபட்டு உள்ளிருத்தப்பட்ட நீண்டு வளைந்த கொப்பூழ்ச்சுழியையும்;

35. நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை -     நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், கரிய நிறத்தில்                  

36. களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் - களாப்பழத்தை ஒத்த, நெருங்கிய ஒளியுடைய வடிவில்,

37. வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் - வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பேரியாழ் என்ற பெரிய யாழை

கருத்துரை:

பேரியாழ் பெண்கள் கையில் அணியும் வளையல் போன்று ஒன்பது வார்க்கட்டுகளை உடையது. அதன் நரம்புகள் வெண்சிறுகடுகளவேனும் அவிழாதபடி உருவி ஓசை ஓர்ந்து பார்த்துக் கட்டப்பட்டவை. ஒலித்தல் அமைந்த பத்தல் வரகின் கதிர் ஒழிகின தன்மைபோல நுண்ணிய துளைகள் செய்து, துளைகள் நிரம்பும்படி ஆணிகள் இறுகத்தைத்து யானைக்கொம்பாற் புதிதாகச் செய்த யாப்பு அமைக்கப்பட்டிருக்கும். பிசினோடு சேர்ந்த  தோலாலாகிய போர்வை பொன்னிறமுடையது. பேரியாழ், போர்வைத்  தோலிற்கும் யாப்பு என்னும் உறுப்புக்கும்  இடயே அமைந்த உந்தி என்னும் உறுப்பைக் கொண்டது. அதன் வளைந்து ஏந்திய தண்டு களாப்பழத்தின் நிறமுடையது. இத்தகைய உறுப்புகளைக் கொண்டது பேரியாழ்.

 

பாணரும் விறலியும் சூழ இருந்து கூத்தர்

தலைவனை அழைத்தல்

 

அமைவர பண்ணி அருள் நெறி திரியாது

இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப

துறை பல முற்றிய பை தீர் பாணரொடு                  40

 

உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின்

மதம் தபு ஞமலி நாவின் அன்ன

துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி

கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ

விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து        45

 

இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற

கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல்

புனல் கால்கழீஇய மணல் வார் புறவில்

புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி

கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ                  50

அருஞ்சொற்பொருள்:

38. அமைவர -  பொருத்தமாக, ஏற்றதாக

39. வேத்தவை வேந்தனின் அவை (அரசவை); ஏற்பஏற்றுக்கொள்ளும் வகையில்

40. முற்றிய முதிர்ந்த; பைஇளமை

42. மதம் - வலிமை; தபுதல் கெடுதல், அழிதல்; ஞமலிநாய்

43. துளங்குதல் - வருந்துதல்; இயல் - தன்மை; பொருதல் முட்டுதல் (குத்துதல்); சீறடிசிறிய அடி

44. கணம் கூட்டம்; கதுப்பு -கூந்தல்; இகுதல் தாழ்ந்து விழுதல்; அசைஇதளர்ந்து

45. விலங்கு -மான்; மலைத்து மாறுபட்டு; அமர்ந்த பொருந்திய; சே - சிவப்பு; அரி - கண்வரி; நாட்டம்கண்

46. இலங்குதல்விளங்குதல்

47. கயம் -குளம; பயம் - பயன்

48. புனல் - நீர்; கழீஇயநீக்கிய; மணல் வார் புறவுமணல்பரப்பு நீண்டு கிடக்கும் முல்லை நிலம்

49. புலம்பு -வருத்தம்; புனிறு -ஈன்றணிமை ; காட்சிதோற்றம்

50. கலம் அனிகலன்; கண்ணுளர் - கூத்தர்; ஒக்கல்சுற்றம்

பதவுரை:

38. அமைவர பண்ணி அருள் நெறி திரியாது -பொருத்தமாகச் செய்து, சொல்லப்பட்ட நெறிகளிலிருந்து மாறுபடாமல்,

39. இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப - இசை கேட்கும் சிறப்புடைய அரசவை(யிலுள்ளோர்) ஏற்றுக்கொள்ளும் வகையில்

40. துறை பல முற்றிய பை தீர் பாணரொடு   -  தங்கள் இசைத் துறையில் பெரும் திறமையுடைய அனுபவமிக்க பணர்களோடு

41. உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் - உயர்ந்தோங்கிய பெரிய மலை வழியில் எவ்வித இடையூறும் இன்றி ஏறிவந்ததால்,

42. மதம் தபு ஞமலி நாவின் அன்ன - வலிமை குன்றிய நாயின் நாவைப் போன்றதும்,

43. துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி சோர்வடைந்ததால் தளர்வுற்றதும், கற்களை மிதித்து நடந்ததுமான சிறிய பாதங்களையும்,

44. கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ - கூட்டமாய் இருக்கும் மயில்கள் தங்கள் தோகையைத் தாழ்த்தியதைப்போல் தொங்கும் கூந்தல் அசைந்து,

45. விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து - மான் கண்ணோடு உருவத்தால் ஒத்தும், நோக்கால் மாறுபட்டும், சிவந்த வரியையுடைய கண்களையும்,   

46. இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற - ஒளிர்கின்ற வளையல்களையும் கொண்ட விறலியர் உமக்குப் பின்னால் சூழ்ந்துவர

47. கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் - குளத்தில் மூழ்கியதைப் போன்ற பயனைத் தருகின்ற குளிர்ந்த நிழலில்

48. புனல் கால்கழீஇய மணல் வார் புறவில் - வெள்ள நீர் தூய்மைப்படுத்திய மணல்பரப்பு ஆங்காங்கே நீண்டுகிடக்கும் முல்லைநிலத்தில்

49. புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி நடந்துவந்த வருத்தத்தைக் கைவிட்டு அமர்ந்திருந்த புதுமைப்பொலிவு இல்லாத தளர்ந்த தோற்றத்தையுடைய,

50. கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ - அணிகலன்களைப் பெறும் கூத்தர் குடும்பத்திற்குத் தலைவனே,    

கருத்துரை:

கூத்தர் குடும்பத்தின் தலைவனே! நீ பேரியாழைப் பயன்படுத்தி, இசை நூலோர் வகுத்த நெறியிலிருந்து பிறழாமல், அரசர்களின் அவைக்கேற்பப் பாடும் அனுபவம் மிக்க பாணர்களுடன் வந்திருக்கிறாய். உன்னோடு விறலியரும் வந்திருக்கிறார்கள். உயர்ந்து ஓங்கிய மலைப்பாதையில் ஏறி வந்தபொழுது, அந்த விறலியரின் பாதங்களை அங்குள்ள கற்கள் வருத்தியதால், அவர்கள் பாதங்கள் ஓடியிளைத்துத் தளர்ந்த நாயின் நாக்கைப்போல் உள்ளன. அவர்களின் தாழ்ந்து தொங்கும் கூந்தல் அசைவது, மயிலின் தோகை அசைவதைப்போல் உள்ளது. அவர்களின் கண்கள் மானின் கண்ணோடு உருவத்தால் ஒத்தும், நோக்கால் மாறுபட்டும், சிவந்த வரிகளையுடையனவாகவும் உள்ளன. அவர்கள் ஒளிபொருந்திய வளையல்களை அணிந்திருக்கிறார்கள்.  மலைப்பாதையில் நடந்துவந்தபொழுது ஏற்பட்ட துன்பம் நீங்கி  இப்போழுது அவர்கள் தளர்ச்சியோடு இருப்பது, பிள்ளைப்பேற்றின்பொழுது துன்புற்ற ஒருபெண் அத்துன்பம் நீங்கித் தளர்ச்சியோடு இருப்பதுபோல் உள்ளது. குளத்தில் குளிக்காமலேயே குளிப்பதுபோல் மகிழ்ச்சி அளிக்கும் நிழலில் நீங்கள் அனைவரும் தங்கி இளைப்பாறுகிறீர்கள்.

நன்னனிடம் சென்றால் நல்ல பயன் பெறுவீர்கள்

 

 தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்

மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு

யாம் அவணின்றும் வருதும் நீயிரும்

கனி பொழி கானம் கிளையொடு உணீஇய

துனை பறை நிவக்கும் புள் இனம் மான                55

 

புனை தார் பொலிந்த வண்டு படு மார்பின்

வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள்

மலர் போல் மழை கண் மங்கையர் கணவன்

முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின்

இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு            60

 

புது நிறை வந்த புனல் அம் சாயல்

மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி

வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண்

நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு

உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த          65

 

புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின்

 

அருஞ்சொற்பொருள்:

51. தூ - தூய; துவன்றிய நெருங்கிய; நிவப்பு உயரம்

52. மீமிசைமேலிடத்தில்

53. அவண்அவ்விடம்

54. உணீஇயஉண்ணுதற்கு

55. நிவக்கும் - உயர்த்தும்; மானபோல

56. புனைதல் - அலங்கரித்தல்; தார்மாலை

57. வனைதல் ஓவியம் எழுதுதல்; புனைதல் - அலங்கரித்தல்; எழில் - அழகு; வாங்கு - வளைந்த; திரள்திரட்சி

58. மழைக்கண்குளிர்ச்சியான கண்

59. துப்புவலிமை

60. நுவல்தல் சொல்லுதல், புகழ்ந்து கூறுதல்; நசைவிருப்பம்

61. புனல் -நீர்; சாயல்அழகு, மென்மை

62. ஓரா ஆராயாத; சூழ்ச்சிஆலோசனை

63. நவில்தல் கூறுதல் ; தடக்கைபெரிய கை; மேவருதல் பொருத்தமாதல்; பூண்அணி

64. சேய் - மகன்

65. எதிர்ந்தஎதிர்கொள்ளுதல்

66. புள்ளினிர் பறவையால் நல்ல சகுனம் பெற்றவர்; மன்றஉறுதியாக

பதவுரை:

51. தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் - தூய பூக்கள் அடர்ந்துகிடக்கும் கரையை இடிக்கின்ற அளவுக்கு உயர்ச்சியுடைய

52. மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு - பெரும் பெருக்குள்ள நல்ல ஆறு கடலில் விரிந்து பரவியதைப்போல்

53. யாம் அவணின்றும் வருதும் நீயிரும் - நாங்கள் அவ்விடத்திலிருந்து வருகின்றோம்; நீங்களும்,

54. கனி பொழி கானம் கிளையொடு உணீஇய பழங்களைச் சொரியும்  காட்டை நோக்கி (அப்பழங்களைத்) தன் சுற்றத்தோடு தின்னுவதற்கு,

55. துனை பறை நிவக்கும் புள் இனம் மான - விரைவாக(த் தம்) சிறகுகளை உயர்த்தும் பறவைக்கூட்டம் போல,            

56. புனை தார் பொலிந்த வண்டு படு மார்பின் - அலங்காரமான மாலையால் அழகுபெற்ற, வண்டுகள் மொய்க்கும் மார்பினையுடைய,

57. வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள் ஒவியத்தால்  அலங்கரிக்கப்பட்ட அழகிய முலையையும் வளைந்த மூங்கிலைப் போன்ற திரண்ட தோளையும்

58. மலர் போல் மழை கண் மங்கையர் கணவன் - பூப் போன்ற குளிர்ச்சியான கண்களையும் உடைய பெண்களின் கணவனான;

59. முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் - பகைவர் நாட்டைப் பாழாக்கும், (பகைவர்)நெருங்க முடியாத வலிமையுடைய,

60. இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு -  பிறர் புகழைக் கூறுதல் என்னும் வலிமையால் அவர் தரும் பரிசை விரும்பும் ஏர்கொண்ட உழவர்க்கு (பரிசிலருக்கு)        

61. புது நிறை வந்த புனல் அம் சாயல் - புதுப் பெருக்காய் வந்த நீர்போல் அழகிய மென்மையும்

62. மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி - தன் அறிவிற்கு மாறாக நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடைய,

63. வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண் - வில்தொழில் பயின்ற பெரிய கையினையும், (தனக்குப்)பொருத்தமான சிறந்த அணிகலன்களையும் உடைய

64. நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு - நன்னன் மகனான நன்னனை நினைத்த உறுதிப்பாட்டுடன்

65. உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த -(அவனையே)நினைத்தவராக (அவனிடம்)சென்றடைந்தால், நல்லநேரத்தை எதிர்கொண்ட       

66. புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின் - பறவையால் தோன்றிய நல்ல சகுனம் பெற்றவர் ஆவீர், எம்மைச் சந்தித்ததால்

கருத்துரை:

மலையுச்சியில் உதிர்ந்த  நல்ல பூக்கள் செறிந்த ஆறு கடலை நோக்கிச் செல்வதுபோல் நாங்கள் நன்னனிடமிருந்து பரிசுகளைப் பெற்று வருகின்றோம். பழங்களைச் சொரியும் காட்டில் அவற்றை உண்பதற்குச் சுற்றத்தாருடன் விரைந்து பறக்கும் பறவைகளைப் போல் நன்னிடம் நீங்களும் செல்லுங்கள். அவன் அழகிய மாலையை அணிந்த மார்பினன்; ஓவியத்தால் அழகு செய்யப்பட்ட முலையையும், வளைந்த மூங்கிலைப் போன்ற திரண்ட தோள்களையும், மலர்போலும் குளிர்ச்சியை உடைய கண்களையும் உடைய மங்கையரின் கணவன்; பகைவர்களின் நிலத்தைப் பாழ்படச் செய்யும் வலிமை உடையவன். பிறர் புகழைக்  கூறுதல் என்னும் விதையை விதைத்து, அவர் தரும் பரிசை விரும்பும் பரிசிலர்க்கு, வெள்ளப் பெருக்கால் வந்த நீர்போலப் பரிசளிப்பான்.  அவன் தன் அறிவிற்கு மாறாகிய கேடுகளை நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடையவன்;  வில்தொழில் பயின்ற பெரிய கையினையும், சிறந்த அணிகலன்களையும் உடையவன். அவன் தரும் பரிசுகளை உறுதியாக விரும்பி அவனிடம் செல்வீராக. நீங்கள் புறப்பட்ட நேரம் நன்னிமித்தம் உடையதாக இருந்ததால் எம்மைச் சந்தித்தீர்கள்.

 

கூத்தன் நன்னனைப் பற்றிக் கூறுதல்

ஆற்றின் அளவும் அசையும் நல் புலமும்

வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும்

மலையும் சோலையும் மா புகல் கானமும்

தொலையா நல் இசை உலகமொடு நிற்ப            70

 

பலர் புறம்கண்டு அவர் அரும் கலம் தரீஇ

புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும்

இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு

அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு

தூ துளி பொழிந்த பொய்யா வானின்                     75

 

வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும்

நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து

வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை

சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி

நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்     80

 

நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல்

பேர் இசை நவிரம் மேஎய் உறையும்

காரி உண்டி கடவுளது இயற்கையும்

பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும்

ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும்                        85

 

இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்

நுகம் பட கடந்து நூழிலாட்டி

புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு

கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும்

இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு           90

 

திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின்

வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி

உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்

 

அருஞ்சொற்பொருள்:

67. புலம்இடம்

68. வீற்று வளம்பிற நாட்டில் இல்லாத செல்வம்;  வல்சி - உணவு

69. மா விலங்கு; கானம் - காடு

71. புறம்கண்டு -புறமுதுகு காட்டி ;  கலம் அணிகலன்;  தரீஇ தந்த

72. சுரத்தல் இடைவிடாது கொடுத்தல்; மாரி -மழை

73. பிணித்தல்சேர்த்துக் கட்டுதல், தன்வசமாக்குதல்

74. அமரா அமைதி இல்லாத;  நோக்கம் - பார்வை

75. தூதூய

76. வீயாது நீங்காது, மாறாது; சுரக்கும் - இடைவிடாது கொடுக்கும்

77. குழீஇய - கூடியிருக்கும்; நவிலுதல் பயிலுதல், பழகுதல்

80. இயக்கும் - நடத்தும்

81. பனிக்கும் நடுக்கும், வருத்தும் ;  அஞ்சுவரு கடும் திறல் அச்சம் தரும் பெரும் வலிமை

82. நவிரம் நன்னனின் மலை; மேஎய் -பொருந்தி; உறையும் - தங்கும்

83. காரி - நஞ்சு

84. செய்யா -செய்து; எழுதரும்எழும்

85. அன்ன -போல; வசைகுற்றம்

86. இகத்தல் - நீங்குதல் ; தேஎம் - நாடு

87. நுகம்  -நுகத்தடி ; நூழிலாட்டுதல் கொன்று குவித்தல்

88. புரை - உயர்வு;  தோல்யானை; வரைப்பு கோட்டை மதில்

89. இறுத்த - ஆற்றிய; தொல்லோர் - மூத்தோர்

90. இவர்தல் உலாவுதல்

91. திரை - அலை;  குழிந்த - ஆழமான

92. வரை - மலை; புரை - ஒத்த;  நிவப்பு - உயரம்; வான் தோய்வானத்தைத் தொடும் ; இஞ்சி -மதில்

93. உரை புகழ்; வெறுத்தசெறிந்த; மாலை இயல்பு

பதவுரை:

67. ஆற்றின் அளவும் அசையும் நல் புலமும் -செல்லும் பாதையின் தன்மையையும், தங்குவதற்கான நல்ல இடங்களையும்,

68. வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும் - பிற நாடுகளில் இல்லாத செல்வத்தை மாறாது கொடுக்கும் அவன் நாட்டில் விளைகின்ற உணவும்

69. மலையும் சோலையும் மா புகல் கானமும் - மலைகளையும், பொழில்களையும், விலங்குகள் அடைந்திருக்கும் காடுகளையும்,

70. தொலையா நல் இசை உலகமொடு நிற்ப - குறையாத  நல்ல புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்கும்படியாக,                            

71. பலர் புறம்கண்டு அவர் அரும் கலம் தரீஇ -பகைவர் பலரையும் தோற்கடித்து, அவரது அரிய அணிகலன்களைக் கொண்டுவந்து

72. புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும் - புலவர்க்கு வழங்கும் அவன் கொடைமழையையும்

73. இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு - இகழுவோரைத் தன்வயப்படுத்தும் ஆற்றலும், புகழுபவர்க்கு

74. அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு - தன் ஆட்சி முழுதையும் கொடுத்தாலும் மனநிறைவடையாத எண்ணத்துடன்

75. தூ துளி பொழிந்த பொய்யா வானின் - தூய்மையான துளிகளை மிகுதியாகப் பெய்கின்ற பருவம் தவறாத வானத்தைப் போன்று, 

76. வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும்இடைவிடாமல்  கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேரத்தில் அரசு வீற்றிருக்கும் அவை),

77. நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து - நல்லோர் கூடி  நாவால் (சிறந்தவற்றை)உரைக்கும் அவையில்

78. வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை –(சொல்)வன்மையில்லாதவர் எனினும் அவர் குறைகளை மறைத்து, தம்மிடம் வந்தவர்களை,

79. சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி -தம் பொருளைச் சொல்லிக் காட்டி, சோர்வடையாமல் விளக்கி,

80. நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் -   நன்றாக நடத்தும் அவனுடைய சுற்றத்தாரின் ஒழுக்கமும்,

81. நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் - நீர் (சூழ்ந்த)இவ்வுலகம் நடுங்கும்படி அச்சம் தரும் கடுமையான  வலிமையுடைய,

82. பேர் இசை நவிரம் மேஎய் உறையும் - பெரும் புகழ்கொண்ட நவிரம் என்னும் மலையில் நிலைகொண்டு வாழுகின்ற,

83. காரி உண்டி கடவுளது இயற்கையும் - நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்,

84. பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும் - பரந்துகிடக்கும் இருள் நீங்கும்படி பகற்பொழுதைச் செய்து உதிக்கும்

85. ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும்  -  ஞாயிற்றைப் போன்ற அவனது பழிச்சொல் அற்ற மேன்மையையும்,                            

86. இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் - வெகுதூரத்தில் இருந்தாலும், பகைவர் நாட்டின்

87. நுகம் பட கடந்து நூழிலாட்டி -(வண்டிக்கு நுகத்தடி போன்ற)முன்னணிப்படையை வலிமையுடன் வென்று கொன்று குவித்து,

88. புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்குஉயர்ச்சியுடைய யானைகள் இருக்கும் இடத்தில் வேற்போரில் திறமையுடைய அறிவுடையோர்க்கு

89. கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும் - கொடை என்னும் தம் கடமையை ஆற்றிய அவனது மூத்தோர் வரலாற்றையும்,

90. இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு - இரையைத் தேடித் திரியும்  வளைந்த காலையுடைய முதலைகளுடன், 

91. திரை பட குழிந்த கல் அகழ் கிடங்கின் - அலைகள் உண்டாகும் அளவிற்கு ஆழமான, பாறைகளைத் தோண்டி அமைத்த பள்ளத்தையும்

92. வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி - மலையை ஒத்த உயர்ச்சியோடு வானைத் தொடும் மதிலினையுமுடைய,

93. உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் - புகழ் (எங்கும்)சென்று மிகுகின்ற அவனுடைய மூதூரின் இயல்பினையும்,

கருத்துரை:

நன்னனை அடைவதற்குச் செல்லும் வழியின் தன்மையையும், தங்குவதற்கான நல்ல இடங்களையும், பிற நாடுகளில் இல்லாத செல்வத்தைத் தவறாது கொடுக்கும் அவன் நாட்டில் விளையும் உணவுகளையும், அவன் நாட்டில் உள்ள மலைகளின் தன்மையையும், சோலைகளின் தன்மையையும், விலங்குகள் விரும்பித் திரியும் காட்டின் தன்மையையும் நான் கூறுவேன்.   பகைவர்களைப் புறமுதுகிட்டு ஓடச்செய்து அவர்களுடைய அரிய அணிகலங்களைக் கொண்டுவந்து புலவர்களுக்கு வழங்கும் நன்னனின் மழைபோன்ற வள்ளன்மையைப் பற்றிக் கூறுவேன். அவன் தன் அரசவையிலிருந்து, தன்னை இகழ்வோரைத் தன்வயப்படுத்தும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும், தன்னைப் புகழ்பவர்க்கு தன் ஆட்சி முழுவதையும் கொடுத்தாலும் மனநிறைவடையாத அவனுடைய எண்ணத்தைப் பற்றியும் சொல்வேன். அவனுடைய அவையில், தாம் கற்றவற்றைச் சொல்லும் ஆற்றல் உடையவர்கள் இருப்பாரகள். அந்த அவையில், தாம் கற்றவற்றைக் கூறும் திறமை இல்லாதவர்கள் இருந்தால், அவர்களின் திறமையின்மையை மறைத்து, தாம் பொருளைச் சோர்வில்லாமல் சொல்லிக் காட்டி எல்லோரும் ஏற்றுக்கொளும்படி செய்யும் அவனுடைய சுற்றத்தாரின்  செயலைப் பற்றியும் கூறுவேன்.

 

கடல் சூழ்ந்த இவ்வுலகம் நடுங்கும்படி அச்சம் தோன்றும் கடுமையான வலிமையுடைய பெரும் புகழுடைய நவிரம் என்னும் நன்னனின்  மலையில் நஞ்சை உண்ட சிவபெருமான் இருப்பான்.  பரந்த இருளை நீக்கிப்  பகற்பொழுதைத் தோற்றுவிக்கும் கதிரவனைப்போல் தனது பகைவர்களை அழிப்பவன் நன்னன்.   அவனுடைய குற்றமில்லாத சிறப்பையும்பகைவர் நாடு தொலைவில் இருந்தாலும், அங்குச் சென்று பகைவரின் தூசிப்படையை வலிமையுடன் வென்றுக் கொன்று,  யானைப்படையை வேற்போரில் வென்ற திறமை மிக்க வீரர்களுக்கு நாடும் ஊரும்  வேறு சில பரிசுகளும் அளிப்பதைத் தன் கடமையாகக்கொண்ட நன்னனைத் தொன்றுதொட்டு மறக்குடியில் வந்த மறவர்கள் புகழ்வர். இரையைத் தேடித் திரியும் முதலைகள் உள்ள அகழியும் வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்த மதிலும் உடையது நன்னுடைய ஊர்.  இவற்றைப் பற்றியெல்லாம் நான் கூற, நீ கேட்பாயாக!


 

வழியின் நன்மையைப் பற்றிக் கூறுதல்

 

கேள் இனி வேளை நீ முன்னிய திசையே

மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்                   95

 

புதுவது வந்தன்று இது அதன் பண்பே

வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது

இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய

பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து

அகல் இரு விசும்பின் ஆஅல் போல                       100

 

வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை

நீலத்து அன்ன விதை புன மருங்கில்

மகுளி பாயாது மலி துளி தழாலின்

அகளத்து அன்ன நிறை சுனை புறவின்

கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்                    105

 

நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள்

பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப

கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல்

விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவிதொறும்

குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை        110

 

மேதி அன்ன கல் பிறங்கு இயவின்

வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி

இரும்பு கவர்வுற்றன பெரும் புன வரகே

பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு

வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல்       115

 

வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்ன

கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி

குறை அறை வாரா நிவப்பின் அறையுற்று

ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே

புயல் புனிறு போகிய பூ மலி புறவின்                     120

 

அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை

தொய்யாது வித்திய துளர் படு துடவை

ஐயவி அமன்ற வெண் கால் செறுவில்

மை என விரிந்தன நீள் நறு நெய்தல்

செய்யா பாவை வளர்ந்து கவின் முற்றி                  125

 

காயம் கொண்டன இஞ்சி மா இருந்து

வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்

விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை

காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என

ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய                130

 

 

 

துறுகல் சுற்றிய சோலை வாழை

இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு

ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை

காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின்

காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல்                     135

 

மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை

நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து

உண்ணுநர் தடுத்தன தேமா புண் அரிந்து

அரலை உக்கன நெடும் தாள் ஆசினி

விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப                     140

 

குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து

கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி

சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி

முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே

 

அருஞ்சொற்பொருள்:

94. வேள் வேளிர் குலத்தவன் (இந்தச் சொல் நன்னனைக் குறிக்கிறது); முன்னுதல் கருதுதல்; திசை வழிக்கு ஆகுபெயர்

95. பழுநுதல் நிறைதல், முதிர்தல், முற்றுப் பெருதல்;  வைப்பு ஊர்

97. வசிவு பிளத்தலால் உண்டாகும் வடு; ஆனாது இடைவிடாது

98. பெட்டாங்கு விரும்பியபடி

99. பெயல் - மழை; வைகுதல் - தங்குதல் ; வியன் -அகன்ற; இரும் - பெரிய; புனம் கொல்லை

100. அகல் - அகன்ற; இரு - பெரிய; விசும்பு வானம்; ஆஅல்  கார்த்திகை விண்மீன்

101. வால் - வெண்மை

102. நீலத்து -நீலமணியின் நிறத்தையுடைய ; மருங்கு பக்கம்

103. மகுளி எள்ளில் தோன்றும் நோய்; மலிதல் மிகுதல்; துளி -மழைத்துளி ; தழால் தழுவுவதால்

104. அகளம் -நீருள்ள பானை ; சுனை குளம்; புறவு காடு

105. கௌவை -எள்ளிளங்காய் ; பிடி - கைப்பிடி ; ஏழ் ஏழு

106. ஈர் பசுமை

107. கயமுனி  - யானைக்கன்று; முயங்குதல் தழுவுதல்; கடுப்ப போல

108. குலவு -வளைவு ; குரல் கதிர், ஒன்றோடொன்றுக்குள்ள சேர்க்கை; ஏனல் -தினை

109. பிதிர்தல் -உதிர்தல், சிதறுதல் ; வீ - மலர்; உக்கு உதிரச் செய்து; இருவி தினை அரிந்த தாள்

110.குளிர் அரிவாள்;  புரை போன்ற ; கொடும் - வளைந்த

111. மேதி - எருமை ; பிறங்குதல் -நிரைதல், மிகுதல் ; இயவு வழி

112. வாதி வாக்குவாதம் செய்பவன்; கவை பிளவு; இறைஞ்சி முற்றியதால் வளைந்து

113. கவர் இரண்டாகப் பிரிகை ; பெரும் புன வரகு பெரிய புனத்தில் உள்ள வரகு

114. வார்பு நெல்மணி முதலியன பால் கட்டுதல் ; கெழீஇ - முற்றி; போழ்தல் பிளத்தல்

115. வால் - வெண்மை; ஐவனம் -மலைநெல் (ஒருவகை நெல்)

116. ஈண்டு -  தொழுதி, கூட்டம் (படை) ; இரிவுற்று - கெட்டு

117. கால் காற்று;  துவைப்பின்- ஒலித்ததால்; கனைத்துஒலித்து; இறைஞ்சிகவிழ்ந்து

118. அறையுற்றுவெட்டப்பட்டு; நிவப்பு உயரம்;

119. அலமருதல்சுழலுதல்

120. புனிறு - ஈன்றணிமை; மலிதல்மிகுதல்

121.  பொதிமூங்கில்; தோரைமூங்கில் அரிசி

122. தொய்யாது உழாது; வித்தியவிதைத்த; துளர் -களைக்கொட்டு; துடவைதோட்டம்

123. ஐயவி வெண்சிறுகடுகு; அமன்ற நெருங்கின ; கால் காற்று; செறுவயல்

124. மைகருமை

125. செய்யாப் பாவை - யாராலும் பண்ணப்படாத பாவை (செய்யாப் பாவை இஞ்சிக் கிழங்கிற்கு உவமம்); கவின்அழகு

126. காயம் காரம்

127. வயவு - வலிமை; பிடிபெண் யானை

128. விழுமிய சிறந்த; கவலைகவலைக் கிழங்கு

129. காழ் - காம்பு; மண்டுதல்விரைந்து செல்லுதல்; எஃகம்வேல்

130. ஊழ் -முறை; முகை - அரும்பு; தோய்தல்தீண்டுதல்

131. துறுகல்பாறை

132. இறுகு -இறுக்கமான; முறுகுதல் முதிர்தல்; பயம் -பயன் ; புக்குசென்று

133. ஊழுற்று முற்றுதலுற்று; அலமருதல் - அசைதல்; உந்தூழ்மூங்கில்

135. கால்காற்று

136. ஒழுகின - படர்ந்த; உயவைஉயவைகொடி

137. நூறொடு - மாவோடு; குழீஇயன திரணட ; கூவைகூவைக் கிழங்கு

138. தேமா -இனிய மாமரம்; அரிந்துவெடித்து

139. அரலை - விதை; உக்கென உதிர்ந்த; ஆசினிஆசினிப் பலா (Bread Fruit)

140. ஆகுளி - சிறுபறை; கடுப்பஒத்த

141. குடிஞை பேராந்த; இரட்டுதல் - ஒலித்தல்; அடுக்கம் மலைச் சாரல்

142. கார்கார்காலம்; எதிரிஏற்று

143. சுரம் -வழி ;கோடியர் - கூத்தர்; முழவு - மத்தளம்

144. முரஞ்சுதல் -முற்றுதல் ; இறைஞ்சின  - தாழ்ந்த; அலங்குதல் - அசைதல்; சினை -கிளை

பதவுரை:

94. கேள் இனி வேளை நீ முன்னிய திசையே - கேட்பாயாகஇப்பொழுது, நீ வேளிர் குலத்தைச் சார்ந்த நன்னனை  நினைத்துச் செல்கின்ற திசைதான்,

95. மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின் மிகுந்த செல்வம் நிறைந்த  புதுவருவாயையுடைய ஊர்களுள்      

96. புதுவது வந்தன்று இது அதன் பண்பே -(என்றும்)புதியதாகவே இருக்கும் தன்மை வந்தது, இது அத்திசையின் பண்பு;

97. வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது - மேகம் பிளந்து மின்னலாகிய வடுவுடன் மழை பொழிய, குறைவில்லாமல்

98. இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய - விதைத்தவை எல்லாம் விரும்பியவாறே விளைய,

99. பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து - மழையோடு (எப்போதும்)நிலைகொண்ட அகன்ற இடமாகிய பெரிய கொல்லை நிலத்தில்,

100. அகல் இரு விசும்பின் ஆஅல் போல - அகன்ற இருண்ட வானத்தின் கார்த்திகை என்னும் விண்மீன் போல,                      

101. வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை - வெண்மையாக மலர்ந்தன மிக மெல்லிய கொடியை உடைய முசுட்டை;

102. நீலத்து அன்ன விதை புன மருங்கில் - நீல மணிகள் போன்ற விதைகள் விதைக்கப்பட்ட கொல்லையின்  பக்கத்தில்

103. மகுளி பாயாது மலி துளி தழாலின் மகுளியென்னும் நோய் பரவாமல், மிகுந்த மழைத் துளியைத் தழுவுவதால்,

104. அகளத்து அன்ன நிறை சுனை புறவின் - நீர் இறைக்கும் சாலைப் போன்று நிறைந்த சுனைகளையுடைய காட்டில்,

105. கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் இளந்தன்மை போன(முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்       

106. நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் - எண்ணெய் (உள்ளே)கொண்டிருக்கும்படி வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்;

107. பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப - பொய்ச் சண்டைபோடும் யானைக்கன்றுகளின் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த துதிக்கைக்களைப் போல,

108. கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் - கொய்யப்படும் பக்குவம் பெற்றன பிணைந்துகிடக்கும் கதிர்களையுடைய தினை;

109. விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவிதொறும் - முற்றிய தயிர் (கீழே விழுந்து ஏற்பட்ட)சிதறலைப்போல் பூக்கள் உதிர்ந்து, (கதிர்கொய்யப்பட்ட)அரிதாள்கள்தோறும்

110. குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை - அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன அவரை;           

111. மேதி அன்ன கல் பிறங்கு இயவின் - எருமையைப் போன்ற பாறைகள் மிகுந்திருக்கும் வழியில்,

 112. வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி - வாதிடுபவனின் கைகளைப் போன்று கிளைத்துப்பிரிந்த கதிர்கள் (முற்றியதால்) வளைந்து,

113. இரும்பு கவர்வுற்றன பெரும் புன வரகே -  அரிவாளால் அறுக்கப்பட்டப் பெரிய புனத்தில் உள்ள வரகுகள்

114. பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு - பால் கட்டி முற்றி, பலவாகப் பிரிந்த காற்று இடையே வீச

115. வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் - மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;

116. வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்ன - வேல்களோடு நெருக்கமாக வந்த (வேற்படையாகிய)கூட்டம் தோற்றோடியதைப் போன்று,

117. கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி - காற்று மிகவும் அடித்து மோதுகையினால், சாய்ந்து ஆரவாரமாக ஒலித்து, கவிழ்ந்து,

118. குறை அறை வாரா நிவப்பின் அறையுற்று - குறைந்து போகாத நல்ல வளர்ச்சியுடன், வெட்டப்பட்டு,

119. ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே - ஆலைக்காக (அறைபடுவதற்காக)வாடியிருக்கும் இனிய  கரும்பு;

120. புயல் புனிறு போகிய பூ மலி புறவின் - மழையால் கசடுகள் நீக்கப்பட்ட, பூக்கள் நிறைந்த காட்டில்,

121. அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை - அவல் இடிக்கும் பக்குவம் பெற்றன, அழகிய கொத்துக்கொத்தான மூங்கில்நெல்;

122. தொய்யாது வித்திய துளர் படு துடவை - உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்

123. ஐயவி அமன்ற வெண் கால் செறுவில் - வெண்சிறுகடுகு(ச் செடிகள்) நெருங்கி வளர்ந்தன; வெளுத்த(நெல்)அரிதாளையுடைய வயல்களில்,

124. மை என விரிந்தன நீள் நறு நெய்தல் - கருமையாக மலர்ந்து நீண்ட நறிய நெய்தல்;

125. செய்யா பாவை வளர்ந்து கவின் முற்றி - (கையால்) செய்யப்படாத (இயற்கையாக அமைந்த) பாவை(உருவில்) வளர்ந்து, அழகு மிகுந்து

126. காயம் கொண்டன இஞ்சி மா இருந்து - உறைப்புத்தன்மை கொண்டன, இஞ்சி; (முற்றி)மாவாகும் தன்மை பெற்று,

127. வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும் - வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,

128. விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை சிறப்பாக வளர்ந்தன செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;

129. காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என காம்போடுகூடிய வேல் (நுனிப்பாகம்)யானையின் முகத்தில் பாய்ந்தது எனும்படி,

130. ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய - முறைப்பட மலர்களை முகைகளின் உயர்ந்த முகங்கள் சென்று தீண்டும்படியாக,    

131. துறுகல் சுற்றிய சோலை வாழை - (பக்கத்திலுள்ள)பாறைகள் சூழ்ந்த தோட்டத்தின் வாழைமரங்களில்

132. இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு - இறுகிக்கிடக்கும் குலைகள் முதிர்ந்து பழுத்தன; பயன்தரும் நிலை அடைந்து

133. ஊழுற்று அலமரு உந்தூழ் அகல் அறை - முதிர்தலுற்று (காற்றுக்கு) ஆடின பெருமூங்கில்நெல்; அகன்ற பாறையின்மேல்,

134. காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் - (தம்)பருவத்தே அன்றியும் (எல்லாக் காலங்களிலும்)மரங்கள் பயனைக் கொடுத்தலால்,

135. காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் - காற்றால் உதிர்ந்தன, கரிய கனிகளான நாவல்பழங்கள்;                                         

136. மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை - (குடிப்பதற்கு)மாற்றுப்பொருளாக (நீர்)சொரிந்தன, காண்பவர்களின் வாயில் நீர் ஊறுவதற்குக் காரணமான ஊறுகின்ற நீரையுடைய உயவைக்கொடி

137. நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து - மாவுடன் முற்றித் திரண்ட கூவைக் கிழங்கு; சதைப்பற்றுடன் சாறு மிக்கு,

138. உண்ணுநர் தடுத்தன தேமா புண் அரிந்து -(மிக்க தித்திப்பினால் திகட்டலால்)உண்பவர்களை வேறு எங்கும் செல்லமுடியாதபடி  தடுத்தன, தேமாங்கனிகள்; (மேல்தோல்)புண்ணாகி வெடித்து,

139. அரலை உக்கன நெடும் தாள் ஆசினி - விதைகளை உதிர்த்தன, நெடிய அடிப்பகுதியையுடைய ஆசினிப்பலாப் பழங்கள்

140. விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப - விரல்கள் அழுந்தப்பதிந்து ஒலியெழுப்பும் முகப்பையுடைய சிறுபறையைப் போன்று,        

141. குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து - பேராந்தைகள் (சேவலும் பெட்டையும்)மாறி மாறி ஒலிக்கும்  நெடிய மலைச் சாரலில்,

142. கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி - அடிவாரத்திலும் உச்சியிலும், மழை வாய்க்கப்பெற்றமையால் அதனைப்பெற்று

143. சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி - வழியே செல்லும் கூத்தருடைய மத்தளங்களைப் போன்று தொங்கி,

144. முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - முதிர்வு கொண்டு தலை வணங்கின, (மேலும் கீழும்)அசைகின்ற கிளைகளிலுள்ள பலாப்பழங்கள்

கருத்துரை:

கேட்பாயாக! இப்பொழுது, நீ வேளிர் குலத்தைச் சார்ந்த நன்னனை  நினைத்துச் செல்கின்ற திசைதான், மிகுந்த செல்வம் நிறைந்த  புதுவருவாயையுடைய திசைகளுள் என்றும் புதியதாகவே இருக்கும் தன்மையுடையது. இது அந்த வழியில் உள்ள இடங்களின் பண்பு. விதைத்தவை எல்லாம் விளையவேண்டுமென்று அங்குள்ளவர்கள் விரும்பியவாறே விளையும்படி மேகம் மின்னி மழைபெய்யும். இருண்ட வானத்தில் மேகம் பிளந்து மின்னலாகிய வடுவுடன் மழைபெய்த கொல்லைநிலத்தில், கார்த்திகை விண்மீன்போல் புல்லிய கொடியையுடைய முசுண்டை வெள்ளையாக மலர்ந்திருக்கும். வயல்களில் முளைத்த பலகிளைகளையுடைய எள்ளுப் பயிர்கள் நீலமணிபோல் விளங்கும். நீர் நிறைந்த சுனைகளையுடைய காட்டில் மிகுதியாக மழைபெய்வதால், மகுளியென்னும் நோய் பரவாமல், முற்றிக் கருத்து நிறைந்த எண்ணெயுடைய எள்ளின் ஏழுகாய்கள் ஒரு பிடியில் அடங்கும்படி கொழுத்திருக்கும். விளையாட்டுக்காகப் போரிடும் யானைக் கன்றுகளின் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் துதிக்கைகளைப்போல் கதிர்களையுடைய தினைமுற்றி அறுக்கும் பருவத்தை அடைந்திருக்கும். தினை அரிந்த தாள்களில், அரிவாளின் வாயை ஒத்த காய்களைக்கொண்ட அவரையின் பூக்கள் தயிர்த்துளிகள்போல் உதிர்ந்து கிடக்கும். எருமை மாடுகள் படுத்துக் கிடப்பதுபோல் இருக்கும் பாறைகள் உள்ள வழியில், வாதிப்பவனின் இணைந்த கை விரல்களை ஒத்த  வரகின் தாள்களை அறுப்போர் அரிவாளால் அரிவர்.  ஐவனம் என்னும் நெல்லும் மிகுதியாக  விளைந்து முற்றி இருக்கும். வேற்படையுடைன்கூடிய வீரர்கள் விழுந்து கிடப்பதைப்போல் காற்றில் தலை சாய்ந்து கரும்புகள் வெட்டப்பட்டு ஆலைக்குச் செல்லும் நிலையில் இருக்கும். மழைபெய்த காட்டில், மூங்கில் நெல் அவல் இடிக்கும் பக்குவத்தில் முற்றி விளைந்திருக்கும். உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில் வெண்சிறுகடுகுச் செடிகள் நெருங்கி வளர்ந்திருக்கும். கரிய நிறமுடைய நெய்தல் பூக்கள், வயல்களில் நிறையப் பூத்திருக்கும். கையால் செய்யப்படாமல் இயற்கையாக அமைந்த பாவை உருவில் வளர்ந்த அழகு மிகுந்த இஞ்சி உறைப்பை உடையதாக இருக்கும்.  கொடிகள் செழித்துப் படர்ந்த கவலை, மாவுடைய கிழங்குகளை வீழ்த்தும். யானை முகத்தில் குத்தும் அங்குசம்போல், கூரிய முனை உடைய வாழைப் பூக்கள் மலைப் பக்கங்களைக் குத்தும். நெருங்கிய வாழைக் குலைகள் பழுத்திருக்கும். நெல் முற்றிய பெருமூங்கில்கள் அசைந்துகொண்டிருக்கும். நிலத்தின் வளத்தால், பருவகாலம் இல்லாத பொழுதும் மரங்கள் பயனைக் கொடுக்கும். காற்று அசைவதால் நாவல் மரங்கள் பழங்களைப் பாறையில் உதிர்க்கும். நீர்ப்பதமுடைய உயவைக் கொடியும் கூவைக் கிழங்கும் நிறைந்திருக்கும்.  அவை  உண்ணுவதற்கு வேறு எதையும் தேடிப் போகாதவாறு வழிப்போக்கர்களைத் தடுக்கும். தேமாங்கனிகள் மேல்தோல் வெடித்து விதைகளை உதிர்க்கும். பருத்த அடியையுடைய பலாமரங்களின் கனிகள் முற்றிப் பழுத்து, வெடித்து, அதன் சுளைகளும் கொட்டைகளும் எங்கும் சிதறிக் கிடக்கும்.  பேராந்தைப் பறவைகள் ஆணும் பெண்ணுமாக மாறிமாறி ஒலிக்கும். மலைச் சாரல்களில் மழை மிகுதியாகப் பெய்ததால், பலாமரத்தின் அசையும் கிளைகளில் உள்ள காய்கள், கூத்தர்கள் கொண்டுசெல்லும் மத்தளம்போல் மரக்கிளைகளில் தொங்கும்.

 

சிறப்புக் குறிப்பு:

மகுளி: இது  மழையினால் அல்லது பனியினால் பயிர்களுக்கு, குறிப்பாக தினைப் பயிர்களுக்கு ஏற்படும் காளான் அல்லது அழுகல் நோய். மலைப்பகுதிகளில் தூறல் மழை தொடர்ந்து பெய்வதால் பயிர்கள் மீது ஒரு வகை பூஜ்சை படர்ந்து இந்நோய் உருவாகிறது.  இதுவே தற்காலத்தில் பாக்கு மற்றும் தென்னை மரங்களில்  ஏற்படும் மாகாளி நோய் என்று மருவி வழங்கப்படுகிறது.

கவலைக் கிழங்கு: இன்று காவள்ளிக்கிழங்கு, வெற்றிலை வள்ளிக்கிழங்கு, ஆள்வள்ளிக்கிழங்கு என்று பல்வேறு ஊர்களில் அழைக்கப்படுகிறது. தோல் நோய்களைக் குணப்படுத்தவும், செரிமானத்திறனுக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது. உருளைக் -கிழங்கிற்கு மாற்றாக  வாயுதொல்லையற்றது. மாவுச்சத்தும், நார்ச்சத்தும் மிக்கது.

 

கூவைக் கிழங்கு: இன்று ஆரோரூட் என்று அழைக்கப்படும் கிழங்கு. உடல் வெப்பதைத் தணிக்கவும், செரிமானப்பிரச்சனைகள், சிறுநீரகப்பிரச்சனைகள் தீர மருந்தாகப் பயன்படும் பல்வகை சத்துகள் நிறைந்த கிழங்கு.

உயவைக் கொடி: நன்னாரி போன்ற  வேர் அல்லது கொடி அமைப்பைக் கொண்டிருக்கலாம். நீர்வேட்கை உண்டான காலத்தில் வாய்நீர் ஊற உதவும்.

 

கானவர் குடி

தீயின் அன்ன ஒண் செங்காந்தள்                         145

                  

தூவல் கலித்த புது முகை ஊன் செத்து

அறியாது எடுத்த புன் புற சேவல்

ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென

நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்

வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும்           150          

 

மண இல் கமழும் மா மலை சாரல்

தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர்

சிறு கண் பன்றி பழுதுளி போக்கி

பொருது தொலை யானை கோடு சீர் ஆக

தூவொடு மலிந்த காய கானவர்                155       

     

செழும் பல் யாணர் சிறு குடி படினே

இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர்

 

அருஞ்சொற்பொருள்:

145. அன்ன - போல; ஒண்ஒளியுடைய

146. தூவல் - மழை; கலித்த - தழைத்த; முகை - அரும்பு; ஊன் - தசை; செத்து - கருதி

147. புன் புற சேவல் புல்லிய நிறத்தையுடைய ஆண் பருந்து

148. ஊஉன் - தசை;  அன்மை அல்லாமை; உகுத்தல் உதிர்த்தல்

149. தாஅய் - பரந்து

150. வெறிக்களம்  - வெறியாட்டம் நடைபெறும் இடம்; கடுக்கும் - போல; வியல் -அகன்ற; அறைபாறை

151. கமழும் - மணக்கும்

152. தேனினர் தேனை உடையவர்கள்; கிழங்கினர் கிழங்கை உடையவர்கள்; ஊன் ஆர் வட்டியர் தசை நிறைந்த கிண்ணங்களை உடையவர்

153. பழுது உளி பழுது உள்ளவற்றை; போக்கி -நீக்கி

154. பொருது - போரிட்டு; தொலைதல்  - இறத்தல்; கோடு  - தந்தம்; சீர் காவுத்தண்டு

155. தூவு- தசை; மலிந்த மிகுந்த; காய சுமந்துகொண்டுவந்த ; கானவர்  - குறவர், முல்லை நிலத்து மக்கள்             

156. யாணர்புது வருவாய்; படினே - அடைந்தால்

157. இரும் - பெரிய; பேர் - பெரிய; ஒக்கல் சுற்றம்; பதம் -உணவு; பெறுகுவிர் பெறுவீர்கள்

பதவுரை:

145. தீயின் அன்ன ஒண் செங்காந்தள்  - நெருப்பினைப்போல் ஒளியுடைய  செங்காந்தளின்  

146. தூவல் கலித்த புது முகை ஊன் செத்து - மழையால் செழித்து வளர்ந்த புதிய அரும்பைத்  தசையெனக் கருதி,

147. அறியாது எடுத்த புன் புற சேவல் - அறியாமல் எடுத்த பொலிவிழந்த முதுகையுடைய  ஆண் பருந்து,

148. ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென அது தசை இல்லையென்பதால் அதை உண்ணாமல் கீழேபோட்டதால்,

149. நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் - நெருப்பைப் போன்ற பல இதழ்கள் பரந்து,

150. வெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும் -    வெறியாடுகின்ற களத்தைப்போல் அகன்ற பாறைகள்தோறும்          

151. மண இல் கமழும் மா மலை சாரல் - திருமண வீடுபோல் மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே கிடைக்கும்

152. தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் தேனை உடையவர்கள், கிழங்கை உடையவர்கள், ஊனுடையராய் தசை நிறைந்த கூடையை உடையவர்கள்,

153. சிறு கண் பன்றி பழுதுளி போக்கி - சிறிய கண்களையுடைய பன்றியின் தசைகளில் பழுதுள்ளவற்றை நீக்கி,

154. பொருது தொலை யானை கோடு சீர் ஆக போரில் இறந்த யானைகளின் தந்தங்கள் காவுத்தண்டாக,

155. தூவொடு மலிந்த காய கானவர் -    மற்றுமுள்ள தசைகளோடு  நிறைய கூடைகளைத் தோளில் சுமந்துவந்த கானவருடைய             

156. செழும் பல் யாணர் சிறு குடி படினே - வளப்பம் மிக்க பல்வித புதுவருவாயையுடைய சிறிய ஊரில் தங்கினால்,

157. இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் மிகவும் பெரிய சுற்றத்துடன் உணவு வகைகளை நீங்கள் பெறுவீர்கள்

கருத்துரை:

மழையால் செழித்து வளர்ந்த செங்காந்தளின் நெருப்பைப்போல் ஒளியுடைய புதிய அரும்பைத்  தசையென்று தவறாக நினைத்து, பொலிவிழந்த முதுகையுடைய  ஆண் பருந்து எடுக்கும். எடுத்தது தசை அல்லாததால் அதை உண்ணாமல் அவற்றை ஆண் பருந்து பாறைகள் மீது போடும். பாறைகள்மீது போடப்பட்ட இதழ்கள் பரந்து, வெறியாடுகின்ற களத்தைப்போல் இருக்கும்.  திருமண வீடுபோல் மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே கிடைக்கும் தேனையும், கிழங்கையும், தசை நிறைந்த கூடைகளையும் உடைய கானவர், சிறிய கண்களையுடைய பன்றியின் தசைகளில் பழுதுள்ளவற்றை நீக்கி, போரில் இறந்த யானைகளின்  தந்தங்களில் காவடிபோல் அவற்றைச் சுமந்து செல்வர். அந்தக் கானவர்களின் வளம் மிக்க பலவிதமான புதுவருவாயையுடைய சிறிய ஊர்களில் நீங்கள்  தங்கினால், நீங்களும் உங்களுடைய மிகப் பெரிய  சுற்றமும் பல உணவு வகைகளைப் பெறுவீர்கள்.

வழியிலுள்ள சிற்றூரில் நிகழும் விருந்து

 

அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி

கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலை செப்பம் போகி                               160

 

அலங்கு கழை நரலும் ஆரி படுகர்

சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி

நோனா செருவின் வலம் படு நோன் தாள்

மான விறல் வேள் வயிரியம் எனினே

நும் இல் போல நில்லாது புக்கு                              165

 

கிழவிர் போல கேளாது கெழீஇ

சேண் புலம்பு அகல இனிய கூறி

பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர்

 

அருஞ்சொற்பொருள்:

158. அவண் அவ்விடம்;  அசைஇ -இளைப்பாறி;  அல் -  இரவு;  அல்கி - தங்கி

159. கன்றுதல் -கனலுதல்;  எரிநெருப்பு; இணர்- கொத்து; கடும்புசுற்றம்;  மலைந்து- சூடி

160. சேந்த -சிவந்த;  செயலை அசோக மரம்; செப்பம்  - நல்ல வழி

161. அலங்கு - அசைகின்ற;  கழை - மூங்கில்; நரலும் -ஒலிக்கும்;  ஆரி அருமையுடையது; படுகர் -வழிக்கு ஆகுபெயர்

162. சிலம்பு -  மலை; பாக்கம்  - சிற்றூர்; எய்தி -சேர்ந்து

163. நோனா பொறுக்காமல்;  செருவின் - போரில்;  வலம்  - வெற்றி; நோன் தாள் வலிய முயற்சி

164. மான மானத்தை; விறல் - வெற்றி;  வேள் - நன்னன்;  வயிரியர் கூத்தர் (வயிரியம் என்பது வயிரியர் என்பத்தின் தன்மைப் பன்மை); எனினே - கூறினால்

165. நும் - உங்கள்;  இல் -வீடு  ;  புக்கு  - புகுந்து

166. கிழவிர் உரிமையுடையவர்; கெழீஇ உறவு கொண்டு

167. சேண்  - தொலை; புலம்பு வருத்தம்;  அகல தீரும்படி

168. பரூஉக்குறை பருத்த தசைத் துண்டு ;  பொழிந்த -சொரிந்த;  நெய்க்கண் நெய்யில்;  வேவை - வெந்தது

169. குரூஉ நிறம்;  இறடி  - தினை; பொம்மல்உணவு

பதவுரை:

158. அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி - அன்று அவ்விடத்தில் இளைப்பாறி, இரவிலும் (அவர்களுடன்)சேர்ந்து தங்கி,

159. கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து - கனலாய் எரியும் நெருப்புபோல் ஒளிரும் பூங்கொத்துக்களை உங்கள் சுற்றத்தாரும் நீங்களும் சூடி,

160. சேந்த செயலை செப்பம் போகி - சிவந்த அசோக மரங்களுள்ள சீராக்கப்பட்ட வழியில் சென்று,                                   

161. அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மேலும் கீழூம் அசைகின்ற மூங்கில்கள் ஒலிக்கும் கடினமான ஏற்ற இறக்கங்களான பாதைகளையுடைய

162. சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி - மலைச்சரிவை அடுத்திருந்த சிறிய ஊரை அடைந்து

163. நோனா செருவின் வலம் படு நோன் தாள் பகைவரைப் பொறுக்காமல் புரியும் போரில் வெற்றி உண்டாகும் வலிய முயற்சியும்,

164. மான விறல் வேள் வயிரியம் எனினே - மானஉணர்ச்சிமிக்க, வலிமைமிக்க நன்னனுடைய கூத்தர் யாம்என்று கூறுவீராயின்,

165. நும் இல் போல நில்லாது புக்கு  -  உம்முடைய சொந்தவீடு போல வாசலில் நிற்காமல் உள்ளே புகுந்து,                              

166. கிழவிர் போல கேளாது கெழீஇ - உரிமையுடையவர் போலக் கேட்காமலேயே, அவருடன் நட்புரிமை கொண்டால்

167. சேண் புலம்பு அகல இனிய கூறி - தொலைவிலிருந்து வந்த உம் வருத்தம் நீங்க இனிய மொழிகள் கூறி

168. பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு -பருத்த தசைத்துண்டுகள் சொரிந்து நெய்யில் வெந்த

169. குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் நிறம் மிகுந்த தினைச்சோற்றை நீங்கள் பெறுவீர்கள்

கருத்துரை:

அன்று அவ்விடத்தில் இளைப்பாறி, இரவிலும் அவர்களுடன் தங்குவீராக. காலையில், எரியும் நெருப்புபோல் ஒளிரும் பூங்கொத்துக்களை நீங்களும் உங்கள் சுறத்தாரும்  சூடிச் சிவந்த அசோக மரங்களுள்ள நல்ல வழியில் செல்வீராக. அசைகின்ற மூங்கில்கள் ஒலிக்கும் கடினமான ஏற்ற இறக்கங்களான பாதைகளையுடைய மலைச்சரிவை அடுத்துள்ள  சிற்றூர்களை அடைந்து, ’பகைவரைப் பொறுக்காமல் புரியும் போரில் வெற்றி உண்டாகும் வலிய முயற்சியும், மானஉணர்ச்சிமிக்க, வலிமைமிக்க நன்னனுடைய கூத்தர் யாம் என்று கூறுவீர்களாக. உம்முடைய சொந்தவீடுபோல வாசலில் நிற்காமல் உள்ளே புகுந்து உரிமையுடையவர்போலக் கேட்காமலேயே, அவருடன் நட்புக்கொள்ளுங்கள். தொலைவிலிருந்து வந்த உங்கள் வருத்தம் நீங்க, இனிய மொழிகள் கூறி, பருத்த தசைத்துண்டுகள் சொரிந்து நெய்யில் வெந்த,  நிறம் மிகுந்த தினைச்சோற்றை அவர்கள் உங்களுக்குத் தருவார்கள்.

 

வீடுகள் தோறும் விருந்து

 

ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு                  170

 

வேய் பெயல் விளையுள் தேம் கள் தேறல்

குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை

பழம் செருக்குற்ற நும் அனந்தல் தீர

அருவி தந்த பழம் சிதை வெண் காழ்

வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை          175

 

முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை

பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ

வெண் புடை கொண்ட துய் தலை பழனின்

இன் புளி கலந்து மா மோர் ஆக

கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து               180

 

வழை அமை சாரல் கமழ துழைஇ

நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி

குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ

மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்              185

 

அருஞ்சொற்பொருள்:

170. தரூஉம் -  தரும், கொடுக்கும்; இலங்குதல் -விளங்குதல் ; தாரம் -   மலையில் கிடைக்கும் பொருள்       

171. வேய் - மூங்கில்;  பெயல் பெய்தல்;  விளையுள் -விளைச்சல்;  தேம் கள்  - தேனால் செய்த கள்; தேறல் கள்ளின் தெளிவு

172. நறவு நெல்லால் சமைத்த கள் ; வைகறை -விடியற்காலம்

173. செருக்கு -மகிழ்ச்சி; நும் -உங்களுடைய ; அனந்தல் - மயக்கம்

174. சிதை -உதிர்ந்த;  காழ்- விதை

175. விசை வேகம்; கடமான் ஒருவகை மான் (Elk) ; குறை  - தசை

176. முளவுமுள்ளம்பன்றி; தொலைச்சிய -கொன்ற;  பைம் - பசுமையான; நிணம் - கொழுப்பு;  பிளவை பிளக்கப்பட்ட துண்டு

177. பிணவு - பெண்நாய்; முடுக்கிய -விரைந்து கடித்த ;  தடி -உடும்பு; விரைஇ - கலந்து

178. துய் -பஞ்சு;  பழன் - பழம்

179. மா -விலங்கு(பசு, எருமை)

180. கழைமூங்கில்;  அரி -அரிசி ;  ஊழ்த்து பெய்து        

181. வழை சுரபுன்னை;   கமழ - மணக்க;  துழைஇ - துழாவி

182. நறு மலர்  - நல்ல மணமுள்ள மலர் ;  இரு -கரிய ; முச்சி -மயிர்முடி

183. வால் -வெண்மை ;  அவிழ் - சோறு;  வல்சி -உணவு

184. அகம் - நெஞ்சு;  மலிதல் நிறைதல்;  உவகை - மகிழ்ச்சி;  அளைஇ - கலந்து

185. மகமகன் அல்லது மகள் (பிள்ளைகள்); முறை -  அண்ணன், தம்பி, மாமன் போன்ற உறவினர்; தடுப்ப - தடுக்க; பெறுகுவிர்    - பெறுவீர்கள்

பதவுரை :

170. ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு பொலிவுள்ள மலையின் மலைமீது ஏறிக் கொண்டுவந்த பண்டங்களோடு,   

171. வேய் பெயல் விளையுள் தேம் கள் தேறல் - மூங்கில் குழாய்க்குள் பெய்து விளைத்த  தேனால் செய்த கள்ளின் தெளிவைக்

172. குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை - குறைவு இல்லாமல் குடித்து, நெல்லால் செய்த கள்ளைக் குடித்து மகிழ்ந்து, விடியற்காலையில்

173. பழம் செருக்குற்ற நும் அனந்தல் தீர - பழைய களிப்பினால் அடைந்த உமது போதைமயக்கம் தீரும்படி,

174. அருவி தந்த பழம் சிதை வெண் காழ் - அருவிநீர் அடித்துக்கொண்டுவந்த பலாப்பழம் உதிர்த்த சிதறிய வெண்மையான விதைகளையும்,

175. வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை - முட்டுவதற்கு ஓடிவரும் வேகத்தைக் கெடுத்துக் கொன்ற கடமானின் கொழுத்த தசைகளையும்,  

176. முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை முள்ளம்பன்றியின் பசுமையான கொழுப்பையுடைய  தசைத்துண்டுகளையும்,

177. பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ - பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக் கிடைத்த உடும்பின்  தசைத்துண்டுகளோடு கலந்து,

178. வெண் புடை கொண்ட துய் தலை பழனின் - வெண்மையான புடைத்த பக்கங்களைக்கொண்ட, பஞ்சு போன்றதை மேலே கொண்ட புளியம்பழத்தின்

179. இன் புளி கலந்து மா மோர் ஆக இனிய புளியைக் கலந்து, சிறந்த மோரை வார்த்து,

180. கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து - மூங்கிலில் வளர்ந்த நெல்லின் அரிசியை உலையில் இட்டு,

181. வழை அமை சாரல் கமழ துழைஇ - சுரபுன்னை மரங்கள் வளர்ந்துநிற்கும் மலைச்சாரல் மணக்கும்படிக் கிளறி,

182. நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி - நல்ல மணமுள்ள மலர்களைச் சூடிய நறுமணமான  கரிய உச்சிக்கொண்டையையுடைய

183. குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி - குறமகள், (தான்)ஆக்கிய வெள்ளைச் சோறாகிய உணவை

184. அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ - மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் கலந்துதர,

185. மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்- அவர்களின் பிள்ளைகளும் உறவினர்களும். ‘இருந்து செல்கஎன்று தடுக்க, வீடுகள்தோறும் பெறுவீர்கள்.

கருத்துரை:

மேலும், அவ்வூர் மக்கள் மலைமீது ஏறிக் கொண்டுவந்த பண்டங்களை உங்களுக்கு வழங்குவர். மூங்கில் குழாயில் பெய்யப்பட்ட தேனால் செய்த கள்ளை அளிப்பர். அதைக் குறைவில்லாமல் குடித்த பிறகு, நெல்லால் சமைத்த கள்ளைக் குடித்து மகிழுங்கள். மறுநாள் விடியற்காலையில், கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற உம்முடைய குடிமயக்கம் தீர , பலாப்பழத்தின் விதைகளையும், கடாமானின் கொழுத்த தசையையும், முள்ளம்பன்றியின்  கொழுப்புடைய தசையையும், உடும்பின் தசையையும், மூங்கிலரிசியையும் புளி கலந்த மோரில் இட்டு, சுரபுன்னை நெருங்கிய மலையெங்கும்  மணக்கும்படிக் குறமகள் சமைப்பாள்.  அவ்வாறு குறமகள் சமைத்த   உணவை, மன மகிழ்ச்சியோடு, தம் பிள்ளைகளையும் உறவினர்களையும் கொண்டு உங்களைப் போகவிடாது தடுத்து, வீடுகள்தோறும் உங்களுக்குக் கொடுப்பார்கள்.

 


 

மலைநாட்டில் நெடுநாள் தங்க வேண்டாம்

 

செரு செய் முன்பின் குருசில் முன்னிய

பரிசில் மறப்ப நீடலும் உரியிர்

அனையது அன்று அவன் மலை மிசை நாடே

நிரை இதழ் குவளை கடி வீ தொடினும்

வரை அரமகளிர் இருக்கை காணினும்           190

 

உயிர் செல வெம்பி பனித்தலும் உரியிர்

பல நாள் நில்லாது நில நாடு படர்மின்

 

அருஞ்சொற்பொருள்:

186. செரு -போர்; முன்பு வலிமை; குருசில் தலைவன் (நன்னன்); முன்னிய - கருதிய

187. பரிசில் - பரிசு;  மறப்ப மறக்கும்படி;  நீடலும் நீடித்திருத்தலும்;  உரியிர் இருக்கக்கூடும்

188. அன்றுஅசை; மலை மிசை நாடு மலையில் உள்ள நாடு

189. நிரை -வரிசை ; குவளை குவளை மலர்;  கடி  - பூசை; வீ - மலர்;  தொடினும் - தொட்டாலும்

190. வரை - மலை; அரமகளிர் தெய்வ மகளிர்;  இருக்கை இருக்குமிடம்;  காணினும் கண்டாலும்

191. வெம்புதல் வாடுதல், அஞ்சுதல் (உயிர் போகும்படி அஞ்சுதல்);  பனித்தல் - நடுங்குதல்;  உரியிர் இருக்கக்கூடும்

192. நில்லாது -இருக்காமல்;  நில நாடு  - நிலத்தில் உள்ள நாடு; படர்மின் செல்லுங்கள்

பதவுரை:

186. செரு செய் முன்பின் குருசில் முன்னிய - போர் செய்யும் மிக்க வலிமையையுடைய  நன்னனைக் கருதிச்செல்லும் நீங்கள்

187. பரிசில் மறப்ப நீடலும் உரியிர் பெற விரும்பும் பரிசையும் மறக்குமளவுக்கு உமது இருப்பை நீட்டிக்கக்கூடும்

188. அனையது அன்று அவன் மலை மிசை நாடே அத்தகையது அவன் நாட்டின் மலைப்பகுதி

189. நிரை இதழ் குவளை கடி வீ தொடினும் - வரிசையாய் அமைந்த இதழ்களையுடைய குவளையின் தொழுகைக்குரிய பூக்களைத் தெரியாமல் தொட்டாலும்

190. வரை அரமகளிர் இருக்கை காணினும்  - மலையில் வாழும் பெண் தெய்வங்களின் இருப்பிடத்தைக் கண்டாலும்

191. உயிர் செல வெம்பி பனித்தலும் உரியிர் - உயிர் போகுமளவுக்கு அஞ்சி நடுங்குவீர்

192. பல நாள் நில்லாது நில நாடு படர்மின் - எனவே பல நாட்கள் அங்குத் தங்காமல் மலையை விட்டிறங்கி நீங்கள் நிலப்பகுதிக்குச் செல்லுங்கள்.

கருத்துரை:

போர் செய்யும் மிக்க வலிமையையுடைய  நன்னனைக் கருதிச்செல்லும் நீங்கள் அவனிடமிருந்து பெற விரும்பும் பரிசையும் மறக்குமளவுக்கு மலைப்பகுதியில் உள்ள மக்களின் விருந்தோம்பல் இருக்கும். அவனுடைய மலைப்பகுதி அத்தகையது. அதனால் நீங்கள் அங்கே நெடுநாட்கள் தங்கக்கூடும். ஆனால், அங்குள்ள  குவளையின் தொழுகைக்குரிய பூக்களை நீங்கள் தெரியாமல் தொட்டாலும், மலையில் வாழும் பெண் தெய்வங்களின் இருப்பிடத்தை நீங்கள் கண்டாலும், நீங்கள் உயிர் போகுமளவுக்கு அஞ்சி நடுங்குவீர்கள். எனவே, நீங்கள் பல நாட்கள் அங்குத் தங்காமல் மலையை விட்டிறங்கி  நிலப்பகுதிக்குச் செல்லுங்கள்.

 

இரவில் செல்லாதீர்கள்

 

விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி

புழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர்

அரும் பொறி உடைய ஆறே நள் இருள்           195

 

அலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின்

 

அருஞ்சொற்பொருள்:

193. புனம்நிலம்;  நிழத்தல் - ;  கேழல் -பன்றி

194. புழை - ; இரும்பெரிய;  அடாஅர்விலங்குகளை அகப்படுத்தும் கருவி

195. அரும் -அரிய;  பொறி - கருவி; ஆறுவழி; நள் இருள்  - நள்ளிரவு

196. அலரி கதிரவன் ; விடியல்  -அதிகாலை;  வைகுதல் - தங்குதல்; கழிமின்செல்லுங்கள்

 

 

பதவுரை:

193. விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி விளைந்து முற்றிய தினைப்புனத்தை அழித்துவிடும் பன்றிகளுக்குப் பயந்து,

194. புழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் -  வழிகள்தோறும் மாட்டிவைத்த பெரிய கல் பலகையால் செய்த அடார்

195. அரும் பொறி உடைய ஆறே நள் இருள்  - என்னும் சிறந்த பொறிகளை உடையன வழிகள், நள்ளிருள்

196. அலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின்நீங்கி, கதிரவனின் கதிர்கள் (பொழுது)புலர்ந்த விடியற்காலைவரை தங்கியிருந்து, அதன்பின் நீங்கள்  அவ்விடத்தைவிட்டுச் செல்லுங்கள்.

 

கருத்துரை:  

விளைந்து முற்றிய தினைப்புனத்தை அழிக்கும் பன்றிகளுக்கு அஞ்சி, அவை புகும் வழிகள்தோறும், அடார் என்னும் கருவிகளை மலைக்குறவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்அதனால், நள்ளிருள் நீங்கிக் கதிரவனின் கதிர்கள் விரியும் அதிகாலை வரையில் அவ்விடத்தில் தங்கிவிட்டு, அதன்பின் நீங்கள் செல்லுங்கள்

சிறப்புக் குறிப்பு:

அடார்: விலங்குகளை உயிருடன் பிடிக்கவோ, கட்டுப்படுத்தவோ பயன்படுத்திய பொறி. தற்காலத்தில் எலிகளைப் பிடிக்கப் பயன்படும் பெட்டிப் பொறியின் செயல்பாட்டை ஒத்தது.

 

 

 

கடந்து செல்லும் வகை

நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின்,
முரம்பு கண் உடைந்த பரல் அவற் போழ்வில்,
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே,

குறிக் கொண்டு மரங்கொட்டி நோக்கிச்,                  200

 

செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச

வறிது நெறி ஒரீஇ வலம் செயாக் கழிமின்;

 

அருஞ்சொற்பொருள்:

197. நளிந்து  - செறிந்து; வழங்குதல் – நடந்தல்; செப்பம் – நல்ல வழி; துணியின் – துணிந்தால்

198. முரம்பு – மேட்டு நிலம்;  பரல் – பருக்கைக்கல்;  அவல் - பள்ளம்; போழ்வு – பிளவு

199. கரந்து - மறைந்து;  பயம்பு – பள்ளம்

200. குறிக் கொண்டு  - குறித்துவைத்துக்கொண்டு; மரங்கொட்டி  - மரத்தில் ஏறிக் கைதட்டி;

201. செறிதொடி – நெருக்கமாக வளையல் ;  கைதொழூஉ – கையால் தொழுது ; பழிச்ச – வாழ்த்த

202. வறிது – சிறிது; நெறி - வழி;  ஒரீஇ -  விலகி; வலம் செயா -செய்துகொண்டு; கழிமின் – செல்லுங்கள்

 

 

 

பதவுரை:

197. நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின் – செறிந்து பலரும் செல்லாத வழியில் போகத் துணிந்தால்,

198. முரம்பு கண் உடைந்த பரல் அவற் போழ்வில் – மேட்டு நிலத்தின்கண் உள்ள உடைந்த பரல் கற்களையுடைய பள்ளத்தில் உள்ள பிளவுகளில்

199. கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே - மறைந்து பாம்புகள் சுருண்டுகிடக்கும் குழிகளும் உள்ளன;

200. குறிக் கொண்டு மரங்கொட்டி நோக்கி - அவ்விடங்களை மனத்தில் குறித்துவைத்துக்கொண்டு, மரத்தில் ஏறிக் கைதட்டிப் பார்த்து

201. செறிதொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச - நெருக்கமாக வளையல் (அணிந்த) விறலியர் கைகூப்பி வாழ்த்த

202. வறிது நெறி ஒரீஇ வலம் செயாக் கழிமின் – சற்றே அவ்வழியைக் கடந்த பின்னர் வலப்பக்கமாகவே செல்லுங்கள்

 

கருத்துரை:

செறிந்து பலரும் செல்லாத வழியில் நீங்கள் போகத் துணிந்தால், மேட்டு நிலத்தின்கண் உள்ள உடைந்த பரல் கற்களையுடைய பள்ளத்தில் உள்ள பிளவுகளில் பாம்புகள் மறைந்து  ஒடுங்கியிருக்கும் குழிகள் உள்ளன என்பதை குறித்துவைத்துக்கொண்டு, மரங்களில் ஏறிக் கைதட்டிப் பார்த்து, செறிந்த வளையல்களை அணிந்த உங்கள் விறலியர் இறைவனைக் கைகூப்பி வாழ்த்த, அவ்வழியிலிருந்து சிறிது விலகி வலப்பக்கத்து வழியில் செல்லுங்கள்.

கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லும் விதம்

 

புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்

உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ

அகல் மலை இறும்பில் துவன்றிய யானை                205

 

பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல்

இரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென

கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய

உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன

வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின்           210

 

அருஞ்சொற்பொருள்:

203. புலந்து - பசுமை தீர்ந்து (முற்றிய);  புனிறு -ஈன்றணிமை ;  புனம் தினைப்புனம்

204. இதணம் - பரண்;  புடையூஉ கையைக் கொட்டி

205. அகல் -அகன்ற;  இறும்பு குறுங்காடு; துவன்றிய நெருங்கிய, நிறைந்த              

206. தளர்க்கும் - கெடுக்கும்

207. இரு - பெரிய; வெதிர் - மூங்கில்; ஈர் ஈரமான;  கழை - மூங்கில்;  தத்தி -கடந்து; கல் - ஒலிக்குறிப்பு

208. கரு - கரிய; ஊகம் கருங்குரங்கு; பார்ப்பு - குட்டி; இரிய -பயந்தோட

209. செகுத்தல் -நீக்குதல், கொல்லுதல் ; கூற்றம்-எமன்;  அன்ன - போல

210. விசை -வேகம்;  தவிராது -குறையாது;  மறையா  - ஒதுங்கி நின்று; கழிமின் செல்லுங்கள்

பதவுரை:

203. புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் - காய்ந்து, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள்

204. உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ - உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி, கைகளைத் தட்டி,

205.அகல் மலை இறும்பில் துவன்றிய யானை -அகன்ற  மலைகளின் புதர்க்காடுகளில் கூட்டமாகத்திரியும் யானைகள்

206. பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் - பகலில் நிற்கும் நிலையைக் குலைக்கின்ற கவண்கள் விடும் கடிய கற்கள்,

207. இரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென - பெரிய மூங்கிலின் ஈரமான தண்டுகளில் பட்டுப் பட்டுத் தாவித்தாவிச் சென்று ஓசை உண்டாக்க,

208. கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய - கரிய விரல்களையுடைய குரங்குகள் தம் குட்டிகளோடு பயந்தோட,

209. உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன - உயிர்களைக் கொல்வதையே இயல்பாகக் கொண்டுள்ள கூற்றத்தைப் போன்று,

210. வரும் விசை தவிராது மரம் மறையா கழிமின் -  அக் கவண்கற்கள் வருகின்ற வேகம் குறையமாட்டா, எனவே மரங்களின் பின் ஒளிந்துநின்று செல்லுங்கள்

கருத்துரை:

தினைப்புனத்தை யானைகள் அழிக்காதவாறு, குறவர் உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி இருந்து காவல் காப்பர். அவர்கள்  கைகளைத் தட்டி, அகன்ற மலையின் புதர்க்காட்டில் கூட்டமாகத் திரியும் யானைகள் நிலைகுலையுமாறு கவண்கற்களை எறிவர். அவர்கள் எறியும் கற்கள் மூங்கில் தண்டுகளில் தத்தித்தத்திச் சென்று ஓசை எழுப்பும். அந்த ஓசையைக் கேட்டு, குரங்குகள் தங்கள் குட்டிகளோடு பயந்தோடும். அந்தக் கவண்கற்கள் வேகம் குறையாமல் வரும். எனவே, நீங்கள் மரங்களின் பின் ஒளிந்துநின்று செல்லுங்கள்.

 

 

வழுக்கும் இடங்களைக் கடத்தல்

 

உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி

இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்,

குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர்

அகழ் இழிந்தன்ன கான்யாற்று நடவை

வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பிப்,   215

 

பரூஉக் கொடி வலந்த மதலை பற்றித்

துருவின் அன்ன புன்தலை மகாரோடு

ஒருவிரொருவர் ஓம்பினிர் கழிமின்.

 

அருஞ்சொற்பொருள்:

211. உரவு -வலிமை;  கரக்கும் – மறைக்கும் (விழுங்கி மறைக்கும்); இடங்கர் - முதலை

212. அன்ன – போல; வரைப்பு -காவற்காடு

213. குண்டுகயம் – ஆழமான மடு (ஆழமான குளம்) ; முடுக்கர் – முடுக்கு (நீர்க்குத்தான இடம், Place where water presses against a bank and erodes)

214. அகழ் - அகழி; இழிந்தன்ன – இறங்கினாற்போல்; கான் -காடு; யாற்று – ஆற்று; நடவை - வழி

215, வழூஉம் -வழுக்கும்; மருங்கு -இடம்; வழாஅல் -வழுக்காது ; ஓம்பி – பாதுகாத்து

216. பரூஉக் கொடி – பருத்த கொடி; வலந்த -சுற்றிய ; மதலை - பற்றுக்கோடு

217. துரு – செம்மறி ஆடு; அன்ன – போல;  புன்தலை – பொலிவிழந்த தலை; மகார் – பிள்ளைகள்

218. ஓம்பினிர் – பாதுகாத்துக்கொள்ளுங்கள்; கழிமின் – செல்லுங்கள்

பதவுரை:

211. உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி - வலிமையுள்ள யானைகளை விழுங்கும் முதலைகள் ஒடுங்கி இருக்கும்

212. இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் -இரவுநேரத்தைப் போன்ற இருள் அடர்ந்திருக்கும் எல்லையோரக் காட்டினையும்

213. குமிழி சுழலும் குண்டுகய முடுக்கர் - நீர்க்குமிழிகள் சுழன்று வருகின்ற ஆழமான மடுக்குளையும் முடுக்களையும் உடைய

214. அகழ் இழிந்தன்ன கான்யாற்று நடவை - அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்

215. வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பிப் -  வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுக்காமல் பாதுகாத்து

216. பரூஉக் கொடி வலந்த மதலை பற்றித் – மரங்களைச் சூழ்ந்த பருத்த கொடிகளைப் பற்றிக்கொண்டு

217. துருவின் அன்ன புன்தலை மகாரோடு - செம்மறியாட்டைப் போன்று, பொலிவிழந்த தலையினையுடைய உம் பிள்ளைகளுடன்

218. ஒருவிரொருவர் ஓம்பினிர் கழிமின். - ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொண்டு செல்லுங்கள்

கருத்துரை:

நீங்கள் செல்லும் வழியில், இரவை ஒத்த இருள் அடர்ந்த காடு இருக்கும். அந்தக் காட்டில் உள்ள ஆற்றில்,  நீர்ச்சுழிகளும், ஆழமான மடுக்களும் முடுக்குகளும் இருக்கும்.  அவற்றில் யானையை விழுங்கக்ககூடிய முதலைகள் இருக்கும். அந்தக் காட்டாற்று வழியில் நடந்து சென்றால், அங்கு வழுக்கும் இடங்கள் இருக்கும். அந்த இடங்களில் வழுக்காது உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். மரங்களைச் சூழ்ந்த பருத்த கொடிகளைப்  பற்றிக்கொண்டு, செம்மறியாட்டை ஒத்த பொலிவிழந்த தலைகளையுடைய உங்கள் பிள்ளைகளுடன் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொண்டு நீங்கள் செல்லுங்கள்.

 


 

பாசி படிந்த குளக்கரைகளைக் கடந்து செல்லுதல்

 

அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்

விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா,   220

 

வழும்புகண் புதைத்த நுண் நீர்ப் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய,
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலொடு

எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்

 

அருஞ்சொற்பொருள்:

219. அழுந்து – கிழங்கு (ஆகுபெயர்); அலமருதல் - அசைதல்; புழகு – மலையெருக்கு (Mountain madar, Calotropis) அமலுதல் – பெருகுதல்; சாரல் – மலைச்சாரல்

220. மாய்க்கும் – கொல்லும்;  குண்டுகயம் – ஆழமான குளம்; அருகா -அருகே

221. வழும்பு -வழுவழுப்பு; கண் -இடம்; புதைத்த - மறைத்த;  நுண் நீர்ப் பாசி – நுண்ணிய தன்மையுள்ள பாசி

222. அடி நிலை -அடி ஊன்றியிட்ட நிலை ; தளர்க்கும் -தளரச் செய்யும் ;  அருப்பம் – வழுக்கு நிலம், அருமை

223. முழு நெறி -முழு வழி;  அணங்கிய – பின்னி வளர்தல்;  நுண் கோல் – மெல்லிய கோல் ; வேரல் - மூங்கில்

224. எருவை – கொறுக்கச்சி (ஒருவகை நாணல்);  கொண்டனிர்  - கொண்டவர்களாய் ; கழிமின் – செல்லுங்கள்

பதவுரை:

219. அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல் - கிழங்கு தாழ வீழ்ந்து அசையும் மலையெருக்கு அடர்ந்த பக்க மலையில்

220. விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா - விழுந்தவரைக் கொல்லும் ஆழமான குளத்திற்கு  அருகே

221. வழும்புகண் புதைத்த நுண் நீர்ப் பாசி - வழுவழுப்பினால் கீழுள்ள தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி
222.
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய, - ஊன்றிய காலின் உறுதியைக் குலைக்கும் (வழுக்கும்) வழுக்குநிலங்களும் உடைய,
223.
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலொடு வழி முழுவதும் பின்னி வளர்ந்த நுண்ணிய கோல்களையுடைய  சிறுமூங்கிலுடன்

224. எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின் - எருவை என்னும் நாணலின் மெல்லிய கோல்களையும் பிடித்துக்கொண்டு செல்லுங்கள்

கருத்துரை:

அசையும் மலையெருக்கு வளரும் மலைச்சாரலில், விழுந்தவரைக் கொல்லும் ஆழமான குளம் இருக்கும். அந்தக் குளத்திற்கு அருகே, வழுவழுப்பினால் கீழுள்ள தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி படர்ந்திருக்கும். அந்தப் பாசி படர்ந்த தரையில் அடிவைத்தால், அது அடியைத் தளரச் செய்யும்.  அதனால், அந்த இடம் நடப்பதற்குக் கடிமானதாக இருக்கும். அங்குச் செல்லும்பொழுது, வழி முழுவதும் உள்ள, பின்னி வளர்ந்த நுண்ணிய கோல்களையுடைய சிறுமூங்கிலையும் நாணலையும் பிடித்துக்கொண்டு செல்லுங்கள்.

 

கடவுளைத் தொழுதல்

 

உயர்நிலை மாக்கல் புகர் முகம் புதைய,                225


மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினை நவில் யானைச்
சூழியின் பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சி
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசைப்

பராவு அரு மரபின் கடவுட் காணின்,                     230

 

தொழாநிர் கழியின் அல்லது வறிது
நும் இயம் தொடுதல் ஓம்புமின்; மயங்கு துளி

மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே;

 

அருஞ்சொற்பொருள்:

225. மா- பெருமை; கல் - மலை; மாக்கல் – நன்னனின் நவிர மலை; புகர் - புள்ளி;  புதைய -மறைக்க

226. மாரியின் -மழைபோல்;  இகுதரு - பொழியும்;  கடுங்கணை -கடிய அம்பு

227. தார் – தூசிப்படை;  நவில்தல் -  பயிலுதல்

228. சூழி – மதிலின் உச்சி; இலஞ்சி - மடு

229. யாற்று - ஆற்று; இயவு - வழி;  புரிசை -மதில்

230. பராவுதல் – வாயாற் புகழ் பாடி வாழ்த்துதல்; புரிசை - மதில் (கோவிலுக்கு ஆகுபெயர்)

 231. தொழா -தொழுது; வறிது -சிறிது

232.  இயம் – இசைக்கருவி; ஓம்புமின் - காப்பீராக

233. மாரி  - மழை; தலைதல் – மலை பொழிதல்;  மல்லல் - வளம்; வெற்பு - மலை

 

பதவுரை:

225. உயர்நிலை மாக்கல் புகர் முகம் புதைய - உயர்ந்து நிற்கும் நவிர மலையில், புள்ளிகளையுடைய தம் முகம் மறைய

226. மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங்கணை - மழைபோல் இறங்கிவரும் வில் பொழியும் கடுமையான அம்புகளும்,
227.
தாரொடு பொலிந்த வினை நவில் யானைச முன்னால் செல்லும் படையுடன்,  போர்த்தொழில் பயின்ற யானைகள் உடையதும்
228.
சூழியின் பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சி -  உச்சியில் ஒளியுடைய பூக்கள் உள்ளன. குளங்களையுடைய

229. ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை ஆற்று வழியில் பழைய மதிலையுடைய கோவிலில்

230. பராவு அரு மரபின் கடவுட் காணின் - மிகவும் அரிதாகப் போற்றி வணங்கப்படும் வழக்கினையுடைய கடவுளைப் பார்த்தால்

231. தொழாநிர் கழியின் அல்லது வறிது - வணங்கி நீங்கள் சென்றுவிடுங்கள், அவ்வாறில்லாமல் கொஞ்சமேனும்

232. நும் இயம் தொடுதல் ஓம்புமின்; மயங்கு துளி - உம்முடைய இசைக்கருவிகளைத் தொடுதலைத் தவிருங்கள், ஏனெனில், நெருக்கமான துளிகளைக்கொண்ட

233. மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே - அவனுடைய வளமிக்க மலையில் இடைவிடாமல்  மழை பெய்யும். (மழையில் உங்கள் இசைக்கருவிகள் நனையும்.)

கருத்துரை:

உயர்ந்த நவிர மலையில், மழைபோல் வில்லிடத்திலிருந்து புறப்படும் அம்புகளும், தூசிப்படையுடன்  போர்த்தொழில் பயின்ற யானைகளும் உள்ளன.  மலை உச்சியில் ஒளியுடைய பூக்கள் உள்ளன. குளங்களை உடைய ஆற்று வழியில், பழைய மதிலையுடைய கோவிலில் தொழுவதற்கு அரிய மரபினையுடைய கடவுளை நீங்கள் கண்டால், அக்கடவுளை வணங்கி நீங்கள் செல்லுங்கள்நன்னனுடைய வளமான நவிர மலையில் , இடைவிடாமல் மழை பெய்வதால், உங்களுடைய இசைக்கருவிகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

 

கவனமாகச் செல்ல அறிவுறுத்தல்

 

அலகை அன்ன வெள்வேர்ப் பீலிக்

கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்,                      235

 

கடும்பறைக் கோடியர் மகாஅர் அன்ன
நெடுங்கழைக் கொம்பர் கடுவன் உகளினும்,
நேர் கொள் நெடுவரை நேமியின் தொடுத்த
சூர் புகல் அடுக்கத்துப் பிரசம் காணினும்,
ஞெரேரென நோக்கல் ஓம்புமின்; உரித்தன்று         240

 

நிரைசெலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர்;

 

அருஞ்சொற்பொருள்:

234. அலகை - சோழி; அன்ன - போல; வெள்வேர் – வெண்மையான வேர்; பீலி – மயில் தோகை

235. கலவம் – மயில் தோகை; மஞ்ஞை - மயில்; கட்சி -  காடு; தளரினும் -ஆடியிளைத்தல்

236. கடும்பறை – கடிய ஒலியையுடைய பறை; கோடியர்  கூத்தர்; மகாஅர் – பிள்ளைகள் அன்ன - போல

237. நெடுங்கழை – நெடிய மூங்கல்;  கொம்பர் கடுவன் – ஆண் குரங்கு;  உகளினும் -பாய்ந்தாலும்

238. நேர் கொள் நெடுவரை – நேர்மையுடைய நெடிய மலை;  நேமி – தேர்ச்சக்கரம்;  தொடுத்த - கட்டிய

239. புகல் – விருப்பம்; அடுக்கம் – மலைச்சாரல்; பிரசம் – தேன் கூடு; காணினும் -கண்டாலும்

240. ஞெரேரென – விரைவுக் குறிப்பு;  நோக்கல் – பார்த்தல்; ஓம்புமின் – பாதுகாத்துக்கொள்ளுங்கள்; உரித்தன்று -   அதுதான் உரியது

241. நிரைசெலல் - வரிசையாகச் செல்லுதல் ; நெறி – வழி; மாறுபடுகுவிர் – தப்புவீர்கள்

பதவுரை:

234. அலகை அன்ன வெள்வேர்ப் பீலி - சோழியைப் போன்ற வெண்மையான அடிப்பக்கத்தையுடைய மயிலிறகுகளைக்கொண்ட

235. கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் - தோகையையுடைய மயில்கள் காட்டில் ஆடியிளைத்தாலும்,

236. கடும்பறைக் கோடியர் மகாஅர் அன்ன கடிய ஒலியுடைய பறையையுடைய கூத்தர்களின் பிள்ளைகளைப் போன்று,
237.
நெடுங்கழைக் கொம்பர் கடுவன் உகளினும் - நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்புகளில் குரங்குகள் பாய்ந்தாலும்
238.
நேர் கொள் நெடுவரை நேமியின் தொடுத்த - செங்குத்தான உயர்ந்த மலையில், தேர்ச்சக்கரம்போல் (தேனீக்கள்)கட்டிய,
239.
சூர் புகல் அடுக்கத்துப் பிரசம் காணினும் - தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த மலைச்சாரலில், தேனடையைக் கண்டாலும்
240.
ஞெரேரென நோக்கல் ஓம்புமின்; உரித்தன்று -  அவற்றை விரைவாகக் காண்பதைத்  தவிருங்கள், அது உமக்கு உரிய செயல் அன்று,    

241. நிரைசெலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் - ஏனெனில், வரிசையாகச் செல்லுபொழுது, உங்கள் மெல்லிய அடி தவறினால் வழி மாறிப் போவீர்கள்

கருத்துரை:

சோழியைப் போன்ற வெண்மையான அடிப்பக்கத்தையுடைய மயிலிறகுகளைக்கொண்ட, தோகையையுடைய மயில்கள் காட்டில் ஆடியிளைத்து நிற்கும். கடிய ஒலியுடைய பறையையுடைய கூத்தர்களின் பிள்ளைகளைப்போல் நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்புகளில் குரங்குகள் பாயும். செங்குத்தான உயர்ந்த மலையில், தேர்ச்சக்கரம்போல், தேனீக்கள் கட்டிய, தெய்வமகளிர் விரும்பும் தேனடைகள் காணப்படும். அவற்றை விரைவாகக் காண்பதைத்  தவிருங்கள், அது உமக்கு உரிய செயல் அன்று,   ஏனெனில், வரிசையாகச் செல்லும்பொழுது, உங்கள் மெல்லிய அடி தவறினால் நீங்கள் வழி தப்புவீர்கள்.

 

இரவில் குகைகளில் தங்குதல்

 

வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே,
கழுதில் சேணோன் ஏவொடு போகி,
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி,

நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்                 245

 

நெறிக் கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள் துணிந்தன்ன ஏனம் காணின்,
முளி கழை இழைந்த காடுபடு தீயின்
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து,

துகள் அறத் துணிந்த மணிமருள் தெள் நீர்             250

 

குவளை அம் பைஞ்சுனை அசைவிடப் பருகி,
மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக்கண் பொதியினிர்
புள் கை போகிய புன்தலை மகாரோடு,
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும்

இல் புக்கன்ன கல் அளை வதிமின்;                      255

 

அருஞ்சொற்பொருள்:

242. வரை - மலை;  வகுந்து -வழி; கானம் -காடு ;  படினே - சென்றால்

243. கழுது - பரண்; சேணோன் – பரண்மேல் ஏறி இருப்பவன்;  ஏ - அம்பு; போகி - போய்

244. இழுது -வெண்ணெய் ; அன்ன – போல;  வால் – வெண்மை ;  நிணம் – கொழுப்பு; செருக்கி - நெருக்காமக

245. நிறம் – மார்பு; கூர்ந்த  - மிகுந்த; மருப்பு - கொம்பு

246. நெறி- வழி; இரும் - கரிய; பிணர் – சொரசொரப்பு;  எருத்து - கழுத்து

247. துணிந்தன்ன – வெட்டப்பட்டதுபோல்; ஏனம் - பன்றி

248. முளிதல் – உலர்தல்; கழை – மூங்கில்;  இழைதல் – உராய்தல்

249. நளி – அடர்ந்த; கமழாது – நாறாது; இறாவுதல் – தீயில் வாட்டி மயிர் போகச் சீவுதல்;  மிசைதல் – தின்னுதல்

250. துகள் – குற்றம்;  துணிந்த -தெளிந்த;  மணிமருள் – நீலமணியை ஒத்த  

251. குவளை – குவளை மலர்;  அசைவிட - களைப்புத் தீர

252. மிகுத்து - முழுதும் தின்னாமல் மிஞ்சிய; பதம்- உணவு (பன்றியின் தசை);   பரூஉக்கண் – பருத்த இடம்; பொதி - மூட்டை

253. புள் – வளையல்; புன்தலை- வாராத  தலை; மகார் – பிள்ளைகள்,

254. அற்கு -  இராப் பொழுதிற்கு; இடை கழிதல் – வழியிடத்தைக் கடத்தல்; ஓம்பி - தவிர்த்து; நும் - உங்கள்

255. இல் - வீடு;  புக்கன்ன- புகுந்தாற் போல;  கல் – மலை; அளை – குகை; வதிமின் - தங்குங்கள்

பதவுரை:

242. வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே – மலைக்குச் செல்லும் வழியையுடைய காட்டில் சென்றால்,

243. கழுதில் சேணோன் ஏவொடு போகி - காவற்பரண் மீது உயரத்தில் இருப்பவன் ஏவிவிட்ட அம்போடு ஓடிப்போய்,

244. இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி - வெண்ணெய் போன்ற வெண்மையான கொழுப்பு (அம்பு தைத்த இடத்தில்) மிகுதியாய் வெளிவர

245. நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின் - மார்பில் புண் ஏற்பட்டு, மண் தின்ற (மண்ணைத் தோண்டியதால் தேய்ந்து போன) கொம்போடு,

246. நெறிக் கெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின் - வழியை விட்டு விலகிக் கிடக்கின்ற, கரிய சொரசொரப்புள்ள கழுத்தினையுடைய,

247. இருள் துணிந்தன்ன ஏனம் காணின் - இருட்டை வெட்டிப்போட்டதைப் போன்ற காட்டுப்பன்றியைக் கண்டால்,

248. முளி கழை இழைந்த காடுபடு தீயின் – உலர்ந்த மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில்

249. நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து - அடர்ந்த புகை வீசாமல், வாட்டி மயிர்போக வழித்துவிட்டு (வெந்ததை)உண்டு,

250. துகள் அறத் துணிந்த மணிமருள் தெள் நீர் – குற்றமற்ற தெளிந்த நீலமணியை ஒத்த தெளிந்த நீரை,

251. குவளை அம் பைஞ்சுனை அசைவிடப் பருகி - குவளை மலரால் அழகுபெற்ற புதிய நீர் கொண்ட சுனையில் களைப்பு நீங்கக் குடித்து

252. மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக்கண் பொதியினிர் - மீதம்வைத்த தசையைக் கொண்ட பருத்த வடிவுடைய மூட்டையுடையராய்,

253. புள் கை போகிய புன்தலை மகாரோடு - வளையல்கள் கையிலிருந்து போவதற்குக் காரணமான வாராத தலையையுடைய உங்கள் பிள்ளைகளுடன் (பிள்ளையைப் பெற்ற மகளிர் கைவளையல்களை நீக்கிவிடுவது மரபு)

254. அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் – இரவுப் பொழுதில் செல்லாமல் உங்களைப் பாதுகாத்துக்கொண்டு உங்கள்

255. இல் புக்கன்ன கல் அளை வதிமின் - வீட்டிற்குள் நுழைவதைபோல்  மலைக்குகைகளில் தங்குங்கள்

கருத்துரை:

மலையைச் சேர்ந்த வழியினையுடைய காட்டில் நீங்கள் சென்றால், பரணில் உள்ள தினைக் காவலன் எய்த அம்பினால் மார்பில் புண்பட்டு விழுந்த பன்றியைக் காண்பீர்கள். அங்தப் பன்றி, வெண்மையான கொழுப்பையும், சொரசொரப்பான கழுத்தையும், கரிய நிறத்தையும் உடையதாக இருக்கும். மூங்கில் உரசுவதால் உண்டான தீயில் வாட்டி, அந்தப் பன்றியை மயிர்போகச் சீவித் தின்று, குவளை மலர்கள் உள்ள சுனையின் தெளிந்த நீரைக்  களைப்புத் தீரக் குடியுங்கள். தின்னாமல் மிகுந்த தசை உணவைப்  பொதியாகக் கட்டிக்கொண்டு,  உங்கள் மனைவியரின் வளையல்கள் அவர்கள் கைகளிலிருந்து  நீங்குவதற்குக் காரணமான வாராத தலையையுடைய உங்கள் பிள்ளைகளுடன், இரவுப்பொழுதில் செல்லாமல் உங்களைப் பாதுகாத்து, உங்கள் இல்லத்துள் புகுந்தாற்போல, வழியில் உள்ள மலைக் குகையில் தங்குங்கள்.

 

செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல்

 

அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி,
வான் கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து

கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்;

 

அருஞ்சொற்பொருள்:

256. அல்இரவு;  அல்கி -  தங்கி; அசைவு- இளப்பு; ஓம்பிதவிர்த்து
257.
வான் கண் - வானத்தில்; விடியல்விடியற்காலம்;  ஏற்றெழுந்துஉறக்கத்திலிருந்து எழுதல்

258. கானகப் பட்ட - காட்டில் உள்ள; செந்நெறிசெம்மையான வழி; கொண்மின்செல்லுங்கள்

பதவுரை:

256. அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி - இரவில் நீங்கள் யாவரும் கூடியிருந்து இளைப்பாறி

257. வான் கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து - வானத்தில் கதிரவனின் கதிர் விரிந்த விடியற்காலையில் உறக்கத்திலிருந்து எழுந்து

258. கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்- காட்டில் உள்ள செம்மையான வழியில் செல்லுங்கள்.

கருத்துரை:

இரவில் நீங்கள் யாவரும் கூடியிருந்து இளைப்பாறி, கதிரவனின் கதிர் விரிந்த விடியற்காலையில் உறக்கத்திலிருந்து எழுந்து, காட்டில் உள்ள செம்மையான வழியில் செல்லுங்கள்.

 

முன் எச்சரிக்கைகள்

 

கயம் கண்டன்ன அகன் பை அம் கண்

மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்           260

 

துஞ்சு மரங் கடுக்கும் மாசுணம் விலங்கி,
இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர்
மறந்து அமைகல்லாப் பழனும் ஊழ் இறந்து,
பெரும் பயம் கழியினும் மாந்தர் துன்னார்

இருங்கால் வீயும் பெருமரக் குழாமும்                    265

 

இடனும் வலனும் நினையினர் நோக்கிக்
குறி அறிந்து அவை அவை குறுகாது கழிமின்;

கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்துக்
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின்

நாடு காண் நனந்தலை மென்மெல அகன்மின்      270

 

 

 

அருஞ்சொற்பொருள்:

259. கயம்  - குளம்; கண்டன்ன  - கண்டாற்பொன்ற; அகன்  - அகன்ற; பை - பசிய;  அம் - அழகிய; கண் - இடம்

260. மைந்து - வலிமை; மலிதல் – மிகுதல்;  மதன் - வலிமை

261. துஞ்சுதல்  - உறங்குதல் (இங்கு கீழே விழுந்து கிடப்பதைக் குறிக்கிறது);  கடுக்கும்  - ஒக்கும்; மாசுணம் – பெரும்பாம்பு

262. இகந்து  - கடந்து; சேண் - தொலை  

263. மறந்து அமைகல்லா – மறந்திருக்க இயலாத;  பழன் -மழம்;  ஊழ் -முறைமை; இறந்து -கெட்டு

264. பயம்  -பயன் ; கழியினும் - சென்றாலும்;  துன்னார் - அணுகார்

265. இருங்கால் – நீண்ட காம்பு;  வீ - பூ ; குழாம் – கூட்டம்

266. இடனும்  வலனும்  -இடப்பக்கமும் வலப்பக்கமும்;  நினையினர் – விழிப்புள்ளவராய்; 

267. குறுகாது  - அணுகாது; கழிமின் -செல்லுங்கள்

268. கோடு - கிளை; முரஞ்சிய – முதிர்ந்த; கோளி – பூவாது காய்க்கும் ; ஆலம் – ஆலமரம்

269. இயம் – இசைக்கருவி;  அன்ன- போல;  குரல் - ஒலி;  புணர் புள்ளின் – பறவைகளின் கூட்டத்தையுடைய

270. நனந்தலை – அகன்ற இடம்;  மென்மெல - மெல்ல மெல்ல ;  அகன்மின் – செல்லுங்கள்

 

 

 

பதவுரை:

259. கயம் கண்டன்ன அகன் பை அம் கண் - குளத்தைப் பார்த்ததைப் போன்ற, அகன்ற பசுமையான(குளிர்ந்த), அழகிய அவ்விடத்தே

260. மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் – வலிமை மிகுந்து கோபத்துடனிருக்கும் யானையின் செருக்கை அழிக்கக்கூடிய

261. துஞ்சு மரங் கடுக்கும் மாசுணம் விலங்கி -   கீழே விழுந்துகிடக்கும் மரத்தைப் போன்ற பெரிய பாம்புகளிடமிருந்து விலகி,

262. இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர் - எல்லைகடந்து தொலைதூரத்திலும் மணம்வீசும் பூவும், உண்டவர்கள்

263. மறந்து அமைகல்லாப் பழனும் ஊழ் இறந்து - மறந்து இருக்கமுடியாத பழங்களும், வழக்கத்தை மீறி

264. பெரும் பயம் கழியினும் மாந்தர் துன்னார் -(அவற்றால்)பெரும் பயன் மிகுந்தாலும், மனிதர் (அவற்றை)நெருங்கார்

265. இருங்கால் வீயும் பெருமரக் குழாமும்  - நீண்ட காம்பையுடைய (அப்)பூவினையும், (அப்பழங்களையுடைய) பெரிய மரக்கூட்டங்களையும்   

266. இடனும் வலனும் நினையினர் நோக்கிக் - இடப்பக்கமும், வலப்பக்கமும் கவனத்துடன்  பார்த்து

267. குறி அறிந்து அவை அவை குறுகாது கழிமின் - (அவற்றின்)அடையாளங்களை அறிந்து அவற்றையெல்லாம் அணுகாமல் போவீராக;

268. கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து - கிளைகள் பலவும் முற்றிப்போன, பூவாது காய்க்கும் மரமாகிய ஆலமரத்தில்

269. கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் - ஒன்றுசேர்ந்த பல இசைக்கருவிகளை ஒத்த  (இசைத்ததைப்)போன்ற பறவைகளின் கூட்டத்தையுடைய

270. நாடு காண் நனந்தலை மென்மெல அகன்மின் – நாடுகளை எல்லாம் காணும்படி, அகன்ற இடத்தையுடைய  மலையில் மெல்லமெல்ல  செல்லுங்கள்.

கருத்துரை:

குளத்தைப் பார்த்ததைப் போன்ற, அகன்ற பசுமையான(குளிர்ந்த), அழகிய அவ்விடத்தே வலிமை மிகுந்து கோபத்துடனிருக்கும் யானையின் செருக்கை அழிக்கக்கூடிய, கீழே விழுந்துகிடக்கும் மரத்தைப் போன்ற பெரிய பாம்புகள் இருக்கும். அவைகளிடமிருந்து விலகிச் சென்றால்,  தொலைதூரத்திலும் மணம்வீசும் பூக்களும், உண்டவர்களால் மறக்க முடியாத அளவுக்குச் சுவையுள்ள  பழங்களும் இருக்கும் இடங்களைக் காண்பீர்கள். அவை பயன் மிகுந்தவையாக இருந்தாலும், மனிதர்கள் அவற்றை நெருங்கார். நீண்ட காம்பையுடைய அப் பூக்களையும், அப் பழங்கள் உள்ள பெரிய மரக்கூட்டங்களையும் இடப்பக்கமும், வலப்பக்கமும் கவனத்துடன்  பார்த்து, அவற்றின் அடையாளங்களை அறிந்து, அவற்றையெல்லாம் அணுகாமல் செல்லுங்கள். கிளைகள் பலவும் முற்றிய, பூவாது காய்க்கும் மரமாகிய ஆலமரத்தில் ஒன்றுசேர்ந்த பல இசைக்கருவிகளையொப்ப ஒலி செய்யும் பறவைகளின் கூட்டத்தையுடைய நாடுகளை எல்லாம் காணும்படி, அகன்ற இடத்தையுடைய  மலையில் மெல்லமெல்ல  செல்லுங்கள்.

குறவரும் மயங்கும் குன்றம்

 

மா நிழற் பட்ட மரம் பயில் இறும்பின்
ஞாயிறு தெறாஅ மாக நனந்தலை
தேஎம் மருளும் அமையம் ஆயினும்,
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும்

குறவரும் மருளும் குன்றத்துப் படினே,                  275

 

அகன்கண் பாறைத் துவன்றிக் கல்லென

இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின்;

 

அருஞ்சொற்பொருள்:

271. மா நிழல் பெரிய நிழல்; இறும்பு குறுங்காடு
272.
தெறுதல் சுடுதல்; நனந்தலை - அகன்ற இடம்
273.
தேஎம்  - திசை; மருளும் - மயங்கும்;  அமையம் - பொழுது,
274.
இறாஅ  - இற்றுப்போகாத;  சிலையர்வில்லையுடையவர்கள்;  மாவிலங்கு;  தேர்புதேடி;  கொட்கும் - திரியும்

275.மருளும் - மயங்கும்; படின் - சென்றால்

276. அகன்கண் - அகன்ற இடம்;  துவன்றி - கூடி; கல்லென - ஒலிக்குறிப்பு

277. இயங்கல் - செல்லுதல்;  ஓம்பி  - தவிர்த்து; இயங்கள் - இசைக்கருவிகள்; தொடுமின்இசைப்பீர்களாக

 

 

பதவுரை:

271. மா நிழற் பட்ட மரம் பயில் இறும்பின் - பெரிய நிழல் தரும் மரங்கள் நெருங்கிவளர்ந்த குறுங்காட்டில்

272. ஞாயிறு தெறாஅ மாக நனந்தலை - கதிரவனால் சுடப்படாத  வான்வெளியைக்கொண்ட அகன்ற இடங்களில்,

273. தேஎம் மருளும் அமையம் ஆயினும் - திசை தடுமாறும் காலமாயினும்
274.
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் - முறிந்துபோகாத வலிய வில்லையுடையவர்கள் விலங்குகளைத் தேடித் திரியும்

275. குறவரும் மருளும் குன்றத்துப் படினே -மலையில் வாழும்  குறவர்களும் திசை தெரியாமல் மயங்கும்  குன்றுகளுக்கு நீங்கள் சென்றால்

276. அகன்கண் பாறைத் துவன்றிக் கல்லென - அகன்ற இடத்தையுடைய பாறையில் கூடி, கல்லென்னும் ஓசை எழும்படி,

277. இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின் மேற்செல்லுதலைத் தவிர்த்து, உமது இசைக்கருவிகளை இசைப்பீராக

கருத்துரை:

பெரிய நிழல் தரும் மரங்கள் நெருங்கிவளர்ந்த குறுங்காட்டில் கதிரவனின் வெயில் படாத  வெளியைக்கொண்ட அகன்ற இடங்கள் இருக்கும்.  அந்த இடங்களில்,  வேட்டையாடும் விலங்குகளைத் தேடித் திரியும் மலையில் வாழும்  குறவர்கள்கூட திசை தெரியாமல் மயங்குவார்கள்.  நீங்கள் அங்குச் சென்றால், அகன்ற இடத்தையுடைய பாறையில் கூடி, கல்லென்னும் ஓசை எழும்படி, மேலும் செல்லாமல், உமது இசைக்கருவிகளை இசைப்பீராக.

வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவி புரிதல்

 

பாடு இன் அருவிப் பயங் கெழு மீமிசைக்
காடு காத்து உறையும் கானவர் உளரே;

நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள்            280

 

புனல்படு பூசலின் விரைந்து வல் எய்தி,
உண்டற்கு இனிய பழனும் கண்டோர்
மலைதற்கு இனிய பூவும் காட்டி,
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற

நும்மின் நெஞ்சத்து அவலம் வீட,                          285

 

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்;
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து,

அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்,        290

 

பல திறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ;

 

அருஞ்சொற்பொருள்:

278. பாடு – ஒசை; பயம் - பயன்; கெழு – பொருந்திய; மீமிசை -உச்சி

279. உறையும் – தங்குதல் (இருத்தல்); கானவர் – குறிஞ்சி நில மக்கள்

280. நிலைத் துறை -நிலையான துறை ; வழீஇ - தப்பி; மதன் - வலிமை; அழி - அழிந்த; மாக்கள்    - மக்கள்

281. புனல் - நீர்;   வல் – விரைந்து;  எய்தி - அடைந்து

282. பழன் - பழம்

283. மலைதல் -சூடுதல்

284. ஊறு - இடையூறு;   ஆறு - வழி; முந்துற – முன் செல்ல

285. அவலம் – துன்பம்;  வீட – தீரும்படி

286. இம் - ஒலிக்குறிப்பு; கடும்பு – சுற்றம்; இனியிர் – மகிழ்ச்சியுள்ளவர்

287. மாதிரம் – திசை;  கைக்கொள்பு - உட்கொண்டு

288. ஊழ் - முறைமை; இழிபு -இறங்கி; புதுவோர் – புதியவர்கள்

289. பனிக்கும் - நடுங்கும்; நோய் – துன்பம்; கூர் – மிக்க; அடுக்கம் - பக்கமலை

290. அலர் - மலர்;  தாய - படர்ந்த ; வரி நிழல் -வரிகளையுடைய நிழல்;  அசைவு - இளைப்பு

291. திறம் - கூறுபாடு; பெயர்பவை -எழுபவவை ; கேட்குவிர் -கேட்பீர்கள் ;  மாதோ - அசைநிலை

பதவுரை:

278. பாடு இன் அருவிப் பயங் கெழு மீமிசை - ஓசை இனிமையாக உள்ள அருவிகளின்

பயன் பொருந்திய மலை உச்சியில்

279. காடு காத்து உறையும் கானவர் உளரே - காடுகளைக் காத்து வசிக்கும் குறிஞ்சி நில மக்கள் பலர் உளர்;

280. நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள் - வழக்கிலுள்ள துறையைத் தவறவிட்ட வலிமை குன்றிய மக்கள்  

281. புனல்படு பூசலின் விரைந்து வல் எய்தி - நீரில் அகப்பட்டு ஆரவாரம் செய்வதைக் கண்டு விரைந்து ஓடி வந்து அவர்களை அடைந்து

282. உண்டற்கு இனிய பழனும் கண்டோர் - உண்பதற்கு இனிமையான பழங்களையும், பார்த்தவர்கள்

283. மலைதற்கு இனிய பூவும் காட்டி - சூடுவதற்கு இனிய மலர்களையும் காட்டி

284. ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – இடையூறு நிரம்பிய பாதையில் அவர் முன் செல்ல

285. நும்மின் நெஞ்சத்து அவலம் வீட - உம்முடைய மனத்துயரம் முற்றிலும் நீங்க,           

286. இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர் - ‘இம்’ என்ற ஒலியெழுப்பும் சுற்றத்தோடே மகிழ்ச்சியுள்ளவர் ஆகுவீர்;

287. அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு - தெரிந்தவர்கள் கூறிய திசைகளைப் பின்பற்றி,

288. குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர் – குறியவும் நெடியவும் ஆகிய மலை வழியில் இறங்கி, புதியவர்கள்

289.நோக்கினும் பனிக்கும் நோய்கூர் அடுக்கத்து - பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க பக்கமலைகளில்,

290. அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் – மலர்கள் படர்ந்த வரிகளையுடைய நிழலில் தங்கி இருந்தால்

291. பல திறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ - பலவிதமான ஒலிகளை  நீங்கள் கேட்பீர்கள்

கருத்துரை:

இனிய ஓசை  உள்ள அருவிகளையுடைய மலை உச்சியில், காடுகளைக் காவல் காக்கும் கானவர் பலர் உளர். துறைதப்பி வலிமை குன்றிய மக்கள்   நீரில் அகப்பட்டு ஆரவாரம் செய்வதைக் கண்டு, விரைந்து ஓடி வந்து, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உண்பதற்கு இனிமையான பழங்களையும், சூடுவதற்கு  மலர்களையும் அவர்கள் கொடுப்பார்கள். இடையூறு நிரம்பிய பாதையில் அவர் முன் செல்ல, உம்முடைய மனத்துயரம் முற்றிலும் நீங்கி  மகிழ்ச்சி அடைவீர்கள். வழி தெரிந்தவர்கள் கூறிய திசைகளைப் பின்பற்றி குறியவும் நெடியவும் ஆகிய மலைவழியில் இறங்கிச் செல்லுங்கள். அங்குப் பார்த்தவர்கள் அஞ்சத்தக்க பக்கமலைகளில் உள்ள மரநிழலில் தங்குங்கள். நீங்கள் அந்த மரநிழலில் தங்கியிருக்கும்பொழுது, பலவகையான ஓசைகளைக் கேட்பீர்கள்.

 

மலையில் ஆரவாரம்

 

கலை தொடு பெரும்பழம் புண் கூர்ந்து ஊறலின்
மலை முழுதும் கமழும் மாதிரம் தோறும்
அருவி நுகரும் வான் அர மகளிர்,

வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்           295

 

 

தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம் புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்;

சேய் அளைப் பள்ளி எஃகு உறு முள்ளின்              300

 

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை;
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என.
அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்;
தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை               305


மலைமார் இடூஉம் ஏமப் பூசல்;
கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு,

நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்,      310

 

கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை உற்ற களையாப் பூசல்;

கலை கையற்ற காண்பு இன் நெடு வரை               315

 

நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப்
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை;
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என,

நறவு நாட் செய்த குறவர் தம் பெண்டிரொடு,                       320

 

மான்தோற் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;

நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து,                              325

 

உரவுச் சினம் தணித்துப் பெரு வெளிற் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
ஒலி கழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளிபடு பூசல்;

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு                           330

 

மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,

நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை;                            335

 

காந்தட் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டுபடு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை

மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்      340

 

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்,
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும், குன்றகச் சிலம்பும்,

என்று இவ் அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி,   345

 

அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த

மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்பக்,

 

அருஞ்சொற்பொருள்:

292. கலை – ஆண் குரங்கு; தொடுதல் – தோண்டுதல்; கூர்ந்து – மிகுந்து

293. மாதிரம் - திசை

294. அர மகளிர – தெய்வ மகளிர்

295. விசை – வேகம்;  ; வாங்குபு - வாங்கி; குடைதல் -நீராடுதல்

296. தெரிதல் -  தாளம் தெரிதல்;  இமிழ் - இசை;  இயம் -  இசைக்கருவி

297. இலங்குதல் - விளங்குதல் ;  ஏந்துதல் – நீட்டுதல்; மருப்பு -கொம்பு ;  ஒருத்தல் – யானைத் தலைவன் (தலைமைவாய்ந்த ஆண்யானை)

298. விலங்கல் - மலை;  மீமிசை -மேல்;  பணவை - பரண் ;  கானவர் – குறிஞ்சி நில மக்கள்

299. புலம் – தினைபுனம்;  புக்கு – புகுந்து ; புரிதல் – விரும்பல்

300. சேய் – நீளம்;  அளை – குகை; பள்ளி  - உறைவிடம்; எஃகு - கூர்மை

301. எய் – உடலெல்லாம் முள்ளையுடைய ஒருவகைப் பன்றி;  இழுக்கிய -  இழந்த

302. கொடுவரி - புலி; கொழுநர் - கணவர்

303. நெடு -  நெடிய; வசிதல் – பிளத்தல்;  விழுப்புண் – சீரிய புண்; 

304. அறல்  - கருமணல்; கொடிச்சியர் – மலையில் வாழும் மகளிர்

305. தலைநாள் – முதல் நாள்; இணர் – கொத்து; வேங்கை – வேங்கை மலர்

306. மலைதல் – சூடுதல்; மலைமார் – சூடும் பொருட்டு;  ஏமப்பூசல்  - அச்சம் தீர்ந்த பூசல்

307. அரை – வயிறு; கயந்தலை – மென்மையான தலை;  மடப்பிடி - பெண்யானை

308. வலிக்கு வரம்பு ஆகிய – வலிமைக்கு வரம்பாகிய; ஓம்பல் – பாதுகாத்தல்

309. ஒண் - ஒள்ளிய; கேழ் – நிறம்; வயப்புலி -வலிய புலி ;  கிளை -சுற்றம்

310. நெடு வரை – நெடிய மலை;  இயம்பும் - ஒலிக்கும்; தழங்குதல் – முழங்குதல், ஒலித்தல்  

311. கைக்கோள் – கையால் தழுவிக்கொள்ளுதல்;  மந்தி – பெண் குரங்கு

312. விடர் – மலைப்பிளப்பு;  கல்லா – தொழிலைக் கற்காத; பார்ப்பு -குட்டி

313. முறி - தளிர்;  யாக்கை - உடல்;  கிளை – சுற்றம் ; துவன்றி -நெருங்கி

314. சிறுமை  -துன்பம்; பூசல் –ஆரவாரம்

315. கலை -ஆண் குரங்கு;  கையற்ற – செயலற்ற; காண்பு – காணுதல்;  நெடு வரை – நெடிய மலை

316. மால்பு - கண்ணேணி;  நெறி  - வழி

317. தேம் - தேன்;  கொள்ளை -பிறர் ஈட்டிய பொருளை அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வது

318. குறும்பு - அரண்;  எறிந்த - அழித்த; கானவர் - குறிஞ்சி நில மக்கள்;  உவகை - மகிழ்ச்சி

319. அண்ணல் – தலைவன் (நன்னன்);   இறை  -அரசனுக்குக் கொடுக்கும் பொருள் ; சான்ம்  - பொருத்தம்

320. நறவு  - கள்; நாள் செய்த குறவர் – அதிகாலையில் குடித்த குறவர்கள்

321. கறங்க -ஒலிக்க ;   கல் - ஒலிக்குறிப்பு

322. மீமிசை  - மேல், உச்சி; அயரும் - ஆடும்; குரவை – ஒருவகை நடனம்

323. இயவு - வழி;  வந்தன்ன - வந்தைப்போல்

324. கல் – மலை;  யாறு – ஆறு; விடர் – மலைப்பிளவு;  இரங்குதல் - ஒலித்தல்

325. நெடுஞ்சுழி – நெடிய நீர்ச்சுழி; கடுங்கண் - கொடுமை;  வேழம் - யானை

326. உரவு -வலிமை ; பெரு வெளில் – பெரிய தூண்

327. விரவுதல் - கலத்தல் ;  ஓதை –ஆரவாரம்

328. கழை – மூங்கில்;  தட்டை – மூங்கிலால் செய்யப்பட்ட கருவி;  புடையுநர் – தட்டுபவர்; 

329. கிளி கடி மகளிர் – கிளிகளை விரட்டும் மகளிர்;  விளிபடு பூசல் – கூப்பிடுவதால் பிறந்த ஆரவாரம்

330. துளங்குதல் -  அசைதல்; இமில் - திமில்

331. தலை - இடம் ;  மரையான் – காட்டுப்பசு;  கதழ்தல் – விரைதல்; விடை- காளை

332. மைந்து – வலிமை

333. கோவலர் – இடையர் (முல்லை நிலத்து மக்கள்);  குறவர் – குறிஞ்சி நிலத்தைச் சார்ந்த மக்கள்; இயைந்து – சேர்ந்து;  ஆர்ப்ப - ஆரவாரிப்ப

334. குளவி – குளவி மலர்;  குறிஞ்சி – குறிஞ்சி மலர்; குழைய – வாடும்படி

335. கல் – ஒலிக்குறிப்பு; கம்பலை – ஆரவாரம்

336. காந்தள் – காந்தள் மலர்

337.  தீம் - இனிய

338. மிச்சில் - மிகையான;  காழ் - விதை; கொண்மார் – கொள்வதற்கு

339.  கடாஅ உறுக்கும் – கடா விடும்; மகாஅர்  - பிள்ளைகள்;  ஓதை – ஆரவாரம்

340. ஞெரேரென - விரைவாக

341. கழை – மூங்கில்;  ஏத்தம் - ஓசை

342. வள்ளை – ஒருவகைப் பாட்டு

343. சேம்பு – சேப்பங் கிழங்குச் செடி; ஓம்பினர் – காப்பவர் (வளர்ப்பவர்)

344. சிலம்புதல் -எதிரொலித்தல்

345. இயைந்து – சேர்ந்து;  ஈண்டி – பொருந்தி

346. அவலவும் - பள்ளங்களிலும்;  மிசையவும் - மலையிலும்;  துவன்றி – நெருங்கி

347. அலகு – எல்லை, அளவு (அளவு கருவி );  திறத்த - தன்மையையுடைய

348. கடாம் – யானையின் மத நீர், மத நீர் வெளிவரும் துளை; மலைபடு கடாஅம்  - மலைகளாகிய யானை ; மாதிரம் – திசை; இயம்ப – ஒலிக்க

 

பதவுரை:

292. கலை தொடு பெரும்பழம் புண் கூர்ந்து ஊறலின் - ஆண் கருங்குரங்கு தோண்டின பெரிய பலாப்பழம் காயம் மிகுந்து ஊற்றெடுப்பதால்,

293. மலை முழுதும் கமழும் மாதிரம் தோறும் - மலை முழுதும் மணம் கமழும் திசைகள்தோறும்

294. அருவி நுகரும் வான் அர மகளிர் - அருவியில் குளித்து அதன் பயனை நுகரும் வானத்துத் தெய்வ மகளிர்,

295. வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் – அருவிநீர் விழும் வேகத்தைத் தவிர்க்காமல், அதைத் தம் கையில் வாங்கி, நீரைக் குடையும்போதெல்லாம்

296. தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை - தாளம் தெரிகின்ற உங்களுடைய  இசைக்கருவி போன்ற இனிய ஓசையும்

297. இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் - ஒளிர்கின்றதும் ஏந்தி நிற்பதுமான கொம்பினையுடைய தன் இனத்தைப்பிரிந்த ஒற்றை ஆண்யானை,

298. விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் – மலைமீது உள்ள பரணில் உள்ள கானவர்

299. புலம் புக்கு உண்ணும் புரிவளைப் பூசல் – தினைப்புனத்தில் புகுந்து பயிர்களைத் தின்ன, அதனை விரட்ட, அவர்கள் செய்த ஆரவாரம்

300. சேய் அளைப் பள்ளி எஃகு உறு முள்ளின் - நெடிய குகையைப் படுக்குமிடமாகக்கொண்ட, கூர்மையான முட்களையுடைய   

301. எய் தெற இழுக்கிய கானவர் அழுகை - முள்ளம்பன்றி தாக்கியதால் தவறிவிழுந்த குறவருடைய அழுகையும்

302. கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில் - புலி பாய்ந்ததால் தம் கணவர் மார்பில் ஏற்பட்ட

 303. நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என - நீண்ட பிளவாகிய விழுப்புண்ணை ஆற்றுவதற்காக,

304. அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல் - ஆற்றுக் கருமணல் போல் அலை அலையான நெறிப்பு உள்ள மயிரினையுடைய இடைச்சியர் பாடலோசையும்;

305. தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை -   முதல்நாளில் பூத்த பொன் போன்ற கொத்தினையுடைய வேங்கை மலர்களைச்

306. மலைமார் இடூஉம் ஏமப் பூசல் - சூடுவதற்குப் பெண்கள் செய்யும் அச்சம் தீர்ந்த  ஆரவாரமும்;

307. கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி - கன்றை வயிற்றில் கொண்ட மென்மையான  தலையையுடைய  பெண்யானை

308. வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் - வலிமைக்கு எல்லையாகிய  அதன் கணவன் உணவைக் கொண்டுவந்து பாதுக்காக்கப் போனதால்

309. ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு - ஒளிரும் நிறமுள்ள வலிமையுள்ள புலி பாய்ந்ததால், தன் சுற்றத்துடன்

 310. நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் -  உயர்ந்த மலையில் கூப்பிடும் இடியோசைபோல் முழங்கும் குரலும்;

311. கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி – தன் குட்டியைக் கையால் தழுவிக்கொள்வதை மறந்த கரிய விரலையுடைய பெண் குரங்கு,

312. அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு - எளிதாய் அணுகமுடியாத பிளவுக்குள் விழுந்துவிட்ட தன் தாவுதலை முற்றிலும் கற்றுக்கொள்ளாத குட்டிக்காக

313. முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றி - தளிர்களை மேய்ந்து வளர்ந்த உடம்பினையுடைய சுற்றத்தோடே கூடிநின்று

314. சிறுமை உற்ற களையாப் பூசல் – துன்பப்பட்ட, யாராலும் களையமுடியாத பெரிய அமளியும்

315. கலை கையற்ற காண்பு இன் நெடு வரை - ஆண்கருங்குரங்கு ஏறமுடியாதென்று கைவிட்ட, பார்ப்பதற்கு இனிய உயர்ந்த மலையில்

316. நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப் - உறுதியாக நட்டுச் சார்த்திய மூங்கில் ஏணிகள் வழியாகக்கொண்டு

317. பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை - பெரும் பயன் உண்டாகும்படி தேனீக்கள் சேர்த்துவைத்த தேனை கொள்ளையாகக் கொண்ட

318. அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை - எளிதாய்க் கிட்டமுடியாத தேனடைகளை அழித்த கானவர் மகிழ்ச்சியால் உண்டான ஆரவாரமும்

319. திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என - திருத்தமாகச்செய்யப்பட்ட வேலையுடைய தலைவனுக்கு(நன்னனுக்கு) புதிதாகக் கொடுப்பதற்கு இவை பொருந்தும் எனக் கருதி

320. நறவு நாட் செய்த குறவர் தம் பெண்டிரொடு – கள்ளை அதிகாலையில் குடித்த  குறவர்கள் தம் பெண்களோடு          

321. மான்தோற் சிறு பறை கறங்கக் கல்லென - மான் தோலால் செய்யப்பட்ட சிறுபறையை ஒலிக்க, கல் என்னும் ஓசை உண்டாக

322. வான் தோய் மீமிசை அயரும் குரவை - விண்ணைத் தொடும் மலையுச்சியில் ஆடும் குரவை ஒலியும்

323. நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன - நல்ல அழகிய நெடுந்தேர் தன் தெருவில் வந்ததுபோல்

324. கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை -மலையிலிருந்து வரும் ஆற்றின் ஒலியை மலைப்பிளவுகள் எதிரொலி செய்வதால் உண்டாகும் இன்னிசையும்

325. நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து - நெடிய நீர்ச்சுழலில் அகப்பட்ட வலிமையான யானையின்

326. உரவுச் சினம் தணித்துப் பெரு வெளிற் பிணிமார் - மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு,

327. விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை - வடமொழி கலந்த மொழியில் பேசி அவற்றை பயிலச் செய்யும் யானைப் பாகர்களுடைய ஓசையும்

328. ஒலி கழைத் தட்டை புடையுநர் புனந்தொறும் - ஒலிக்கும் மூங்கில் தட்டையைப் புடைத்துக் கிளி விரட்டும் ஓசையும், புனங்கள்தோறும்

329. கிளி கடி மகளிர் விளிபடு பூசல் - கிளியை விரட்டுகின்ற பெண்களின் கூச்சலால் எழும் ஆரவாரமும்;

330. இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - தன் கூட்டத்தைவிட்டுப் பிரிந்து வந்த அசையும் திமிலையுடைய நல்ல காளையும்

331. மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை - மலையிலிருந்து புறப்பட்டுவந்த காட்டுமாட்டின் சீறியெழுந்த காளையும்,

332. மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி - குறையாத வலிமையுடன் புண் உண்டாகும்படி  ஒன்றையொன்று  தாக்கி

333. கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப - இடையர்கள் குறவர்களோடு சேர்ந்து தத்தம் வெற்றி தோல்விகளுக்காக ஆரவாரிக்க,

334. வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய - செழுமையான இதழ்களைக்கொண்ட காட்டுமல்லிகையும் குறிஞ்சிப்பூவும் வாடும்படி

335. நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை – நல்ல காளைகள் சண்டையிடும் கல்லென்ற ஆரவாரமும்;     

336. காந்தட் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி - காந்தளின் துடுப்பைப்போன்ற, கமழுகின்ற மடலால் அடித்து ஓச்சி

337. வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம் - உருண்டு திரண்ட குலைகளையுடைய பலாவின் சுளைகள் நன்கு பழுத்த இனிய பழத்தினை

338. உண்டுபடு மிச்சில் காழ் பயன் கொண்மார் - தின்று விழுந்த மீதமான பழங்களின் கொட்டைகளின் பயன் கொள்வதற்கு

339. கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை – கன்றுகளைக் கட்டிக் கடாவிடும்  பிள்ளைகளின் ஓசையும்;

340. மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரென -   மழைபொழிவதைப் போல் சாறு பொழிதலையுடைய ஆலைகள்தோறும் விரைவாகக்

341. கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் - கரும்பின் கணுக்களை உடைப்பதால் ஏற்படும் ஒலியும்;

342. தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும் - தினையைக் குற்றுகின்ற பெண்களுடைய தாளத்தோடு கூடிய வள்ளைப்பாட்டும்;

343. சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் - சேம்பையும் மஞ்சளையும் பேணிக் காப்போர்

344. பன்றிப் பறையும், குன்றகச் சிலம்பும் – பன்றிகளை விரட்டுவதற்காகக் கொட்டும் பறையொலியும்; குன்றில் தோன்றும் அவற்றின் எதிரொலியும்;

345. என்று இவ் அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி - என்று இந்த அனைத்தும், ஒத்து ஒன்றாகப் பெருகியொலித்து

346. அவலவும் மிசையவும் துவன்றி  பல உடன் -  பள்ளங்களிலும் மலையிலும் தோன்றும் ஒலி அனைத்தும் கூடிப் பலவும் ஒன்றுசேர்தலால்,

347. அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த - அளக்கக்கூடிய எந்த அளவையும் மீறிய, எண்ண முடியாத தன்மையுடையனவாய்

348. மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்ப – மலை என்னும் யானை பிளிரும் ஒலிபோல் திசைகள்தோறும் ஒலிக்க

 

கருத்துரை:

மலையில் ஆண் கருங்குரங்கு பலாப்பழத்தைத் தோண்டியதால், பலாப்பழம் காயம் மிகுந்து ஊற்றெடுத்து மலை முழுதும் மணம் கமழும். அந்த மலையில் உள்ள அருவியில் குளித்து அதன் பயனை நுகரும் வானத்துத் தெய்வ மகளிர், நீரைக் குடைந்து விளயாடும்பொழுதெல்லாம் தாளம் தெரிகின்ற உங்களுடைய  இசைக்கருவி போன்ற இனிய ஓசை பிறக்கும். தினைப்புனத்தில் புகுந்து தினையைத் தின்னும் ஆண் யானையை மலையின் மேலிருக்கும் பரணில் இருந்து காவல் செய்யும் கானவர் விரட்டும்பொழுது ஆரவாரம் உண்டாகும். நெடிய குகையில் தங்கும் முள்ளம்பன்றி தாக்கியதால் தவறி விழுந்த குறவருடைய அழுகை ஒலி எழும். புலி பாய்ந்ததால் தம் கணவர் மார்பில் ஏற்பட்ட நீண்ட பிளவாகிய விழுப்புண்ணை ஆற்றுவதற்காக, ஆற்றுக் கருமணல்போல் அலை அலையான நெறிப்பு உள்ள மயிரினையுடைய இடைச்சியர் பாடும் ஓசை கேட்கும். முதல்நாளில் பூத்த பொன் போன்ற கொத்தினையுடைய வேங்கை மலர்களைச் சூடுவதற்குப் பெண்கள் புலிபுலி என்று அச்சமில்லாமல் ஆரவாரம் செய்வர். கருவுற்ற  பெண்யானைக்கு உணவைக் கொண்டுவந்து கொடுத்துப் பாதுகாப்பதற்காகச் சென்ற களிற்றைப் புலி தாக்கியதால்,  பெண்யானை கதறித் தன் சுற்றத்தாரை அழைக்கும் குரல்,  இடி முழக்கம் போல் ஒலிக்கும். தன் குட்டியைத் தழுவ மறந்த பெண் குரங்கு, எளிதாய் அணுகமுடியாத மலைப்பிளவுக்குள் விழுந்துவிட்ட தன் தாவுதலை முற்றிலும் கற்றுக்கொள்ளாத குட்டிக்காகத் தன் சுற்றத்தோடு கூடிநின்று, துன்பத்தால் ஆரவாரம் செய்யும். ஆண்கருங்குரங்கு ஏறமுடியாதென்று கைவிட்ட, உயர்ந்த மலையில், உறுதியாக நட்டுச் சார்த்திய மூங்கில் ஏணிகள் வழியாக தேனீக்கள் சேர்த்து வைத்தத் தேனை கொள்ளையாகக் கொண்ட கானவர், மகிழ்ச்சியால்  ஆரவாரம் செய்வர்.  மலையில் உள்ள பொருள்களைத் தொகுத்துக்கொண்ட குறவர்கள், இவை நன்னனுக்குத் பொருத்தமான திறைப்பொருளாக அமையும் என்று மகிழ்ந்து, விடியற்காலையில் கள்ளைக் குடித்து, தம் மனைவியருடன் மான்தோல் போர்த்திய சிறுபறையைக் கொட்டி மகிழ்ச்சியில் குரவைக் கூத்தாடி ஒலி எழுப்புவர்.  நல்ல அழகிய நெடுந்தேர் தெருவில் ஓடி வந்ததுபோல், மலையிலிருந்து வரும் ஆற்றின் ஒலியை மலைப்பிளவுகள் எதிரொலி செய்யும். பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட வலிமையான யானையின் மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு, வடமொழி கலந்த மொழியில் பேசி அவற்றைப் பயிலச் செய்யும் யானைப் பாகர்களுடைய ஆரவாரம் ஒருபக்கம் எழும்.  ஒருபக்கம், மூங்கில் தட்டையைப் புடைத்துக் கிளிகளை  விரட்டும் மகளிரின் ஓசையும், புனங்கள்தோறும் கிளிகளை விரட்டுகின்ற பெண்களின் கூச்சலால் எழும் ஆரவாரமும் கேட்கும். தன் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த காளையும்,  மலையிலிருந்து வந்த  காளையும்  வலிமையுடன் புண் உண்டாகும்படி ஒன்றை ஒன்று தாக்க, முல்லை நிலத்தின் கோவலர், குறிஞ்சி நிலத்தின் குறவர்களுடன் சேர்ந்து வெற்றி தோன்ற ஆரவாரிப்பர். செழுமையான இதழ்களைக்கொண்ட காட்டுமல்லிகையும் குறிஞ்சிப்பூவும் வாடும்படி காளைகள் போரிடும் ஆரவாரம் இருக்கும்.      காந்தளின் துடுப்புப் போன்ற கமழும் மடலால் அடித்து, வளமான குலைகளை உடைய பலாவின் சுளை முற்றின இனிய பழத்தை உண்டு, அதன் மிகையான விதையின் பயனைக் கொள்வதற்காக, கன்றுகளைக் கட்டிக் கடா விடும் பிள்ளைகளின் ஆரவாரம் கேட்கும். மழைபொழிவதைப் போல் சாறு பிழியப்படும்  ஆலைகள்தோறும் விரைவாகக் கரும்பின் கணுக்களை நறுக்குவதால் ஏற்படும் ஒலி இருக்கும். தினையைக் குத்துகின்ற மகளிருடைய  வள்ளைப் பாட்டும், சேம்பையும் மஞ்சளையும் வளர்த்துக் காப்பவர்கள் பன்றியை விரட்டுவதற்குக் கொட்டும் பறை ஓசையும் மலையில் எதிரொலிக்கும். இவ்வோசைகள் யாவும், நிரம்பி ஒன்றுசேரப் பொருந்தி, பள்ளங்களிலும் மலையிலும், நெருங்கிப் பலவற்றுடன், எல்லை இல்லாத பெருமளவில் மலையில் எழும் ஒலி,  யானை பிளிரும் ஒலிபோல் திசைகள்தோறும் ஒலிக்கும்.

 

சிறப்புக் குறிப்பு:

விரவு மொழி பயிற்றும் பாகர்: போர்க்களத்தில் வெவ்வேறு மொழி பேசும் வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட யானைகள் அவை பழகிய வடமொழி அல்லது பிற மொழிகளிலேயே கட்டளைகளைப் புரிந்துகொள்ளும். அத்தகைய யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப் பாகர்கள்  பிறமொழிகளைக் கற்றுத் தேர்ந்து அவற்றிலேயே யானைகளுக்குக் கட்டளைகளை இட்டுப் பழக்கியுள்ளனர். இதனையே விரவு மொழி பயிற்றும் பாகர் என்ற வரி உறுதிப்படுத்துகிறது. இதே வரி முல்லைப்பாட்டிலும் (35-36) காணப்படுகிறது.

நன்னனது மலை

 

குரூஉக்கண் பிணையற் கோதை மகளிர்

முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண்,           350

 

விழவின் அற்று அவன் வியன்கண் வெற்பே;
கண்ண் தண்ண் எனக் கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும்,
இன்னும் வருவதாக நமக்கு எனத்

தொல்முறை மரபினர் ஆகிப் பல்மாண்                  355

 

செரு மிக்குப் புகலும் திரு ஆர் மார்பன்
உரும் உரறு கருவிய பெருமலை பிற்பட,

இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்

நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக்

கைதொழூஉப் பரவி பழிச்சினிர் கழிமின்;             360

 

அருஞ்சொற்பொருள்:

349. குரூஉக்கண்பல நிறங்கள் பொருந்திய ; பிணையல் ஒன்று சேர்க்கை ; கோதை - மாலை

350. முழவு -மத்தளம் ;  வியலுள் - அகன்ற இடம்;  ஆங்கண் -அவ்விடம், ஊர், இடம்

351. வியன்கண்அகன்ற இடம்;  வெற்பு - மலை
352.
கண்ண் தண்ண்கண் குளிர

355. தொல்முறை மரபு பழைய உறவினர் போன்ற முறைமை ; பல்மாண்    - பல மாட்சிமை

356. புகலுதல் கொண்டாடுதல், விரும்புதல்; திரு ஆர் மார்பன்திருமகள் தங்கிய மார்பினன்( செல்வப் பெருமை உடைய நன்னன்)

357. உரும்  - இடி ; உரறுதல் முழங்குதல், இடித்தல்;  கருவியகூட்டத்தையுடைய; பிற்படபின்னால் செல்ல

358. இறும்பூது -வியப்பு ;  கஞலியநெருங்கிய; குரல் யாழுக்கு ஆகுபெயர்

359. நறுங்கார் -நறுமணமான கரிய ; அடுக்கம் - மலை ;  குறிஞ்சிகுறிஞ்சிப்பண்

360. கைதொழூஉகையால் தொழுது; பரவி  - பாராட்டி ; பழிச்சுதல் -புகழ்தல் ; கழிமின்செல்லுங்கள்

பதவுரை:

349. குரூஉக்கண் பிணையற் கோதை மகளிர் - (பல)நிறங்கள் பொருந்திய  மலர்களால் கட்டப்பட்ட  மாலை அணிந்த பெண்கள்

350. முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண்முரசுகள் ஓயாமல் ஒலிக்கும் அகன்ற ஊரில்                              

351. விழவின் அற்று அவன் வியன்கண் வெற்பே - திருவிழாவைப் போன்றது  நன்னனுடைய அகன்ற இடத்தைக்கொண்ட மலை;
352.
கண்ண் தண்ண் எனக் கண்டும் கேட்டும் - கண் குளிரக் கண்டும் செவி குளிரக் கேட்டும்,

353. உண்டற்கு இனிய பல பாராட்டியும் - உண்ணுவதற்கு இனியவை பலவற்றை உரிமையுடன் கொண்டும்
354.
இன்னும் வருவதாக நமக்கு என - இனியும் வருவதாக நமக்கு என்று

355. தொல்முறை மரபினர் ஆகிப் பல்மாண்பழைய உறவினர்போலும் முறைமை உடையவர்ளாக பல மாட்சிமைப்பட்ட

356. செரு மிக்குப் புகலும் திரு ஆர் மார்பன்போரிடுவதில் வெற்றி அடைந்த, செல்வப் பெருமை மிக்க மன்னன்
357.
உரும் உரறு கருவிய பெருமலை பிற்பட - இடி முழங்கும் மேகக்கூட்டத்தினையுடைய பெரிய மலைகள் உமக்குப் பின்னாகப்போக

358. இறும்பூது கஞலிய இன்குரல் விறலியர்வியப்பு மிக்க யாழையுடைய விறலியர்

359. நறுங்கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடி -நறுமணமான கரிய மலைத்தொடரில் குறிஞ்சிப்பண்ணைப் பாடி,

360. கைதொழூஉப் பரவி பழிச்சினிர் கழிமின் இறைவனை வணங்கிப் புகழ்ந்து செல்வீர்

 

கருத்துரை:

பல நிறங்கள் பொருந்திய மலர்களைக்கொண்டு கட்டப்பட்ட மாலைகள் அணிந்த பெண்கள் ஆடுவதற்கு ஏற்ப முழவு ஒலிக்கும் கண் உறக்கம் அறியாத அகன்ற ஊரில் நடைபெறும்  திருவிழாக்களை ஒத்தது நன்னுடைய  அகன்ற இடத்தையுடைய மலை. கண்குளிரக் கண்டும், செவிகுளிரக் கேட்டும், உண்ணுதற்குரிய பல உணவுகளைக் கொண்டாடி உண்டும், ‘மேலும் இத்தகைய இன்ப நுகர்ச்சி எய்துவதாக நமக்குஎன்று  நீங்கள் விரும்பிப் பழைய உறவினர் போலும் முறைமை உடையவர்களாகச் சில நாட்கள் அங்குத் தங்குங்கள். பல சிறந்த போர்களில் வெற்றி அடைந்த, செல்வப் பெருமை மிக்க நன்னனின் இடி முழங்கும் முகில் கூட்டத்தையுடைய பெரிய மலை உங்கள் பின்னால் செல்ல, வியப்பு மிக்க யாழையுடைய விறலியர் நறுமணமான கரிய மலையில் குறிஞ்சிப்பண்ணில் பாட, இறைவனைத் தொழுது, பாராட்டிப்  புகழ்ந்து செல்லுங்கள்

 

குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி

மைபடு மாமலை பனுவலின் பொங்கி
கை தோய்வு அன்ன கார்மழைத் தொழுதி
தூஉய் அன்ன துவலை தூற்றலின்,
தேஎம் தேறாக் கடும்பரிக் கடும்பொடு,

காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல்           365

 

கூவல் அன்ன விடரகம் புகுமின்;
இருங்கல் இகுப்பத்து இறுவரை சேராது,
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து,
நின்று நோக்கினும் கண் வாள் வெளவும்

மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு,       370

 

தண்டு கால் ஆகத் தளர்தல் ஓம்பி,
ஊன்றினிர் கழிமின் ஊறு தவப் பலவே;
அயில் காய்ந்தன்ன கூர்ங்கற் பாறை
வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்துக்          

கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின்;              375

அருஞ்சொற்பொருள்:

361. மை - கருமை;  பனுவல் -பஞ்சு

362. தோய்தல் – பொருந்துதல் (தொடுதல்);  அன்ன- போல;  கார்மழை – கார்காலத்து மேகம்;  தொழுதி – கூட்டம்

363. தூஉய் – தூவல்;  அன்ன – போல;  துவலை – மழைத்தூவல்;

364. தேஎம் - திசை; தேறா – அறியாத; பரிதல்  – ஓடுதல்; கடும்பு – சுற்றம்

365. கா -காவடி ; இயம் – இசைகருவி;  தொய்படாமல்   - நனையாதபடி

366. கூவல் - கிணறு;  அன்ன – போல;  விடர் -குகை;  புகுமின் -புகுந்துகொள்ளுங்கள்

367. இருங்கல் -பெரியகல்;  இகுப்பம் – திரட்சி;  இறுவரை -முறிந்த மலை

368.  ஆர் -நிறைவு ;  இடர் – துன்பம்;  அழுவம் – பள்ளம்

369.வாள் - ஒளி;  வெளவும் -கவ்வும்

370. மண் – மத்தளம் போன்றவற்றில் பூசும் மார்ச்சனை (கருஞ்சாந்து); கனை – செறிவு ;  தலைக்கோல் -    காவுமரம்

371. தண்டு – முரசை அடிக்கும் குறுந்தடி; ஓம்பி – தடுத்து

372. ஊன்றினிர் - ஊன்றி;  கழிமின் – செல்லுங்கள்;  ஊறு - இடையூறு; தவ -மிகுதியாக ;

373. அயில் -வேல் 

374. புறந்தரூஉம் - ;  இன்னல் – துன்பம்;  இயக்கம் - வழி

375. கதிர் – கதிரவன்;  அமயம் – சமயம் (பொழுது); கழிமின் – செல்லுங்கள்

பதவுரை:

361. மைபடு மாமலை பனுவலின் பொங்கி – கரிய நிறமுடைய  பெரிய மலையில், பஞ்சுபோலப் பொங்கியெழுந்து

362. கை தோய்வு அன்ன கார்மழைத் தொழுதி - கையால் எட்டித்தொடமுடியும் என்பதைப் போன்ற கார்காலத்து மேகக் கூட்டம்,

363. தூஉய் அன்ன துவலை தூற்றலின் - தூவுவதைப் போன்று நீர்த் திவலைகளை வீசுவதால்,

364. தேஎம் தேறாக் கடும்பரிக் கடும்பொடு - திக்குத் தெரியாமல் மிக விரைவாக ஓடும் சுற்றத்துடன்

365. காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல் -(தோளில்)தொங்கவிட்ட உம்முடைய இசைக்கருவிகள் நனையாதபடி,  

366. கூவல் அன்ன விடரகம் புகுமின் - கிணற்றைப்போன்ற குகைக்குள் புகுந்துகொள்ளுங்கள்

367. இருங்கல் இகுப்பத்து இறுவரை சேராது - பெரிய கற்களின் திரட்சி முறிந்து விழும் மலைகளைச் சேராமல்

368. குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து - மலையில் உள்ள பெரும் வருத்தத்தைச் செய்யும் பள்ளத்தில், 

369. நின்று நோக்கினும் கண் வாள் வெளவும் – நின்று பார்த்தாலும் கண்ணின் ஒளியைக் கவ்வும்

370. மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு – தோலில் பூசப்பட்ட கரியசாந்து நிறைந்த முரசை எடுத்துச்செல்வதற்குக்  கட்டிய காவுமரத்தைக் கையில் பிடித்து

371. தண்டு கால் ஆகத் தளர்தல் ஓம்பி - முரசை அடிக்கும் குறுந்தடியைக் காலாக ஊன்றிக்கொண்டு, வழுக்குவதைத் தடுத்து

372. ஊன்றினிர் கழிமின் ஊறு தவப் பலவே – தடியை ஊன்றினராகவே செல்லுங்கள்; இடையூறுகள் பல உள்ளன.

373. அயில் காய்ந்தன்ன கூர்ங்கற் பாறை – வேல் வெயிலில் காய்ந்ததைப் போன்ற கூர்மையான  கற்பாறையில்,

374. வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து – வெயில் பாதுகாத்தலையுடைய ( நிழலான இடங்களில்) இன்னல்கள் உள்ள வழிகளில்,

375. கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழிமின் – கதிரவனின் சினம் தணிந்த அந்திப்பொழுதில் செல்லுங்கள். 

கருத்துரை:

கரிய நிறமுடைய  பெரிய மலையில், பஞ்சுபோலப் பொங்கியெழுந்து கையால் எட்டித் தொடுமளவில் உள்ள  கார்காலத்து மேகக் கூட்டம் தூவுவதைப்போல் நீர்த் திவலைகளை வீசும். திக்குத் தெரியாமல் மிக விரைவாகச் செல்லும் உங்கள்  சுற்றத்துடன், தோளில் தொங்கவிட்ட உங்களுடைய  இசைக்கருவிகள் நனையாதபடி, கிணற்றைப் போன்ற குகைக்குள் புகுந்துகொள்ளுங்கள்.  பெரிய கற்களின் திரட்சி முறிந்து விழும் மலைகளைச் சேராதீர்கள். அங்கிருக்கும் மலைகளில் பல குழிகள் இருக்கும். அந்தக் குழிகளில் வருத்ததைக் கொடுக்கும் இடையூறுகள் பல.  அக்குழிகளில் நின்று பார்த்தால் அவை கண்ணின் ஒளியைக் கவரும். அந்தக் குழிகளின் அருகே செல்லுங்கால், மார்ச்சனை அடர்ந்த முழவின் அடிக்கும் கோலை ஊன்றும் கோலாகக் கொண்டு, வழுக்காமல் உங்களைப் பாதுகாத்துக்கொண்டு செல்லுங்கள்.  வெய்யிலில் வேல் காய்ந்தாற்போன்ற வெப்பம் மிக்க கூர்மையான பாறைகளில் நடந்தால், அவை உங்கள் கால்களைச்  சுடும். ஆகவே, நிழல் உள்ள வழிகளில், கதிரவனின் வெப்பம் குறைந்த அந்திப்பொழுதில் செல்லுங்கள்.      

அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்

 

உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு,
புரை தவ உயரிய மழை மருள் பஃறோல்
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய;
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும்,

முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக் கோல்              380

 

இன் இசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பிக்
கை பிணி விடாஅது பைபயக் கழிமின்;
களிறு மலைந்தன்ன கண்கூடு துறுகல்

தளி பொழி கானம் தலை தவப்பலவே;                              385

 

ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட,
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆகத்                       390

 

 

 

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்

பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்;

 

அருஞ்சொற்பொருள்:

376. உரை – புகழ்;  செல – பரக்கும்படி; வெறுத்த – மிகுந்த; அவன் – நன்னன்; சுற்றம் – படைத்தலைவர்

377. புரை – உயர்ச்சி;  தவ – மிக;  மழை – மேகம்;  மருள் - உவம உருபு; தோல் – யானை; பஃறோல் (பல்+தோல்) –; பல யானைகளின் கூட்டம்

378. அரசு – பகை அரசர்கள்;  தளர்க்கும் – கெடுக்கும்; அருப்பம் - அரண்

379. பின்னி அன்ன – பின்னி வைத்ததைப் போன்ற; பிணங்கு – பின்னிய; அரில்  - சிறுகாடு

380. முன்னோன் - முன்னே செல்பவன்;  வாங்கிய   - வளைத்த; கடுவிசை - மிகுந்த வேகம்;  கணை- திரட்சி; கோல் – மூங்கிலின் கோல்

381. பத்தர் – யாழின் உடல் பகுதி;  விசிபிணி – இறுக்கமாகக் கட்டிய

382. மண் – மார்ச்சனை;  ஆர் – நிறைவு;  ஓம்பி - பாதுகாத்து

383. கை பிணி விடாஅது- கையால் பிடிப்பதை விடாமல்,  பைபய  - மெல்ல மெல்ல; கழிமின் – செல்லுங்கள்

384. மலைதல் – போர் செய்தல்;  கண்கூடு – நெருக்கம்; துறுகல் – நெருங்கிய கல்(குண்டக்கல்)

385. தளி  - மழை; கானம் காடு;  தலை இடம்;  தவ - மிக 

386. ஒன்னார் – பொருந்தாதவர்; தெவ்வர் – பகைவர்; உலைவிடத்து – முதுகிட்டோடும் பொழுது; ஆர்த்தல் – ஆரவாரித்தல்

388. செல்லா - கெடாத

389. ஏசுதல் – இகழ்தல்;   கவலை – கவர்த்த

390. முரற்கை – தாளவகை  

391. தொன்று ஒழுகு மரபின் – பழைய மர்புப்படி; மருப்பு – கொம்பு (யாழின் கோடுக்கு ஆகுபெயர்).  இகுத்து – இயக்கி;  துனைமின் – விரைந்து செல்லுங்கள்

392. பண்டு – முன்பு;  நற்கு - நன்கு; புலம்  பெயர் - ;  புதுவிர் – புதியவர்

393. சந்து - வழி கூடும் இடம்;  நீவுதல் – துடைத்தல்; புல் – ஊகம்புல்; இடுமின்; - வையுங்கள்

பதவுரை:

376. உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு - புகழ் எங்கும் பரவும்படி நன்னனை விட்டு நீங்காத அவனுடைய  படைத்தலைவர்களுடன்
377.
புரை தவ உயரிய மழை மருள் பஃறோல் - மிக உயர்ந்த, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகள் உள்ள,
378.
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய - போரிட வந்த பகை அரசர்களின் நிலையை அழிக்கும் அரண்களும் உடைய
379.
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும் - பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள் பிணைந்திருக்கும் சிறுகாட்டில்  நுழையும்போதெல்லாம்,

380. முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக் கோல் -   முன்னே செல்பவன் தன் முகத்தில் அடிக்காமல் இருப்பதற்காகக் கையால் வளைத்துவிட்ட வேகம்கொண்ட மூங்கிலின் திரண்ட கோல்

381. இன் இசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி - இனிய இசையைத்தரும் நல்ல யாழின் உடல் பகுதியையும் (பத்தலினையும்),இழுத்துக்கட்டப்பட்ட

382. மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி -மார்ச்சனை செறிந்த முழவின் கண்ணையும் கெடுக்காதபடி

383. கை பிணி விடாஅது பைபயக் கழிமின் முன்செல்பவனின் கையைப் பிடித்து மெல்ல மெல்லச் செல்லுங்கள்
384.
களிறு மலைந்தன்ன கண்கூடு துறுகல் - யானைகள் (ஒன்றோடொன்று)சண்டையிடுவதைப்போல் நெருங்கிக் கிடக்கும் பாறைகள்

385. தளி பொழி கானம் தலை தவப்பலவே - உடைய  மழை பெய்யும் காடுகள் அம்மலையில் மிகப் பல உள்ளன

386. ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென - பொருந்தாத பகைவர்கள் போரில் புறமுதுகிட்டு ஓடியபொழுது, ஆரவாரம் செய்து,
387.
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர் - பின் தங்கள் உயிரைக் கொடுப்பதற்கு நாணம் இல்லாது போரிட்ட வீரர்களின்

388. செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட, - கெடாத நல்ல புகழையுடைய பெயர்களை எழுதி நடப்பட்ட
389.
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே; - நடுகற்கள் நிறைய நிற்கின்ற கிளைத்துச்செல்லும் வழிகள் எண்ணிக்கையில் மிகப் பலவாம்;

390. இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக - கேட்போர் மகிழ்ச்சி அடையும் தாளக்கட்டுடைய உம்முடைய பாட்டை நடுகல் வீரர்கள் விரும்புமாறு பாடி

391. தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின் தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் மரபுப்படி உங்கள் யாழை இயக்கி, நீங்கள் விரைந்து செல்லுங்கள்.

392. பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர் - (அந்த வழிகள்)முன்பு(எப்படி இருந்தன என்று) நன்றாக அறியாத, நாடு மாறி வரும் புதியவராகிய நீங்கள்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின் - குறுகலான வழிகளைத் தொட்டுத்தடவிப் பார்த்து, புற்களை முடிந்து (வழியுண்டாக்கி) வைப்பீர்

 

கருத்துரை:

நீங்கள் செல்லும் வழியில், மிகுந்த புகழையுடைய நன்னனை விட்டு நீங்காத அவனுடைய படைத்தலைவர்களும், மிக உயர்ந்த, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகளும், போரிட வந்த  பகை அரசர்களின் நிலையை அழிக்கும் அரண்களும் உள்ள சிறுகாடுகள் இருக்கும். அந்தச் சிறுகாடுகளில் பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள் பிணைந்திருக்கும். அந்தக் காட்டு வழியில் செல்லும்பொழுது, முன்னே செல்பவன் தன் முகத்தில் அடிக்காமல் இருப்பதற்காகக் கையால் வளைத்து விட்ட வேகம்கொண்ட மூங்கிலின் திரண்ட கோல் உங்கள் யாழின் பத்தலையும் முழவின் கண்ணையும் கெடுக்காதபடி பதுகாத்துக்கொள்ளுங்கள். முன்செல்பவனின் கையைப் பிடித்து மெல்ல மெல்லச் செல்லுங்கள். பகைவர்கள் போரில் புறமுதுகிட்ட ஓடியபொழுது, ஆரவாரம் செய்து,  தங்கள் உயிரைக் கொடுப்பதற்கு நாணம் இல்லாது போரிட்ட வீரர்களின் நினைவாக அவர்களின் பெயர் எழுதிய நடுகற்கள் நிறைந்திருக்கும். கேட்போர் மகிழ்ச்சி அடையும் தாளக்கட்டுடைய உம்முடைய பாட்டை நடுகல் வீரர்கள் விரும்புமாறு பாடி, தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் மரபுப்படி உங்கள் யாழை இயக்கி, நீங்கள் விரைந்து செல்லுங்கள். முன்பு நன்கு வழியை அறியாததால் வழிதவறி பின் அவ்விடத்திற்கு மீண்டும் நீங்கள் வருவீர்கள் ஆயின், பல வழிகள் கூடின அச்சந்திகளைக் கையால் துடைத்து, அடுத்து அவ்வழியில் வருபவர்களுக்கு அறிகுறியாக ஊகம்புல்லை கட்டி வையுங்கள்.  

 

சிறப்புக் குறிப்பு:

புல் முடித்து இடும் வழக்கம்: மலைக்காடுகளில் புதிய பாதைகளில் செல்வோர்  மீண்டும் அதே இடத்திற்கு வந்தால் அது தான் முன்பு வந்த வழி என்பதை அடையாளம் கண்டு, வழிதவறாமல் திரும்ப  புற்களை முடிச்சிட்டு வைக்கும் வழக்கம்  சங்க காலத்தில் இருந்ததை இவ்வரி புலப்படுத்துகிறது. இன்று சாரணர்களுக்குக்(Scouts) காட்டுப்பாதைகளில் பயணிக்க  இத்தகைய பயிற்சி தரப்படுகிறது

 

 


 

விருந்தோம்பல்

 

செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்,

கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த                395

 

கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை
ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர்,
சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே;
தேம்பாய் கண்ணித் தேர் வீசு கவிகை

ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே,                     400

 

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்;
ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே

அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின்;

புலி உற வெறுத்த தன் வீழ் துணை உள்ளி

கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து,         405

 

சிலை ஒலி வெரீஇய செங்கண் மரை விடை,
தலை இறும்பு கதழும் நாறுகொடிப் புறவின்
வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த;
வளை ஆன் தீம்பால் மிளை சூழ் கோவலர்

வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின்,        410

 

 

பலம் பெறு நசையொடு பதிவயின் தீர்ந்த நும்
புலம்பு சேண் அகலப் புதுவிர் ஆகுவிர்;
பகர் விரவு நெல்லின் பல அரியன்ன
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்

கல்லென கடத்திடைக் கடலின் இரைக்கும்              415

 

பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே,
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்;
துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன,
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளித்

தீத் துணையாகச் சேந்தனிர் கழிமின்;                   420

 

அருசொற்பொருள்:

394. தேஎம் - திசை;  மருங்கு - எல்லை; அறிமார் – அறியும் பொருட்டு

395. எறிதல் – வெட்டுதல், அறுத்தல்;  அரை - அடி;  மராஅத்த   -மரத்தின்

396. ஓங்குதல் - உயர்தல்; ஏசுதல் - இகழ்தல்; கவலை – கவர்த்த வழி

397. ஒட்டாது – பொருந்தாது;  ஒன்னா - பொருந்தாத; தெவ்வர் – பகைவர்

398. சுட்டுதல்  - மனதால் நினைத்தல்;  பனிக்கும் – நடுக்கும்;  சுரம் – வழி;  தவ - மிக

399. தேம் - தேன்; கண்ணி - மாலை; வீசுதல் -வரையாது கொடுத்தல்; கவிகை – கொடுப்பதற்குக்  கவிந்த கை

400. ஓம்பா - பாதுகாக்காத

401. வெறுத்த – மிகுந்த;  திணை – ஒழுக்கம்; மூதூர் – பழைய ஊர்

402. ஆங்கனம் – அவ்விதம், அங்கு ; அற்றே – அத்தன்மையதே; நம்மனோர் – நம்மைப் போன்ற பரிசிலர்

403. பவரஅசைஇ -இளைப்பாறி ; கழிமின் - செல்லுங்கள்

404.வெறுத்த – விரும்பாத; வீழ் -விருப்பமான ;  உள்ளி – நினைத்து

405. கலை - ஆண்மான்;   விளிக்கும் - கூப்பிடும் ;  கானம் - காடு;  ஊழ் – முறை; இறந்து - கடந்து

406. சிலை -வில்; வெரீஇய - அஞ்சிய; செங்கண் – சிவந்த;  மரை – ஒருவகை மான்; மரைவிடை -மரைமானின் ஆண்

407. தலை -இடம் ;  இறும்பு – குறுங்காடு;  கதழ்தல் – விரைதல்; புறவு -காடு

408. புலம் -நிலம் ; படர்ந்த – சென்ற (மேய்ந்த) ;  ஏறுடை இனத்த – காளையைச் சார்ந்த பசுக்களின் கூட்டம்

409. வளை -சங்கு ; ஆன் தீம்பால் – பசுவின் இனிமையான பால்;  மிளை - காடு; கோவலர் – இடையர்

410. வளை -சங்கு ;  உவப்ப – மகிழ; தருவன -தருவார்கள் ;  சொரிதலின் - பொழிதலின்

411. பலம் -பலன்;  நசை - விருப்பம்;  பதிவயின் – ஊரிலிருந்து

412. புலம் – இடம் (நிலம்);  சேண் - தொலை;  புதுவிர் – புதியவர்;  ஆகுவிர் -ஆகுவீர்கள்

413. பகர்தல் - விலை கூறல் ; விரவு -கலப்பு ;அரி – நெல்; அரியன்ன -  நெல்லைப் போன்ற

414. தகர் – செம்மறிக் கடா;  விரவு -கலந்த ;  துருவை -செம்மறி ; வெள்ளை - வெள்ளாடு;விரைஇ - கலந்து

415. கல் – ஒலிக்குறிப்பு; கடம் - காடு; கடலின் - கடல்போல்; இரைக்கும் -ஒலிக்கும்

416. யாட்டு - ஆட்டு; இன நிரை  - ஆட்டினங்களின் கூட்டம் ; எல்லினிர் -இரவில் நீங்கள் ;  புகினே-சென்றால்

417. மிதவை - சோறு; பண்ணாது  -சமைக்காமல் ; பெறுகுவிர்  - பெறுவீர்கள்

418. துய்ம் - மெல்லிய; சேக்கை  -படுக்கை ; அன்ன - போல

419. மெய் -உடல்;   இயற்றிய – செய்த;  மிதி -மிதித்த;  அதள் - தோல்;  பள்ளி -படுக்கை

420. சேந்தனிர் - தங்கி;  கழிமின் – செல்லுங்கள்

பதவுரை:

394. செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார் - போகும் இடத்தின் பெயரும் எல்லையும் அறியும்படி,

395. கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – கல்லை அகழ்ந்து அதன்கண் எழுதப்பட்டதும், நல்ல அடியையுடைய கடம்ப மரத்தின் அடியில் இருப்பதுமாகிய

396. கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை - கடவுள் தன்மையுடைய நடுகல்  கடவுள் தன்மை மிக்கதால் ஏனைய காடுகளை இகழ்கின்ற வழிகள்

397. ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர் நன்னனின் ஏவலை ஏற்காத பகைவர்கள் 

398. சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே மனதால் நினைத்தாலும் நடுக்கம்வரும்   கடினமான வழிகள் மிகப் பலவாம்;

399. தேம்பாய் கண்ணித் தேர் வீசு கவிகை -‘தேன் சொரிகின்ற மாலையினையும், தேர்களை அள்ளி வீசும் கவிந்த கையினையும் உடைய

400. ஓம்பா வள்ளற் படர்ந்திகும் எனினே - தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத வள்ளலிடம் செல்கின்றோம்என்று சொன்னால்

401. மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் பிற ஊர்களைவிட மிகுந்த செல்வம் உடைய நன்னனுடைய பழைய ஊர்போல்

402. ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே - அவ்விடமும் நம்மை ஒத்த பரிசிலர்க்கு நன்மையே செய்யும்.

403. அசைவுழி அசைஇ அஞ்சாது கழிமின் -எனவே, களைப்புற்றபோது இளைப்பாறி அஞ்சாமல் செல்லுங்கள்

404. புலி உற வெறுத்த தன் வீழ் துணை உள்ளி - புலி வந்ததால், (தன்னைக்)கைவிட்டு ஓடிப்போன தான் விரும்பும் துணையை எண்ணி,

405. கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து - ஆண்மான் நின்று கூப்பிடும் காட்டை முறையாகக் கடந்து

406. சிலை ஒலி வெரீஇய செங்கண் மரை விடை - வில்லின் ஓசைக்குப் பயந்த சிவந்த கண்களையுடைய மரைமானின் ஆண்
407.
தலை இறும்பு கதழும் நாறுகொடிப் புறவின்குறுங்காட்டில் விரைந்து ஓடி, மணங்கமழும் கொடிகளையுடைய காட்டில்,
408.
வேறு புலம் படர்ந்த ஏறுடை இனத்த -வேற்று நிலத்தில் மேயும் காளைகளையுடைய ஆநிரையைச் சேர்ந்த

409. வளை ஆன் தீம்பால் மிளை சூழ் கோவலர் - சங்கு போன்ற வெண்மையான பசுக்களின் இனிய பாலை, ஆநிரைகளைக் காக்கும் இடையர்களின்,

410. வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின் - வளையல்கள் அணிந்த பெண்கள், நீங்கள்  மகிழும்படி கொண்டுவந்து தருவதால்  

411. பலம் பெறு நசையொடு பதிவயின் தீர்ந்த நும்அதைக் குடித்துப் பரிசில் பெறும் ஆசையோடு ஊரிலிருந்து வந்த உம்முடைய
412.
புலம்பு சேண் அகலப் புதுவிர் ஆகுவிர் - வருத்தம் வெகுதூரம் போய்விட(முற்றிலும் நீங்க), புத்துணர்வு பெறுபவர் ஆவீர்கள்

413. பகர் விரவு நெல்லின் பல அரியன்ன -பண்டங்களை விற்றுப் பண்டமாற்றால் பெற்றக் கலப்பு நெல்லின் பலவாறான நெல்லைப்போல,
414.
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇக் - கிடாக்கள் கலந்த செம்மறியாடுகள் வெள்ளாடுகளோடு கலந்து,

415. கல்லென கடத்திடைக் கடலின் இரைக்கும்  - கல்லென்ற ஓசையையுடைய காட்டினில் கடல் போல் இரைச்சலிடும்

416. பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே - பலவித ஆட்டினங்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் இரவில்  தங்குபவர்களாகச்  சேர்ந்தால்

417. பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் - உங்களுக்கு என்று சமைக்காமல் தங்களுக்கு என்று சமைத்த பாற்சோற்றையும் பாலையும் பெறுவீர்கள்

418. துய்ம் மயிர் அடக்கிய சேக்கை அன்ன மெல்லிய மயிரை அடக்கிய படுக்கையை ஒத்த

419. மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி -  ஆட்டின் தோலாலே தைத்து வார் இறுக்கி மிதிக்கப்பட்டதும் ஆகிய படுக்கையில்

420. தீத் துணையாகச் சேந்தனிர் கழிமின்தீயைத்  துணையாகக்கொண்டு தங்கிவிட்டு நீங்கள் செல்லுங்கள்.

 

கருத்துரை:

நீங்கள் போகும் திசைகளில் போரில் இறந்த வீரன் இவன் என்று அவன் பெயரைப் பிறருக்கு அறிவிக்கும் பொருட்டு, கடம்ப மரத்தின் அடியில் நட்ட  நடுகற்கள் கடவுள் தன்மை மிக்கவையாதலால், அக் காடு பிற காடுகளை இகழ்வது போன்றது. அந்தக் காட்டில், நன்னனைப் பொருந்தாது நீங்கிய அவனுடைய ஏவலை ஏற்காத பகைவர்கள் நடுங்கும் சுரங்கள்  பல உள்ளன. அந்த இடங்களில், “தேன் வடிகின்ற மாலைகளையும், தேர்களைப் பரிசிலர்க்குத் தரும் கவியும் கைகளையுடைய, தனக்கென்று ஒருபொருளையும் பாதுகாக்காத நன்னனைக் காண நாங்கள் செல்கின்றோம்என்று நீங்கள் கூறுங்கள். நீங்கள் அவ்வாறு கூறினால், மிகுந்த செல்வம் உடைய நன்னனுடைய பழைய ஊர்போல் அவ்விடமும் நம்மை ஒத்த பரிசிலர்க்கு நன்மையே செய்யும்.  நீங்கள் களைப்புற்ற இடத்தில் இளைப்பாறி, அச்சம் இல்லாமல் செல்லுங்கள்.  

காட்டில் புலி பாய்ந்துகொன்ற பெண்மானை நினைத்துக் கலைமான் கூச்சலிடும்; வில்லின் ஓசைக்கு அஞ்சிய சிவந்த கண்ணையுடைய மரையின் ஆண், விரைந்து ஓடும்.  வேற்று நிலத்தில் மேயும் காளைகளை உடைய ஆநிரையில் உள்ள,  சங்குபோன்ற வெள்ளைப் பசுக்களின் இனிய பாலை, ஆநிரைகளைக் காக்கும் இடையர்களின் வளையல் அணிந்த மகளிர், நீங்கள் மகிழும்படி கொண்டு வந்து உங்களுக்குத் தருவார்கள். அதைக் குடித்தால், உங்கள் துன்பம் உங்களை விட்டு நீங்கி நீங்கள் புதியவர்கள் ஆவீர்கள்.  பண்டமாற்றால் பெற்ற கலவை நெல்லைப்போல் கிடாய்கள் கலந்த செம்மறியாட்டுக் கூட்டம் வெள்ளாடுகளுடன் கலக்கும்.  கலந்து கல்லென்ற ஓசையுடைய காட்டில் கடல்போல் ஒலிக்கும் இவ்வகையான ஆட்டுக் கூட்டங்கள் நிற்கின்ற காட்டில், இரவில் சென்றால், இடையர் உமக்கென்று சமைக்காமல் தமக்கென்று சமைத்த பாற்சோற்றையும் பாலையும் பெறுவீர்கள். அங்கு,  மெல்லிய மயிரை அடைத்த மெத்தையைப்போல், ஆட்டுத் தோலைத் தைத்துச் செய்த படுக்கையில்,   நெருப்பைத் துணையாகக் கொண்டு தங்கிவிட்டு நீங்கள் செல்லுங்கள்.

கூளியரின் உதவி

கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பின்
கொடுவிற் கூளியர் கூவை காணின்,
படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே,

தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ,                         425

 

ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை;

ஆங்கு வியம் கொண்மின்; அது அதன் பண்பே;

 

அருஞ்சொற்பொருள்:

421. கடக்கும் - செல்லும்;  கூர்கூர்மையான
422.
கொடுவளைந்த;  கூளியர்வேடர்; கூவைகூட்டம்
423.
படியோர்வணங்காதார்; தேய்த்தல் கொன்றழித்தல்
424.
கொடியோள் -பூங்கொடி போன்றவள் ;  படர்ந்திகும்எண்ணிச் செல்கிறோம்; எனினே -என்றால்

425. தடி - தசை; தண்டு -கிழங்கு ;  தண்டுதல் வற்புறுத்துதல், தரீஇ - தந்து

426. ஓம்புநர் -பாதுகாப்போர் ; உடற்றுநர்  - வருத்துவோர்

427. ஆங்குஅக்காட்டிடத்தே;  வியம்வழி, ஏவல் ;  கொண்மின்கொள்ளுங்கள்

பதவுரை:

421. கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பின் - கூப்பிடு தூரத்தையும் கடக்கக்கூடிய கூரிய நல்ல அம்பையும்

422. கொடுவிற் கூளியர் கூவை காணின் - கொடிய வில்லினையும் உடைய வேட்டுவர்களின்  கூட்டத்தைக் கண்டால்

423. படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மை -‘தனக்குப் படியாதாரை அழித்த, யாருக்கும் பணியாத  ஆளுமையுள்ளவனும்,
424.
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினேபூங்கொடி போன்றவளின் கணவனும் ஆகிய (நன்னனிடம்) செல்கின்றோம்என்று சொன்னால்

425. தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ - தசைகளையும் கிழங்குகளையும் வற்புறுத்திக் கொடுத்து,

426. ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லைஉம்மைப் பாதுகாப்பவர்களே அன்றி, வருத்துபவர்கள் இல்லை;

427. ஆங்கு வியம் கொண்மின்; அது அதன் பண்பேஅக்காட்டிடத்தே, அவர்கள் போகச்சொன்ன வழியை வழியாகக்கொண்டு செல்லுங்கள்; அதுவே அக்காட்டின் தன்மையாம்.

கருத்துரை:

நீங்கள் செல்லும் காட்டுவழியில், கூப்பிடு தூரத்தையும் கடக்கக்கூடிய கூரிய நல்ல அம்பையும் கொடிய வில்லினையும் உடைய வேட்டுவர்களின்  கூட்டத்தைக் காண்பீர்கள். அவர்களைக் கண்டால் தனக்குப் படியாதாரை அழித்த, யாருக்கும் பணியாத  ஆளுமையுள்ளவனும், பூங்கொடி போன்றவளின் கணவனும் ஆகிய நன்னனிடம் நாங்கள் செல்கின்றோம்என்று நீங்கள் சொன்னால், அவர்கள் தசைகளையும் கிழங்குகளையும்  கொடுத்து உங்களை வற்புறுத்தி உண்ணச் செய்வார்கள். அவர்கள் உங்களைப்  பாதுகாப்பவர்களே அன்றி, வருத்துபவர்கள் இல்லை. பின்னர், அவர்கள் போகச்சொன்ன வழியில் செல்லுங்கள்; அதுவே அக்காட்டின் தன்மையாம்.

 

நீர் அருந்திக் குளித்துச் செல்லுதல்

 

தேம்பட மலர்ந்த மராஅ மெல் இணரும்
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்,

தளிரொடு மிடைந்த காமரு கண்ணி                      430

 

திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி,
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென

உண்டனிர்; ஆடிக் கொண்டனிர்; கழிமின்;

அருஞ்சொற்பொருள்:

428. தேம்பட தேன் உண்டாக;  மராஅ மரம்   -  கடம்ப மரம்;  இணர் கொத்து

429. உம்பல் - யானை;  அகைத்த -முறித்த ;  ஒண்ஒளியுடைய; முறிதளிர்; யா ஒருவகை மரம்

430. மிடைந்தநெருங்கிய (கட்டிய); காமருவிருப்பம் மிக்க ; கண்ணி - மாலை

431. திரங்குதல் -உலருதல் ;  மரல் - கற்றாழை;  பொலிய  - அழகுபெற
432.
முரம்பு -பரற்கற்களையுடைய மேட்டு நிலம் ; நடவை - வழி; தண்ணென -குளிர்ந்ததால்

433. உண்டனிர்குடித்து; ஆடிநீராடி (குளித்து); கொண்டனிர் - (முகந்து) கொண்ட; கழிமின்செல்லுங்கள்

பதவுரை:

428. தேம்பட மலர்ந்த மராஅ மெல் இணரும் - தேன் உண்டாக மலர்ந்த கடம்ப மரத்தின் மென்மையான பூங்கொத்தும்,
429.
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் - யானை முறித்த அழகிய தளிர்களையுடைய யாம் பூவும்

430. தளிரொடு மிடைந்த காமரு கண்ணி – தளிர்களுடன் கட்டிய விருப்புமுடைய  மாலையை

431. திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி - நன்கு காய்ந்த கற்றாழை நாரில் கட்டி, அழகுபெறச் சூடி,

432. முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென - பரற்கற்ளையுடைய மேட்டுநிலத்தில் உள்ள வழியில் மழைபெய்து  குளிர்ந்ததால், அங்குள்ள நீரை

433. உண்டனிர்; ஆடிக் கொண்டனிர்; கழிமின் - குடியுங்கள், நீரில் குளித்துவிட்டு வழிக்கு முகந்துகொண்டு செல்லுங்கள்

கருத்துரை:

தேன் உண்டாக மலர்ந்த கடம்ப மரத்தின் மென்மையான பூங்கொத்துகளையும், யானை முறித்த அழகிய தளிர்களையுடைய யாமரத்தின் பூக்களையும், மரல் நாரில் மாலையாகக் கட்டிச் சூடுவீராக. பரற்கற்ளையுடைய மேட்டுநிலத்தில் உள்ள வழியில் மழைபெய்து  குளிர்ந்ததால், அங்குள்ள நீரைக் குடியுங்கள், நீரில் குளித்துவிட்டு வழிக்கு முகந்துகொண்டு செல்லுங்கள்.

 

சிறப்புக் குறிப்பு:

யா மரம்: பாலை நிலத்திற்குரிய வலிமையான மரம். தாவரவியல் பெயர் Hardvickia Binata. இதன் மலர்கள் சிறியவை, இளவேனில் காலத்தில் பூக்கக்கூடியவை. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் 99 மலர்களில் இதுவும் ஒன்று. இதன் மலர்கள் வலப்பக்கமாகச் சுழிந்த அமைப்புடையவை.

 

 

 

 

 

புல் வேய்ந்த குடிசைகளில் புளியங்கூழும்,பிறவும் பெறுதல்

செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன

வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த,                   435

 

சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ்
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;

பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி                 440

 

வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக,
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்;
விசையம் கொழித்த பூழி அன்ன
உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை              445


நொய்ம் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிதுஉடன் துஞ்சிப்

புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்;

 

அருஞ்சொற்பொருள்:

434. செவ்வீ – சிவந்த மலர்கள்;  வேங்கை –வேங்கை மரம்;  பூவின்  அன்ன – பூவைப் போன்ற

435. வேய்கொள் அரிசி -மூங்கில் அரிசி ;  மிதவை - சோறு;  சொரிந்த -  ஊற்றிய

436. சுவல் -மேட்டு நிலம் ; அவரை அம் புளிங்கூழ் – அவரை விதையினால் சமைத்த புளிக்கரைத்த புளியங் கூழ்

437. அற்கு – இரவிற்கு; உழந்த – வருந்திய;  வீட -  போகும்படி

438. அகலுள் - அகன்ற உள்ளிடம்;  ஆங்கண்  - அவ்விடம்;  மிடைந்து – கலந்து; இயற்றிய - செய்த

439. புல்வேய்- புல்லால் வேய்ந்த; குரம்பை – குடில்; பெறுகுவிர் - பெறுவீர்கள்

440. அறைதல் – நறுக்குதல்

441. வெண் எறிந்து – வெள்ளை நிறமான மாவைத் தூவி;  இயற்றிய – செய்த ;  மாக் கண் அமலை -பெரிய சோற்றுத் திரள்

442. தண் – குளிர்ந்த;  நுண் – நுண்ணிய; இழுது – நெய்;  உள்ளீடு – உள்ளே இருப்பது

443. அசையினிர் -  இளைப்பாறி; சேப்பின் -  இருந்தால்;  அல்கலும் – நாளும்; பெறுகுவிர்- பெறுவீர்கள்

444. விசையம் - சருக்கரை;  பூழி – புழுதி (மாவு); அன்ன - போல

445. உண்ணுநர்த் தடுத்த -  உண்பவரை வேறொன்றும் உண்ணாமல் தடுத்த; நுண் இடி  - நுண்ணிதாக இடித்த; நுவணை  - இடித்த மாவு

446. நொய் மரம்  - காழ் முற்றாத எளிதில் தீப்பற்றும் மரம்; ஞெகிழி - தீக்கடைகோல்; மாட்டி - எரித்து

447. பனி – குளிர்;  இனிது  -இனிதாக; உடன் துஞ்சி – சேர்ந்து உறங்கி

448. புலரி  விடியல் - புலர்தலையுடைய விடியற்காலம்;  புள் - பறவை; ஓர்த்து – கேட்டு; கழிமின் – செல்லுங்கள்

பதவுரை:

434. செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன - வேங்கை மரத்தின் சிவந்த பூக்களைப் போன்ற

435. வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த மூங்கிலிலிருந்து கொண்ட அரிசியினால் செய்த சோற்றில் ஊற்றிய

436. சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் - மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியைக் கலந்து, அவரை விதையினால் சமைத்த புளிக்கரைத்த புளியங்கூழை
437.
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட இரவுநேர உணவுக்குப் பகலில் வந்த உங்கள் வருத்தம் போக,

438. அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய - அகன்ற இடங்களையுடைய அவ்விடத்தில், கம்புகளை நெருக்கமாகக் கட்டி

439. புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் - புல்லால் வேய்ந்த குடிசைகளான வீடுகள்தோறும் பெறுவீர்கள்

440. பொன் அறைந்தன்ன நுண் நேர் அரிசி பொன்னை நறுக்கினதைப் போன்ற நுண்ணிதாக ஒன்றுபோலிருக்கும் அரிசிச் சோற்றில்

441. வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை வெண்ணிறமான மாவைத் தூவிச் செய்த பெரிய சோற்றுருண்டையில்,
442.
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக - குளிர்ந்த நுண்ணிய நெய்விழுதை உள்ளே இட்டு

443. அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் இளைப்பாறி, அங்குத் தங்கினால், தினமும் பெறுவீர்கள்.

444. விசையம் கொழித்த பூழி அன்ன சருக்கரையின் கொழித்த பொடியைப்போல,
445.
உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை -  உண்பவர்களை வேறு எங்கும் செல்லாதபடி  தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும் பெறுவீர்கள்

446. நொய்ம் மர விறகின் ஞெகிழி மாட்டி - காழ் முற்றாத, எளிதில் தீப்பற்றும் மரத்தின்  குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,
447.
பனி சேண் நீங்க இனிதுஉடன் துஞ்சி - குளிர் முற்றிலும் நீங்கும்படி இனிதாகச் சேர்ந்து உறங்கி

448. புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின் - பொழுது புலர்ந்த அதிகாலையில் பறவைகளின் ஒலியைக் கேட்டுச் செல்லுங்கள்

கருத்துரை:

வேங்கை மரத்தின் சிவந்த பூக்களைப் போன்ற மூங்கிலரிசியினால் செய்த சோற்றில், மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியைக் கலந்து, அவரை விதையினால் சமைத்த புளிக்கரைத்த புளியங்கூழைப் பகலில் நடந்து வந்த உங்கள வருத்தம்  தீரக் குடிசைகள்தோறும் பெறுவீர்கள்.  நீங்கள் அங்கே தங்கினால், அரிசிச் சோற்றில் வெண்ணிறமான மாவைத் தூவிப் பெரிய சோற்றுருண்டையில், நெய்விழுதை உள்ளே இட்டுச் செய்த உணவைத்  தினமும் பெறுவீர்கள்; உண்பவர்களை வேறு எங்கும் செல்லாதபடி  தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும் பெறுவீர்கள்.  எளிதில் தீப்பற்றும்  குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி, குளிர் முற்றிலும் நீங்கும்படி, இனிதாகச் சேர்ந்து உறங்கி, பொழுது புலர்ந்த அதிகாலையில் பறவைகளின் ஒலியைக் கேட்டுச் செல்லுங்கள்.

 

நன்னனது தண்பணை நாட்டின் தன்மை

 

புல் அரைக் காஞ்சி புனல் பொரு புதவின்

மெல் அவல் இருந்த ஊர்தொறும் நல்யாழ்ப்           450

பண்ணுப் பெயர்த்தன்ன காவும் பள்ளியும்,
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும்,

நன் பல உடைத்து அவன் தண்பணை நாடே;

 

அருஞ்சொற்பொருள்:

449. புல்பொலிவில்லாத;  அரை - அடி;  காஞ்சி - காஞ்சி மரம்;  புனல்நீர்;  பொரு(து) – இடித்த; புதவு அறுகு (குளம் முதலியவற்றில் நீர் புகும் வழி)

450. அவல்நீர் நிற்றற்குரிய பள்ளமான நிலம் (விளைநிலம்)  

451. பண்ணுப் பெயர்த்தல் பண்களை இசைத்தல்; காவும் - சோலைகளும்;  பள்ளியும்இருப்பிடங்களும்

452. நிற்பினும்- தங்கினாலும்;  சேந்தனிர் செலினும்ஒருநாள் மட்டுமே தங்கிவிட்டுச் சென்றாலும்

453. நன்பல -  நன்றாகிய பல (பொருள்கள்); உடைத்து - உடையது; அவன் - நன்னன்;  தண் - குளிர்ந்த; பணை  - மருதம்

 

 

பதவுரை:

449. புல் அரைக் காஞ்சி புனல் பொரு புதவின்பொலிவில்லாத அடிப்பகுதியையுடைய காஞ்சி மரங்களும், நீர் வந்து இடித்து வீழ்கின்ற அறுகுகளும்

450. மெல் அவல் இருந்த ஊர்தொறும் நல்யாழ் -   மென்மையான விளைநிலங்கள்  இருக்கும் ஊர்கள்தோறும், நல்ல யாழின்

451.பண்ணுப் பெயர்த்தன்ன காவும் பள்ளியும் பண்களை இசைத்தால் எழும் இன்பம்போல் சோலைகளிலும், இருப்பிடங்களிலும்

452. பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் - பலநாள் தங்கினும், அல்லது ஒருநாள் மட்டும் தங்கிவிட்டுச்  சென்றாலும்

453. நன் பல உடைத்து அவன் தண்பணை நாடே -  நன்றாகிய பலவற்றை உடையது நன்னனுடைய குளிர்ச்சியான மருதநிலங்களைக் கொண்ட நாடு

கருத்துரை:

நன்னனுடைய குளிர்ந்த மருத நிலங்களையுடைய நாடு, காஞ்சி மரத்தையும், நீர்வந்து மோதுகின்ற அறுகுகளையும், மென்மையான விளைநிலங்களையும் உடையது. அங்குள்ள ஊர்களில், நீங்கள் பல நாள் தங்கினாலும், ஒருநாள் மட்டும் தங்கிவிட்டுச் சென்றாலும், யாழில் பண்களை மாறிமாறி வாசிக்கும் பொழுது எவ்வாறு இனிமையாக இருக்குமோ, அதுபோல் நல்ல பல பொருள்களை மாறிமாறி உண்ணும்படிப் பெறுவீர்கள்.

உழவர் செய்யும் விருந்தோம்பல்

 

 கண்பு மலி பழனம் கமழத் துழைஇ,

வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை,                 455

 

நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில்,
பிடிக்கை அன்ன செங்கண் வராஅல்,
 
துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்

ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த,        460

 

விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ,
வளம் செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும் பெறுகுவிர்;

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு,     465

 

வண்டு படக் கமழும் தேம்பாய் கண்ணித்
திண்தேர் நன்னற்கும் அயினி சான்ம் எனக்
கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி,
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்

 மருதம் பண்ணி அசையினிர் கழிமின்;                470

 

 

அருஞ்சொற்பொருள்:

454. கண்பு - சண்பங்கோரை; மலிதல் – நெருங்குதல்;  பழனம் – மருத நிலம்; துழைஇ -ஆராய்ந்து

455. வலையோர் – வலையை வீசுபவர்; சுவல் - கழுத்து; இருஞ்சுவல் -பெரிய கழுத்து  ; வாளை – வாளைமீன்

456. நிலையோர் – ஓரிடத்தில் நிலபெற்று நிற்பவர்; நெடுநாண் – நீண்ட கயிறு

457. பிடிக்கை – பெண்யானையின் தும்பிக்கை; செங்கண் -சிவந்த கண் ; வராஅல் – வரால்மீன்

458. துடி - உடுக்கை; துடிக்கண் – உடுக்கையின் கண்; அன்ன – போல; குறை - தசைத்துண்டு; விரைஇ – கலந்து

459. பகன்றை – பகன்றை மலர். கண்ணி - மாலை ; பழையர் – கள் விற்பவர்

460.ஞெண்டு - நண்டு;  தராய் – மேட்டு நிலம்

461. விலங்கல் - மலை; அன்ன – போல ; தொலைஇ -அழித்து

462. வினைஞர் - உழவர்;  வல்சி - நெல்;  நல்கல் – கொடுத்தல்

463. துளங்கல் - அசைதல்;  தசும்பு - பானை; வாக்கிய -வார்த்த ;  பசும் பொதி தேறல் –நெல்லின் பசிய முளையால் சமைத்த கள்ளின் தெளிவு

464. பெறுகுவிர் – பெறுவீர்கள்

465, அரித்து - நீக்கி;  இயற்றிய – செய்த;  வெள் அரி – வெண்ணிறமுடைய மீன்துண்டு 

466. தேம்பாய் – தேன் சொரிகின்ற; கண்ணி - மாலை

467. திண்தேர் – திண்மையான தேர்;  நன்னற்கும் -நன்னனுக்கும் ;  அயினி -உணவு ;  சான்ம் -  பொருந்தும்

468. மருள – மயங்கும்படி ; கடும்பு – சுற்றம்;  அருந்தி -உண்டு

469. எருது எறி களமர் -எருத்தை அடித்து ஓட்டும் உழவர் ;  ஓதை -  இசை

470. மருதம் பண்ணி – மருத பண்ணில் பாடி; அசையினிர் – இளைப்பாறி;  கழிமின் – செல்லுங்கள்

பதவுரை:

454. கண்பு மலி பழனம் கமழத் துழைஇ - சம்பங்கோரை நெருங்கி வளர்ந்த, மலர்கள் மணம்வீசும்  குளத்தில், ஆராய்ந்து

455. வலையோர் தந்த இருஞ்சுவல் வாளை வலையை வீசுவோர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன் துண்டுகளை

456. நிலையோர் இட்ட நெடுநாண் தூண்டில் - நிலையாக நின்று நெடிய கயிற்றையுடைய தூண்டிலிற்பட்ட

457. பிடிக்கை அன்ன செங்கண் வராஅல் - பெண்யானையின் துதிக்கையைப் போன்ற, சிவந்த கண்களையுடைய விரால்மீன்களின்

 458. துடிக்கண் அன்ன குறையொடு விரைஇப உடுக்கையின் கண்ணை ஒத்த தசைத்துண்டுகளோடு கலந்து,

459. பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் - பகன்றைப்பூ மாலை சூடிய கள் விற்பவர் வீட்டுப் பெண்கள்

460. ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த நண்டுகள் ஆடித்திரியும் வயல்களின் களத்துமேட்டில் இட்ட

461. விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ - மலை போன்ற (நெற்கதிர்)போர்களின் அடிப்பாகத்தை அடியிலே விழ அழித்துக் கடாவிட்டு
462.
வளம் செய் வினைஞர் வல்சி நல்க வளத்தை உண்டாக்கும் உழவர்கள் நெல்லை முகந்து தர,

463. துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல் - வேகும்போது கொதிப்பதால் குலுங்கும் பானையிலிருந்து வடித்த நெல்லின் பசிய முளைகளாலான தெளிந்த கள்ளை,

464. இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள்தொறும் பெறுகுவிர் இளங்கதிர்களையுடைய கதிரவன் எழும் விடியற்காலையில் பெறுவீர்கள்

465. முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு - மீனின் முள்ளை நீக்கி ஆக்கின கொழுப்பால் வெள்ளை நிறத்தையுடைய  மீன் துண்டுகளை இட்ட வெண்மையான சோற்றை

466. வண்டு படக் கமழும் தேம்பாய் கண்ணி -‘வண்டுகள் மொய்க்கும்படி மணங்கமழும், தேன் சொரியும் மாலையினையும்
467.
திண்தேர் நன்னற்கும் அயினி சான்ம் என - திண்ணிய தேரையுமுடைய நன்னனுக்கு உணவாவதற்கு இது பொருந்தும்.’ என்று
468.
கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி கண்டவர்கள் மருளும்படி, உங்கள் சுற்றத்துடன் உண்டு

469. எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் - எருதுகளை அடித்து ஓட்டும் உழவரின் பாட்டோடு இயையுமாறு உங்கள் நல்ல யாழில்

 470. மருதம் பண்ணி அசையினிர் கழிமின் மருதப்பண்ணில் பாடி, அங்கு இளைப்பாறிச் செல்லுங்கள்.

கருத்துரை:

சண்பங்கோரை நெருங்கி வளர்ந்த குளத்தில், வலையை வீசுபவர்கள் பிடித்துக் கொண்டுவந்த வாளை மீனின் தசையை, வரால் மீனின் தசைத் துண்டுகளுடன்டன் கலந்து, பகன்றை மலர்கள் சூடிய கள் விற்கும் மகளிர் தருவார்கள். நண்டுகள் ஆடித்திரியும்  வயலுக்கு அருகே உள்ள மேட்டு நிலத்தில் மலையை ஒத்த வைக்கோல் போர்களைக் கீழே தள்ளிக் கடாவிடும் உழவர்கள்  நெல்லை முகந்து தருவார்கள். நெல்லின் பசிய முளைகளாலான தெளிந்த கள்ளை விடியற்காலையில் பெறுவீர்கள். முள்ளை நீக்கி ஆக்கின கொழுப்பால் வெள்ளை நிறத்தையுடைய மீன் தசையையுடைய வெண்ணிறமான சோற்றை உங்கள் சுற்றத்துடன் உண்ணுங்கள். எருதுகளை அடித்து ஓட்டும் உழவர்களின் பாட்டோடு இயையுமாறு உங்கள் நல்ல யாழில் மருதப் பண்ணில் பாடி, அவ்விடத்தில் இளைப்பாறிச் செல்லுங்கள்

 

சேயாற்றின் கரை வழியே செல்லுதல்

 

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச்,
செங்கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி,
வனை கலத் திகிரியின் குமிழி சுழலும்,

துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்                 475

 

காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்

யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின்;

 

 

அருஞ்சொற்பொருள்:

471. வெண்ணெல் அரிநர் - உழவர்; தண்ணுமை – மருதப் பறை;  வெரீஇ -அஞ்சி

472. செங்கண் – சிவந்த கண்;  ஒருத்தல் – எருமைக் கடா

473. கனைத்தல் – ஆரவாரம் செய்தல்;  கலம் – பாண்டம்; திகிரி – குயவர்கள் பயன்படுத்தும் சக்கரம்; குமிழி – நீர்க்குமிழி

474. வனைதல் – உரு அமையச் செய்தல்; கலம் – பாண்டம்; திகிரி – குயவர்கள் பயன்படுத்தும் சக்கரம்; குமிழி - நீர்க்குமிழி

475. துனை - விரைவு; தலைவாய் – வாய்க்கால்; ஓவு  இறந்து – ஓயாமல் ; வரிக்கும் - ஓடும்

476. காணுநர் -காண்பவர் ; வயாஅம் – விருப்பம்; கட்கு -கண்ணுக்கு ; இன் - இனிய

477. யாணர் – புதுவருவாய்;   கொண்டனிர் – கொண்டு; கழிமின் – செல்லுங்கள்

பதவுரை:

471. வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ - வெண்ணெல்லை அறுப்போரின் மருதப் பறையின் ஓசைக்கு அஞ்சி,
472.
செங்கண் எருமை இனம் பிரி ஒருத்தல் - சிவந்த கண்களையுடைய எருமைகளின் கூட்டத்தினைப் பிரிந்த எருமைக்கடா
473.
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றிஆரவாரித்து விரைந்து வலிமையுடன் உங்களை நோக்கி வரலாம் என்பதை அறிந்து,
474.
வனை கலத் திகிரியின் குமிழி சுழலும் -குயவர் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும்

475. துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் -   வேகமான நீரோட்டத்தையுடைய வாய்க்காலில்   ஓய்வின்றி  ஓடும், 

476. காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் - காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின்

477. யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின் புதுப்புதுச் செல்வம் தரும் ஒரு கரையை வழியாகக்கொண்டு போவீராக

கருத்துரை:

மருத நிலத்து வயல்களில், நெல்லை அறுப்பவர்கள் கொட்டின மருதப் பறையின் ஓசைக்கு அஞ்சி, எருமைக் கூட்டத்திலிருந்து கடா ஒன்று ஆரவாரித்து விரைந்து வலிமையுடன் உங்களை நோக்கி வருவதை அறிந்து, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். குயவனின் மண்பாண்டம் செய்யும் உருளையைப் போன்ற நீர்க்குமிழிகள் சுழன்று, விரைந்து சென்று வாய்க்காலில் ஓய்வு இல்லாமல் ஓடும் சேயாற்றின் வளமையான ஒரு கரையை வழியாகக் கொண்டு செல்லுங்கள்.

நன்னனது மூதூரின் இயல்பு

 

நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
பதி எழல் அறியாப் பழங்குடி கெழீஇ,

வியல் இடம் பெறாஅ விழுப் பெரு நியமத்து,          480

 

யாறு எனக் கிடந்த தெருவின் சாறு என,
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்,
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு,
மலை என மழை என மாடம் ஓங்கித்

துனிதீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்,        485

 

பனி வார் காவின் பல் வண்டு இமிரும்

நனி சேய்த்தன்று அவன் பழவிறல் மூதூர்;

 

அருஞ்சொற்பொருள்:

478. நிதியம்  -செல்வம்; ; துஞ்சும் – மிகவும் தங்கும்;  நிவந்து - உயர்தல் ; ஓங்குதல் -உயர்தல் ; வரைப்பு - மதில்

479. பதி  - ஊர்; எழல் – பெயர்தல்;  கெழீஇ – பொருந்தி

480. வியல் – அகன்ற;  பெறாஅ – பெறாத;  விழு -சிறந்த; நியமம் -கடைத் தெரு

481. யாறு - ஆறு; சாறு - திருவிழா

482. இகழுநர் – பகைவர்;  வெரூஉம் -அஞ்சும்;  கவலை  - கவர்த்த வழி; மறுகு - தெரு

483. கார் – மேகம்; சும்மை -ஓசை, ஆரவாரம்

484.   ஓங்கி - உயர்ந்த

485. துனி - வெறுப்பு; உறையும்- இருக்கும்

486. பனி -குளிர் ; வார்-நீட்சி; கா - சோலை;  இமிர்தல் – ஒலித்தல்,பாடுதல்

487. நனி – மிகுதி; சேய்த்தன்று – தொலைவில் இல்லை;  அவன் – நன்னனின்;  பழ – பழைய; விறல் - வெற்றி;  மூதூர் – பழைய ஊர்

பதவுரை:

478. நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் – செல்வம் தங்கும் உயர்ந்தோங்கிய மதிலையுடைய

479. பதி எழல் அறியாப் பழங்குடி கெழீஇ - ஊரினின்றும் குடிபெயர்தலை அறியாத பழமையான குடிமக்கள் பொருந்தி இருக்க

480. வியல் இடம் பெறாஅ விழுப் பெரு நியமத்து - அகன்றதாயினும் இடம்போதாத சிறந்த பெரிய கடைத்தெருவினையுடைய, 

481. யாறு எனக் கிடந்த தெருவின் சாறு என - ஆறு என்று எண்ணும்படி இருக்கும் தெருக்களையுடைய, திருவிழாவோ என்று,

482. இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் -  பகைவர்கள் செல்ல அஞ்சும் கவர்த்த தெருக்களுடைய

483. கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு - கடல் போன்றும் முகில்கள் போன்றும் ஒலிக்கும் பேரொலியுடன்,

484. மலை என மழை என மாடம் ஓங்கி - மலையோ (அல்லது) முகில்கூட்டமோ என்று நினைக்கும்படியாக உயர்ந்த மாடங்கள்

485. துனிதீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் - தன்னிடத்தில் உறைபவர்கள் வெறுப்பில்லாத விருப்பத்துடன் இனிது அமர்ந்து இருக்கும்

486. பனி வார் காவின் பல் வண்டு இமிரும் - குளிர்ந்த சோலைகளில் வண்டுகள் இசைபாடும்

487. நனி சேய்த்தன்று அவன் பழவிறல் மூதூர்  - நன்னனின் பழைய வெற்றியை உடைய மூதூர் மிகத் தொலைவில் உள்ளது அன்று.

 

கருத்துரை:

செல்வம் நிறைந்த, மிக ஓங்கிய மதில்களையுடைய நன்னன் ஊரில் வாழும் பழமையான குடிமக்கள் அங்கிருந்து குடிபெயர்ந்து வேறு இடங்களுக்குச் செல்ல மாட்டார்கள்.  அங்குள்ள தெருக்கள் அகன்றதாயினும் இடம்போதாத சிறந்த பெரிய கடைத்தெருக்களை உடையன. அந்தத் தெருக்களில் மக்களின் ஆரவாரம் கடல் போலவும் மேகங்களின் இடி முழக்கத்தைப் போலவும் இருப்பதைப் பார்த்தால், அங்குத் திருவிழா நடைபெறுகிறதோ என்று எண்ணத் தோன்றும். அங்குப் பகைவர்கள் செல்ல அஞ்சுவார்கள். அங்கு வாழ்பவர்கள் வெறுப்பின்றி விருப்பத்தோடு இனிதாக வாழ்வர். சோலைகளில் வண்டுகள் இசைபாடும் நன்னனின் பழைய வெற்றியை உடைய அந்த மூதூர் மிக அருகில் உள்ளது.

 

மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல்

 

பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள் வாள் மறவர்,

கருங்கடை எஃகம் சாத்திய புதவின்                                   490

 

அருங்கடி வாயில் அயிராது புகுமின்;
மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்
வெல்போர்ச் சேஎய்ப் பெருவிறல் உள்ளி,
வந்தோர் மன்ற அளியர் தாம் என,

கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி,                  495

விருந்து இறை அவர் அவர் எதிர்கொளக் குறுகிப்

பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட,

 

அருஞ்சொற்பொருள்:

488. தெவ்வர்  - பகைவர்; இருந்தலை – கரிய தலை; துமிய -துண்டாக

489. பருந்துபட -பருந்துகள் வருமாறு; கடக்கும் - அழிக்கும்;  ஒள் -ஒளி;  மறவர் – வீரர்

490. கருங்கடை -  கருநிறமான காம்பு; எஃகம் -வேல் ;  புதவு-கதவு

491. அருங்கடி – பகைவர் நுழைவதற்கு அரிய ; அயிராது - தயங்காது; புகுமின் -நுழையுங்கள்

492. மன்றில் – ஊரம்பலம், ஊர்ப்பொதுவிடம் ; வதியுநர் – தங்கி இருப்பவர்; சேட்புலம் – தொலைதூரத்தில் உள்ள இடம்; பரிசிலர் - இரவலர்

493. சேஎய் – முருகன்; விறல் - வெற்றி; உள்ளி- நினைத்து

494. மன்ற – உறுதியாக (அசைச்சொல்); அளியர் – இரங்கத் தக்கவர்

496. விருந்து இறை -விருந்தாக இருத்தல்;  எதிர்கொள்ளுதல் – வரவேற்றல், ஏற்றுக்கொள்ளுதல்; குறுகி -நெருங்கி

497. பரி – மிகுதி, நடை;  புலம்பு - வருத்தம்;  அலைத்த  - வருத்தம்; வீட -போக

பதவுரை:

488. பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியநன்னனோடு பொருந்தாத பகைவர்களின் கரிய தலைகள் துண்டிக்கப்பட,
489.
பருந்துபடக் கடக்கும் ஒள் வாள் மறவர் பருந்துகள் சதைகளைத் தூக்க வருமாறு, போரில் வெல்லும்  ஒளிரும் வாளையுடைய மறவர்கள்

490. கருங்கடை எஃகம் சாத்திய புதவின் - தம் கரிய காம்பினையுடைய வேலைச் சாத்தி வைத்துள்ள நுழைவாயில்

491. அருங்கடி வாயில் அயிராது புகுமின்- கடுமையான காவலையுடைய வாயிலில்  ஐயமில்லாமல் நுழைவீராக

492. மன்றில் வதியுநர் சேட்புலப் பரிசிலர்நன்னனின் மன்றத்தில் இருப்பவர்கள் பரிசிலை விரும்பி தொலைவில் இருந்து வந்தவர்கள்

493. வெல்போர்ச் சேஎய்ப் பெருவிறல் உள்ளி - வெல்லும் போரில் வல்ல முருகனைப்போல் உள்ள நன்னனின் கொடையை எண்ணி 

494. வந்தோர் மன்ற அளியர் தாம் என - வந்திருக்கின்றனர் போலும், பாவம் இவர்கள் அளிக்கத் தக்கவர்கள் என்று

495. கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி - பார்ப்பவர்கள் எல்லாம், கனிவுடன், இனிது நோக்கி, 

496. விருந்து இறை அவர் அவர் எதிர்கொளக் குறுகிநீங்கள் அவர்களின் விருந்தினராக இருத்தலை ஒவ்வொருவரும் விரும்பி ஏற்றுக்கொள்ளுதலால், அவர்களைச் சேர்ந்திருந்து,

497. பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட -  நடந்து வந்த உங்கள் தனிமைத் துன்பம் போக      

கருத்துரை:    

நன்னனோடு பொருந்தாத பகைவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு, அவற்றில் உள்ள சதைகளைப் பருந்துகள் உண்ணும்படி, நுழைவாயிலில் கடிய வேலில் சாத்திவைத்து, மறவர்கள் காவல் காப்பர். அந்தக் கடுமையான காவலையுடைய நுழைவாயிலில் ஐயமில்லாமல் நுழையுங்கள். தொலைவிலிருந்து வந்து மன்றத்தில் தங்கியிருக்கும் மற்ற பரிசிலர், உங்களைக் காண்பர். உங்களைப் பார்த்தவுடன், நீங்கள் வெல்லும் போரில் வல்ல முருகனைப்போல் உள்ள நன்னனிடம் பரிசு பெறுவதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, உங்களை அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் விருந்தினராக ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் நடந்து வந்த வருத்தம் தீர அவர்களுடன் தங்குங்கள்.

 

அரண்மனை வாயிலில் காணும் பொருள்கள்

 

எரி கான்றன்ன பூஞ்சினை மராஅத்துத்
தொழுதி போக வலிந்து அகப்பட்ட,

மட நடை ஆமான் கயமுனிக் குழவி                                  500

 

ஊமை எண்கின் குடாவடிக் குருளை,
மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள்
வரை வாழ் வருடை வன்தலை மாத்தகர்,
அரவுக் குறும்பு எறிந்த சிறுகண் தீர்வை,

அளைச் செறி உழுவை கோள் உற வெறுத்த                      505

 

மடக் கண் மரையான் பெருஞ்செவிக் குழவி,
அரக்கு விரித்தன்ன செந்நில மருங்கின்
பரல் தவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை,
வரைப் பொலிந்து இயலும் மடக்கண் மஞ்ஞை,

கானக் கோழிக் கவர் குரல் சேவல்,                                   510

கானப் பலவின் முழவு மருள் பெரும்பழம்,
இடிக் கலப்பு அன்ன நறுவடி மாவின்
வடிச் சேறு விளைந்த தீம்பழத் தாரம்,
தூவற் கலித்த இவர் நனை வளர்கொடி

காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை,                              515

 

பரூஉப் பளிங்கு உதிர்த்த பல உறு திருமணி,
குரூஉப் புலி பொருத புண்கூர் யானை,
முத்துடை மருப்பின் முழுவலி மிகு திரள்,
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்,

நாகம் திலகம் நறுங்காழ் ஆரம்,                                        520

 

கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி
திருந்து அமை விளைந்த தேக்கள் தேறல்
கான் நிலை எருமைக் கழைபெய் தீம் தயிர்,
நீல் நிற ஓரி பாய்ந்தென நெடுவரை

நேமியின் செல்லும் நெய்க்கண் இறாஅல்,                         525

 

உடம்புணர்வு தழீஇய ஆசினி அனைத்தும்
குடமலைப் பிறந்த தண் பெருங்காவிரி,
கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப,

நோனாச் செருவின் நெடுங்கடைத்துவன்றி

 

 

 

அருஞ்சொற்பொருள்:

498. எரி - நெருப்பு;  கான்றல் – வெளிப்படுத்துதல்; பூஞ்சினை -பூக்கள் உள்ள கிளை;  மராஅத்துத் - கடம்ப மரத்தின்

499. தொழுதி – கூட்டம்

500. மட நடை -  மென்மையான நடை; ஆமான் – காட்டுப் பசு; கயமுனி – யானையின் இளமையான  கன்று   

501. எண்கு - கரடி; குடாவடி – வளைந்த அடி;  குருளை- குட்டி

502. மீமிசை –உயர்ந்த நிலம்;  கவர்தல் – கைக்கொள்ளுதல்; பரிதல்  - ஒடுதல்;  கொடுந்தாள் – வளைந்த கால்

503. வரை - மலை; வருடை - மலையாடு; வன்தலை -வலிய தலை;  மாத்தகர் – பெரிய ஆட்டுக் கிடாய்

504. அரவு - பாம்பு; குறும்பு - வலிமை ; எறிந்த -அழித்த ; தீர்வை - கீரி

505. அளை - குகை; செறிதல் - அடங்குதல்;  உழுவை - புலி; கோள் உற - பாய்ந்ததால்

506. மடக் கண் – மடப்பத்தையுடைய கண்;  மரையான் – ஒருவகை காட்டு விலங்கு; குழவி -குட்டி

507. அரக்கு – சாதிலிங்கம்;  விரித்தன்ன – பரப்பினாற்போல்;  மருங்கின் -இடத்தில்

508. பரல் தவழ் உடும்பு – பரற்கற்கள் மேல் தவழும் உடும்பு; கொடுந்தாள் – வளைந்த கால்; ஏறு – இங்கு உடும்பின் ஆணைக் குறிக்கிறது

509. வரை -மலை ; பொலிந்து -அழகுடன்;  இயலுதல் -ஆடுதல் ;  மடக்கண் – மடப்பத்தையுடைய கண்; மஞ்ஞை- மயில்

510. கானம் – காடு;  கவர்தல் - அழைத்தல்

511. கானம் - காடு ;  பலவின் – பலாவின்; முழவு மருள் -முழவு மருளும் ( முழவைப் போன்ற)

512. இடி – மா; கலப்பு - கற்கண்டு;  அன்ன – போன்ற;  நறுவடி -  மணமுள்ள மாம்பிஞ்சுகள் உள்ள மாமரம்

513. வடிச் சேறு -பிழிந்த சாறு ;  தீம்பழத் தாரம் -  இனிய பழமாகிய உணவு

514. தூவல் - மழை;  கலித்த - தழைத்த; இவர்தல் - படர்தல்;  நனை -அரும்பு ; வளர்கொடி -வளர்கின்ற (நறைக்)கொடி

515. காஅய் - காவி;  நுகம் மருள் நூறை – நுகத்தடி போன்ற  நூறைக் கிழங்கு

516. பரூஉ – பருத்த; பளிங்கு  - கற்பூரம்; பல உறு திருமணி – பல  விலை மிக்க அழகிய மணிகள்

517. குரூ – நிறம் ;  பொருத - போரிட்ட ; புண்கூர் – புண் மிகுதியால்

518. மருப்பு - கொம்பு; முழுவலி மிகு திரள் -குறைவில்லாத வன்மையுடைய குவியல்

519. வளை -சங்கு, வளையல் ; உடைந்தன்ன -உடைந்தாற்போல் ; வள் இதழ் - பெரிய இதழ்;  காந்தள் -காந்தள் மலர்

520. நாகம் – புன்னை மரம்;  திலகம் – திலக மலர் ;  காழ் – வயிரம்; ஆரம் – சந்தனம்

521. கருங்கொடி மிளகு – கரிய கொடியையுடைய மிளகு; காய்த்துணர்ப் பசுங்கறி – காய்கள் கொத்தாக உள்ள பசுமையான மிளகு

522. திருந்து அமை விளைந்த தேக்கள் - நல்ல மூங்கில் குழாயில் முற்றிய தேனால் செய்த கள்,  ;  தேறல் – கள்ளின் தெளிவு

523. கான் நிலை எருமை கழை தீம் தயிர் - காட்டில் நிலைபெற்ற எருமையின் பாலை மூங்கில் குழாயில் தோய்த்த இனிய தயிர்

524.  நீல் நிற - நீல நிறமான;  ஓரி - முதிர்ந்த தேன்; பாய்ந்தென – பரவியதாக; நெடுவரை -நெடிய மலை

525. நேமி - உருளை;  இறாஅல் – தேனடை

526. உடம்புணர்வு தழீஇய -  கூடுதலாக உள்ள ;  ஆசினி – ஒருவகைப் பலா;

527. குடமலை -மேற்கு மலை; தண் – குளிர்ந்த; பெருங்காவிரி -பெரிய காவிரி

528. மண்டுதல் – மிக்குச் செல்லுதல்; அழுவம் - ஆழம்;  கயவாய் – அகன்ற இடம் ( காவிரி கடலில் கலக்கும் இடம்) கூடல்; கடுப்ப -போல

529. நோனா – பொறுக்கலாற்றாத; செரு -படைகளுக்கு ஆகுபெயர் ; நெடுங்கடை -தலைவாசல்; துவன்றி – நிறைந்து

பதவுரை:

498. எரி கான்றன்ன பூஞ்சினை மராஅத்து – நெருப்பைப் போன்ற பூப்பூத்த கிளைகளையுடைய மரா மரத்தடியில்

499. தொழுதி போக வலிந்து அகப்பட்ட – தன் இனமெல்லாம்  ஓடிப்போய்விட, தான் ஓடமுடியாமல் வலிய அகப்பட்ட

500. மட நடை ஆமான் கயமுனிக் குழவி - மெல்லிய நடையையுடைய காட்டுப்பசுவின் கன்றும்

501. ஊமை எண்கின் குடாவடிக் குருளை – வாயினால் ஒலியெழுப்ப முடியாத  கரடியின் வளைந்த கால்களை உடைய  குட்டியும்

502. மீமிசைக் கொண்ட கவர்பரிக் கொடுந்தாள் - மலையுச்சியில் நிலத்தைப் பற்றிக்கொண்டு ஓடும் வளைந்த கால்களையுடைய

503. வரை வாழ் வருடை வன்தலை மாத்தகர் - மலையில் வாழும் மலையாடும், உறுதியான தலையையுடைய பெரிய செம்மறியாட்டுக்கிடாவும்,

504. அரவுக் குறும்பு எறிந்த சிறுகண் தீர்வை - பாம்பின் வலிமையை அழித்த சிறிய கண்களையுடைய கீரியும்

505. அளைச் செறி உழுவை கோள் உற வெறுத்த - குகையில் பதுங்கியிருந்த புலி கொள்வதற்காகப் பாய்ந்ததால் துன்புற்ற

506. மடக் கண் மரையான் பெருஞ்செவிக் குழவி - பேதைமை மிகுந்த கண்களையுடைய மரைமானின் பெரிய காதுகளையுடைய  குட்டியும்,

507. அரக்கு விரித்தன்ன செந்நில மருங்கின் – அரக்கை உருக்கிப் பரப்பிவிட்டாற் போன்ற சிவந்த நிலத்தில்,

508. பரல் தவழ் உடும்பின் கொடுந்தாள் ஏற்றை -     பருக்கைக்கற்களின்மீது தவழும் உடும்பின் வளைந்த பாதங்களைக்கொண்ட ஏறும்,

509. வரைப் பொலிந்து இயலும் மடக்கண் மஞ்ஞை - மலை அழகுற ஆடும் பேதைமை நிறைந்த கண்களைக்கொண்ட மயிலும்,

510. கானக் கோழிக் கவர் குரல் சேவல் - காட்டுக்கோழியை அழைக்கும் கூவலொலியுடைய சேவலும்,  

511. கானப் பலவின் முழவு மருள் பெரும்பழம் - காட்டுப் பலாவின் மத்தளமோவென நினைக்கத் தோன்றும் பெரிய பழமும்,

512. இடிக் கலப்பு அன்ன நறுவடி மாவின் - (தானியங்களை)இடித்துக் கலந்து செய்த மணம்மிக்க வடு மாங்காயின்

513. வடிச் சேறு விளைந்த தீம்பழத் தாரம் - தேன் போன்ற சதைப்பற்று முதிர்ந்த இனிய பழங்களாகிய அரும்பண்டங்களும்

514. தூவற் கலித்த இவர் நனை வளர்கொடி – மழையால் தழைத்த அரும்புகளை உடைய உயர்ந்த நறைக் கொடியும்

515. காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை - தோளில் சுமந்துவந்த, நுகத்தடியோ என நினைக்கத் தோன்றும் நூறைக்கிழங்கும்

516.பரூஉப் பளிங்கு உதிர்த்த பல உறு திருமணி - பருமனான பளிங்குக்கல்லை (உடைத்து) உதிர்த்துவிட்டதைப் போன்ற பலவித அழகிய மணிகளும்,

517. குரூஉப் புலி பொருத புண்கூர் யானை - நிறத்தையுடைய புலி போரிட்டுப் புண் மிகுதியால்

518. முத்துடை மருப்பின் முழுவலி மிகு திரள் - முத்துக்களைக்கொண்ட தந்தங்களின் குறைவில்லாத குவியலும்

519. வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள் – சங்கு உடைந்ததைப் போன்ற, செழுமையான இதழ்களையுடைய காந்தட்பூவும்,

520. நாகம் திலகம் நறுங்காழ் ஆரம் - புன்னைப்பூவும், திலகப்பூவும், மணமிக்க வயிரத்தையுடைய சந்தனமும்

521. கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி - கரிய கொடிகளையுடைய மிளகின் கொத்தாக உள்ள பசுமையான மிளகும்

522. திருந்து அமை விளைந்த தேக்கள் தேறல் - நன்குசெய்யப்பட்ட கெட்டி மூங்கில் குழாயில், நன்கு பக்குவப்பட்ட, தேனிற்செய்த கள்ளின் தெளிவும்,

523. கான் நிலை எருமைக் கழைபெய் தீம் தயிர் - காட்டில் வசிக்கும் எருமையின், மூங்கில் குழாயினுள் ஊற்றப்பட்ட இன்சுவையுள்ள தயிரும்

524. நீல் நிற ஓரி பாய்ந்தென நெடுவரை - கருநீல நிறமான முற்றிய தேனின் நிறம்  பரவியதைப்போன்ற, உயர்ந்த மலையில்

525. நேமியின் செல்லும் நெய்க்கண் இறாஅல் - சக்கரம் போன்று ஒழுகும் தேனைத் தன்னிடத்தேகொண்ட தேனடைகளும்,

526. உடம்புணர்வு தழீஇய ஆசினி அனைத்தும் - இவற்றோடு சேர்ந்த ஆசினிப்பலாங்களும்,

527. குடமலைப் பிறந்த தண் பெருங்காவிரி – மேற்கு மலையில் பிறந்த குளுமையான பெரிய காவிரி ஆறு

528. கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப - கடலில் கலக்கும் புகார் முகம் போன்று 

529. நோனாச் செருவின் நெடுங்கடைத் துவன்றி - (பகைவர் மேல்)பொறுமைகாட்டாத போர்களையுடைய உயரமான வாயிலில் நிறைந்து (இருக்கும்)

கருத்துரை:

நன்னனின் தலைவாயிலினிடத்தே கடம்ப மரத்தின் அருகில் இருந்த காட்டுப்பசுவின் கன்றும், யானையின் கன்றும், வாயினால் ஒலி எழுப்பாத கரடியின் வளைந்த கால்களை உடைய குட்டியும், வளைந்த கால்களை உடைய மலை ஆடும், வலிய தலையையுடைய பெரிய ஆண் செம்மறி ஆடும், பாம்பின் வலிமையை அழித்த கீரியும், புலி பாய்ந்து கொன்ற மரையானின் பெரிய காதுகளை உடைய குட்டியும்,  சிவந்த நிலத்தில் பரற்கற்கள்மேல் தவழும் உடும்பின் ஆணும், மலையில் ஆடும் மயிலும், காட்டுக் கோழியின் பெடையை அழைக்கின்ற குரலையுடைய சேவலும், முழவு போன்ற பெரும்பழமும், இனிய மாம்பழங்களும், நறைக் கொடியும், நூறைக்கிழங்கும், கற்பூரமும், பல விலை உயர்ந்த மணிகளும், புலியால் கொல்லப்பட்ட யானைகளின் முத்துடைய தந்தங்களும்,  வெண்காந்தள் மலர்களும், புன்னை மலர்களும், திலக மலர்களும், சந்தன மரங்களும், பசிய மிளகுக் கொத்துகளும்,  மூங்கில் குழாயில் முற்றிய தேனால் செய்த கள்ளின் தெளிவும், மூங்கில் குழாயில் தோய்த்த எருமைத் தயிரும், தேன் சொரியும்  தேன் கூடுகளும்,  ஆசினிப் பலாப்பழங்களும், மேற்கு மலையில் பிறந்த குளிர்ந்த பெரிய காவிரி ஆறு கடலில் செல்கின்ற ஆழத்தையுடைய புகார் முகத்தை ஒப்ப நிறைந்திருக்கும்.  

சிறப்புக் குறிப்பு:

நறைக் கொடி: சங்க காலத்தில் மணம் மிக்க புகையைத் தரும் மணப்பொருளாக இது பயன்பட்டது. இதன் தண்டு மற்றும் காய்களை எரிக்கும்போது  நறுமணப்புகை எழும். குறிஞ்சி நில மக்கள் பாறையில் படரும் இக்கொடியை  மணப்பொருளாகவும், இறைவழிபாட்டிற்கான தூய பொருளாவும் பயன்படுத்தியதாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தற்காலத்தில் மின்னார் கொடி அல்லது புல்லாந்தி வல்லி என்று இது அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Calycopteris floribunda. இதன் வேர் மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தவும், இதன் இலைகள்  வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கவும், மலமிளக்கியாவும் ,இதன் வேர் பாம்பு நஞ்சை முறிக்கும் மருந்தாகவும், இலைச்சாறு தோல் நோய்களையும் , மலேரியா  போன்ற காய்ச்சல்களைக் குணப்படுத்தவும்  பயன்படுகிறது.  காடுகளில் தாகத்தால் தவிக்கும் வழிப்போக்கர்கள் இதன் தண்டை வெட்டி அதிலிருந்து வரும் நீரைப்பருகித் தாகம் தீர்ப்பதால் இது காட்டுயிர் காப்பான் (Life saver) என்றும் அழைக்கப்படுகிறது.

நூறைக் கிழங்கு: காடுகளில் தானாக வளரக்கூடிய உண்ணத்தக்க கிழங்கு. முல்லைநில மக்களின்  முக்கிய உணவு. மற்றவர்களுக்குப்  பஞ்சகாலத்தில் ஒரு மாற்று உணவு. வேகவைத்தோ, குழம்பு வைத்தோ பயன்படுத்தலாம். இது இன்று ஐவிரலி வள்ளிக்கிழங்கு மற்றும் நூறான் கிழங்கு என்று அழைக்கப்படுகிறது.  இதன் தாவரவியல் பெயர் Dioscorea pentaphylla . இது மூலநோய், சீதபேதி,  இரத்தசோகை ஆஸ்துமா, தோல் நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாவும், உடல் வலிமையை மிகுவிக்கவும் பயன்படுகிறது.

 

விறலியர் நன்னனைப் போற்றுதல்

 

வானத்து அன்ன வளம் மலி யானை                    530


தாது எருத் ததைந்த முற்றம் முன்னி,
மழை எதிர் படுகண் முழவுகண் இகுப்பக்
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர,
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்

நரம்பு மீது இறவாது உடன் புணர்ந்து ஒன்றிக்,       535

 

கடவது அறிந்த இன்குரல் விறலியர்,
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது,

அருந்திறல் கடவுட் பழிச்சிய பின்றை

 

அருஞ்சொற்பொருள்:

530.வானம் – மேகத்துக்கு ஆகுபெயர்; மலிதல் – மிகுதல், நிறைதல் 

531. தாது – சாணம்;  ததைதல் – சிதறுதல்; முன்னுதல் - அடைதல்,

532. மழை  எதிர்படுகண் – மழை முழக்கத்திற்கு எதிராக முழங்கும் கண்;  முழவுகண் - முழவின் கண்; இகுப்ப - ஒலிக்க

533. கழை  -  மூங்கில்;  தூம்பு – பெருவங்கியம் என்னும் இசைக்கருவி (யானைத்துதிக்கைபோலும் வடிவுள்ள இசைக்குழல்); இமிர -ஒலிக்க

534. மருதம் – மருதப்பண்; பண்ணிய -  இசைத்த; கருங்கோடு – கரிய தண்டு; சீறியாழ் – சிறிய யாழ்

535. நரம்பு- நரம்பின் ஓசை;  மீது - மேல் ;  இறவாது- போகாது;  உடன்புணர்ந்து – கூடி; ஒன்றி – ஒன்றுபட்டு  

536. கடவது – கடமை;

537. தொன்று ஒழுகு - பழையதாய் நடக்கும்;  மரபு – முறைமை; இயல்பு – ஒழுக்கம் (இலக்கணம்) வழாஅது - தப்பாது

538. அருந்திறல் – அளத்தற்கரிய வலிமை; பழிச்சுதல் – வாழ்த்துதல்

பதவுரை:

530. வானத்து அன்ன வளம் மலி யானை -   மழைமேகங்களைப் போன்ற செழுமை மிகுந்த யானை

531. தாது எருத் ததைந்த முற்றம் முன்னி - தாதாகிய எரு (சாணம்) சிதறிக்கிடக்கும்(செறிந்த) முற்றத்தை அடைந்து

532. மழை எதிர் படுகண் முழவுகண் இகுப்ப - மேகங்களின் முழக்கத்துக்கு ஈடாக முழங்கும் கண்களையுடைய முழவு ஒலிக்க

533. கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர - மூங்கிலால் உருவாக்கப்பட்ட பெருவங்கியத்தின் துளையிடங்கள் ஒலியெழுப்ப
534.
மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் - மருதப்பண்ணை வாசித்த கரிய தண்டினையுடைய சிறு யாழின்

535. நரம்பு மீது இறவாது உடன் புணர்ந்து ஒன்றி - நரம்பின் ஓசையை மீறாது அதனோடு சேர்ந்து ஒன்றுபட்டு

536. கடவது அறிந்த இன்குரல் விறலியர்கடமையை அறிந்த இனிய குரல்வளமுடைய விறலியர்

537. தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது - தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் வழக்கத்தினின்றும் தம் நெறிமுறை தவறாது,

538. அருந்திறல் கடவுட் பழிச்சிய பின்றை, - அளவற்ற வலிமைகொண்ட கடவுளை வாழ்த்திய பின்னர்,

கருத்துரை:

முகில்கள் போன்று வளப்பம் மிக்க யானைகளின் தாதாகிய எருச் செறிந்த முற்றத்தை அடையுங்கள். அடைந்து, முகிலின் முழக்கம்போல் முழங்கும் கண்ணையுடைய முழவு அதிரமூங்கிலாலாகிய தூம்பு (பெருவங்கியம்) என்னும் இசைக்கருவியின் திறந்த கண்கள் ஒலிக்க, மருதத்தை இசைத்த கரிய தண்டினையுடைய சிறிய யாழின் நரம்பினுடைய ஓசைக்கு மேல் போகாது, கூடி ஒன்றுபட்டு, கடமையை அறிந்த விறலியர்கள் பழைய மரபின் முறையில் தப்பாமல் பெரும் வலிமையுடைய கடவுளை வாழ்த்தட்டும்.

 

நன்னனைப் போற்றுதல்

 

விருந்தின் பாணி கழிப்பி, “நீள் மொழிக்

குன்றா நல்இசைக் சென்றோர் உம்பல்!                 540

 

இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப,
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தெனக்
கொடைக் கடன் இறுத்த செம்மலோய்!” என,
வென்றிப் பல்புகழ் விறலோடு ஏத்தி,

சென்றது நொடியவும் விடாஅன்;                          545

 

அருஞ்சொற்பொருள்:

539. விருந்து புதுமை; பாணிபாட்டு;  கழிப்ப - பாடி, நீள்மொழிசூளுரை, வாய்மை

540.குன்றா- குறையாத;  இசைபுகழ்; சென்றோர்- சென்றவர்களின்;  உம்பல் - வழித்தோன்றல்

541. இன்று -இக்காலத்து;  இவண்- இவ்வுலகில்;  செல்லாது ;  உலகமொடு நிற்ப- உலகம் உள்ளளவும் நிற்கும்படி,

542. இடைத் தெரிந்து  - நல்லது தீயது எது என்று ஆராய்ந்து;  உணரும் - அறியும்;  பெரியோர் -வள்ளல்கள் மாய்ந்தென -  இறந்ததால்

543. இறுத்த செய்து முடித்த; செம்மல் தலைமையுடையவன்
544.
வென்றிவெற்றி;  பல்புகழ் - பலபுகழ்;  விறல் -  வெற்றி; ஏத்திபுகழ்ந்து

545. சென்றது  - மனதில் தோன்றிய வேறு புகழ்;  நொடிதல் சொல்லல்; விடாஅன்விட மாட்டான்

பதவுரை:

539. விருந்தின் பாணி கழிப்பி, “நீள் மொழி - புதிய பாடல்களைப் பாடி, ”சூளுரைத்து அதனை நிறைவேற்றி

540. குன்றா நல்இசைக் சென்றோர் உம்பல் - குறையாத நல்ல புகழோடு இருந்து மறைந்தோரின் வழிவந்தவனே,

541. இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப -  தம் புகழ் இங்கு அழியாது, உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்படி
542.
இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தெனநல்லதையும் தீயதையும் ஆரய்ந்து அறிந்து உணர்ந்த வள்ளல்கள் மறைந்ததால்,
543.
கொடைக் கடன் இறுத்த செம்மலோய்!” எனஅவர்கள் மேற்கொண்ட கொடையை மேற்கொண்டு, கடமையைச் செய்துமுடித்த அண்ணலேஎன்று கூறி,

544. வென்றிப் பல்புகழ் விறலோடு ஏத்திஅவனது வெற்றிகளால் கிடைத்த பலபுகழையும், அவன் வெற்றிகளையும் புகழ்ந்து கூறும்பொழுது

545. சென்றது நொடியவும் விடாஅன்நீங்கள் சொல்வதைச் சொல்லிமுடிக்க விடமாட்டான்.  

 

கருத்துரை:

புதிய பாடல்களைப் பாடி, ”சூளுரைத்து அதனை நிறைவேற்றிக் குறையாத நல்ல புகழோடு இருந்து மறைந்தோரின் வழிவந்தவனே! தம் புகழ் இங்கு அழியாது, உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்படி

நல்லதையும் தீயதையும் ஆரய்ந்து அறிந்து உணர்ந்த வள்ளல்கள் மறைந்ததால், அவர்கள் மேற்கொண்ட கொடையை மேற்கொண்டு, கடமையைச் செய்துமுடித்த அண்ணலே!” என்று கூறி, அவனது வெற்றிகளால் கிடைத்த பலபுகழையும், அவன் வெற்றிகளையும் புகழ்ந்து கூறுங்கள். ஆனால், நீங்கள் அவற்றைச் சொல்லும்பொழுது, நன்னன் உங்களைச் சொல்லி முடிக்க விடமாட்டான்.

 

நீங்கள் வந்ததே போதும்

 

. . . . . . . . ., . . . . . . . . . . . .  . . . நசை தர

வந்தது சாலும் வருத்தமும் பெரிது என

பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து

திருநகர் முற்றம் அணுகல் வேண்டி,

கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ,

உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து                   550

 

அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து,
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்,
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவிக்

கடுவரல் கலுழிக் கட்கு இன் சேயாற்று                   555

 

வடு வாழ் எக்கர் மணலினும் பலரே;
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் எனப்
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு,
நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது

உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி,      560

 

அருஞ்சொற்பொருள்:

545. நசை தரஎன்மீது உள்ள விருப்பத்தால்

546. சாலும் - போதும்

547. பொரு முரண் எதிரியபோரிடும் பகைவரை எதிர்கொள்ளும்; வயவர் -படைத்தலைவர் ;  பொலிந்து  - சிறப்புற்று

548. திருநகர்  - அரண்மனை;

549. கல்லென் ஒலிக்குறிப்பு; ஒக்கல்சுற்றம்;  வலத்து - வலப்பக்கத்தே; இரீஇஇருத்தி

550. கட்டில் - அரசுரிமை; உரும்புகொடுமை

551. தாயம்  - நாடு; அஃகியகுறைந்த , சுருங்கிய; நுட்பம் அறிவுக்கு ஆகுபெயர்

552. இலம்இல்லாமை

553. தம் பெயர் தம்மொடு கொண்டனர் - தம் பெயரைத் தம்முடனேயே எடுத்துச்சென்றவர்கள்; மாய்ந்தோர் - அழிந்தோர் ;
554.
நெடு வரைநெடிய மலை;  இழிதருதல் குதித்தல், விழுதல்; நீத்தம்நீரோட்டம்; சால் - நிறைவு

555. கடுவரல்விரைந்து வருதல்; கலுழி - வெள்ளம்; கட்கு -கண்ணுக்கு; சேயாற்றுசேயாற்றின்

556, வடு  -கருமணல் ;  எக்கர் -மணல்மேடு

557. கழிக -முடிவடையட்டும்;  வரைந்த - வகுத்த;

558. விசும்பு -  ஆகாயம்;  தோய்  - ஒத்த

559. நயந்தனிர்விரும்பியவராய்

560. உவந்த -மகிழ்ந்த ; அமர்ந்து  - மகிழ்ந்து

பதவுரை:

545. நசை தரஎன்மீது விருப்பம் கொண்டு

546. வந்தது சாலும் வருத்தமும் பெரிது எனநீங்கள் வந்ததே போதும், நீங்கள் வந்த வழியில் வருத்தமும் பெரியதுஎன,

547. பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து - போரிடும் பகைவரை எதிர்கொள்ளும் படைத்தலைவர்களோடே முகம்மலர்ந்து,

548. திருநகர் முற்றம் அணுகல் வேண்டி - சிறப்பு மிக்க தன் அரண்மனையின் முற்றத்தினை நீங்கள் அடைவதை விரும்பி

549. கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇகல் என்னும் ஆரவாரத்தையுடைய சான்றோர் இருக்கின்ற அவையில் நல்ல வலப்பக்கத்தே இருத்தி

550. உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து -‘சிறந்த அரசுரிமையையும், கொடுமையில்லாத  அமைச்சர்களையும்

551. அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து - அகன்ற நாட்டினையும் குறைந்த அறிவினையும் உடையோராய்

552. இலம் என மலர்ந்த கையர் ஆகி - “எம்மிடம் இல்லைஎன்று விரித்த கையினராய்,

553. தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் - தம் பெயரைத் தம்முடனேயே எடுத்துச்சென்று அழிந்தவர்கள்,

 554. நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி - உயர்ந்த மலையிலிருந்து கீழேவிழுகின்ற நீர்ப்பெருக்கு நிறைந்த அருவியின்

555. கடுவரல் கலுழிக் கட்கு இன் சேயாற்று - வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்  

556. வடு வாழ் எக்கர் மணலினும் பலரே - கருமணல் இருக்கும் மணல்மேடுகளிலுள்ள மணலினும் பலரே,

557. அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் எனப் - அதனால், புகழோடே முடிவடையட்டும், நமக்கு வரையப்பட்ட வாழ்நாள்என்று

558. பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு - பரந்துபட்டு, எல்லாவற்றிற்கும் இடம்கொடுக்கும் வானத்தை ஒத்த உள்ளத்தோடு
559.
நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது - ஆசைகொண்டவராய்ச் சென்ற உம்மைக்காட்டிலும், தான் பெரிதும்

560. உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கிமகிழ்ந்த நெஞ்சத்தோடே கனிவுடன் இனிதாகப் பார்த்து

கருத்துரை:

 என் மேல் விருப்பம் கொண்டு நீங்கள் வந்ததே போதும்.  நீங்கள் வந்த  வழியில் அடைந்த  வருத்தம் பெரிது.” என்று நன்னன் கூறுவான். பின்னர் படைத்தலைவரோடே பொலிவுபெற்ற செல்வத்தையுடைய தன் அரண்மனையின் முற்றத்திற்கு உங்களை அவன் அழைத்துச் செல்வான்.  ” உயர்ந்த அரச உரிமையையும் கொடுமை இல்லாத அமைச்சர்களையும் அகன்ற நாட்டினையும் உடையவர்களாக இருந்தும், சுருங்கிய அறிவுடன், பரிசில் வேண்டி வந்தவர்களுக்குஇல்லை எனக் கூறி விரித்த கைகளோடு தங்கள் பெயர் தங்களுடன் அழிந்த மன்னர்கள் மலையிலிருந்து பெருகி ஓடுகின்ற சேயாற்றங்கரை மணலிலும் பலராவர். எனவே, நம்முடைய வாழ்வு, நமக்கென்று வரையறுத்து வைக்கப்பட்டக் காலமட்டும், நமது புகழ் வானத்தைப்போல் விரிந்து வளர்ந்து செழிக்க வேண்டும்.” என்று அவன் நினைப்பான். பின்னர், பரிசுபெற விரும்பிச் சென்றுள்ள உங்களைக் காட்டிலும், மிக மகிழ்ச்சியுடன் உங்களை அவன் இனிமையாக நோக்குவான்.

 

நன்னனது கொடைச் சிறப்பு

 

இழை மருங்கு அறியா நுழை நூற் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ,
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு,

நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது,

தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து,             565


பல நாள் நிற்பினும் பெறுகுவிர்; நில்லாது
செல்வேம் தில்ல எம் தொல் பதிப் பெயர்ந்து என,
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்,
தலைவன் தாமரை மலைய விறலியர்

சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய            570

நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடுந்தேர்
வாரிக் கொள்ளா வரை மருள் வேழம்,
கறங்கு மணி துவைக்கும் ஏறுடைப் பெரு நிரை,
பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவி

நிலம் தினக் கிடந்த நிதியமொடு அனைத்தும்,         575

 

இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறைய
கலம் பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக் கையின்,
வளம் பிழைப்பு அறியாது வாய்வளம் பழுநிக்
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்தன்ன ஈகை நல்கி                               580


தலைநாள் விடுக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்

குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே!  

 

அருஞ்சொற்பொருள்:

561. மருங்கு - இடம்;  கலிங்கம் - ஆடை

562. எள் அறு சிறப்பின் – இகழ்ச்சி இல்லாத சிறப்பு;  வெள் அரைக் கொளீஇ -வெண்ணிறம் உடைய ஆடையை இடுப்பில் உடுத்தி

563. முடுவல் -  பெண்நாய்;  பைந்நிணம் – பசிய கொழுப்பு ; தடி - தசைத் துண்டுகள்

564. முட்டாது – குறைவில்லாமல்

565. தலைநாள் - முதல்நாள்; அன்ன – போல; புகல் -விருப்பம் 

567. தில்ல - அசைசொல்; எம் தொல் பதிப் பெயர்ந்து என – எங்களுடைய பழைய ஊருக்குச் செல்ல என்று

569. தலைவன் – உங்கள் தலைவன்; தாமரை -  பொற்றாமரை;  மலைய - சூட

570. சீர் கெழு சிறப்பின் – அழகான சிறப்புடைய;  விளங்கு இழை அணிய -   ஒளிபொருந்திய அணிகலன்களை அணிய

571. நீர் இயக்கு அன்ன – நீர் இயங்குவதுபோல் ;  நிரை செலல் நெடுந்தேர் – வரிசையாகச் செல்லும் நெடுந்தேர்

572. வாரி – யானை பிடிக்கும் இடம்; வாரிக்கொள்ளா – யானை பிடிக்கும் இடத்திலிருந்து பிடித்துக் கொண்டுவராத ;  வரை மருள் வேழம் – மலை போன்ற யானை

573. கறங்கும் -ஒலிக்கும்;  துவைக்கும் - ஆரவாரிக்கும்

574. பொலம் –  பொன்; பொலிந்த  - பொலிவுபெற்ற; கொய்தல் – அறுத்தல்; சுவல் -கழுத்து ;  புரவி - குதிரை

575. நிலம் தினக் கிடந்த – நுகர்வதற்கு மிகையாகப் பொருள் குவிந்து கிடந்த; நிதியம் – பொருட்கள்

576. இலம்படு - வறுமையுற்ற

577. கலம் – கலன் (அணிகலன்) பெய – கொடுப்பதற்கு; கவிழ்ந்த - கீழ்நோக்கி விழும் (தொடிகள்) ; கழல்தொடித் தடக் கையின் – தொடிகள் அணிந்த பெரிய கை

578. வளம் பிழைப்பு அறியாது –தான் கொடுத்த செல்வம் கெடாதபடி; வாய்வளம் பழுநி – வாய்த்த வளம் முற்றுப்பெற்ற

579. கழை – மூங்கில்;  நவிரம் -நன்னனின் மலை ; மீமிசை – உச்சி;  ஞெரேரென -விரைவாக

580. சுரத்தல் – கொட்டுதல்; நல்கி  -அளித்து

581. தலைநாள் -முதல்நாள் ;  விடுக்கும் - விடுவான்;  பரிசில்  - பரிசு

583. குன்று சூழ் – குன்றுகள் சூழ்ந்த;  இருக்கை  - குடியிருப்பு;  கிழவோன் -   உரிமையுடையவன்

பதவுரை:

561. இழை மருங்கு அறியா நுழை நூற் கலிங்கம் - இழை இருக்குமிடம் தெரியாத அளவில் நுண்ணிய நூலால் நெய்த ஆடைகளை
562.
எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ - ஏளனம் அற்ற சிறப்புடைய வெண்ணிற ஆடையை இடுப்பில் உடுத்தி
563.
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு - பெண்நாய் (கடித்துக்)கொண்டுவந்த இளங்கொழுப்புள்ள தசைத்துண்டுகளுடன்

564. நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது - நீண்ட வெண்ணெல்லின் அரிசியும் குறைவில்லாமல்,

565. தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து - முதல் நாள்போல் விருப்பத்துடன் நெஞ்சில் சிறப்பு அடைந்து

566. பல நாள் நிற்பினும் பெறுகுவிர்; நில்லாது - பல நாட்கள் அங்குத் தங்கினாலும் பெறுவீர், இன்னும் பலநாட்கள் அங்குத் தங்காமல்
567.
செல்வேம் தில்ல எம் தொல் பதிப் பெயர்ந்து என -“போகலாமென்று எண்ணுகிறோம், எமது பழைய ஊருக்கு, திரும்பவும்”, என்று

568. மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள் -மெதுவாகக் கூறி, நீங்கள் அவனைவிட்டுப் புறப்படுவீர்களானால், உங்களில்
569.
தலைவன் தாமரை மலைய விறலியர் - தலைவனானவன் பொற்றாமரையைச் சூட, விறலியர்

570. சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணியஅழகான சிறப்புடைய ஒளிரும் அணிகலன்கள் அணிய,                                        

571. நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடுந்தேர் -நீர் ஒடுவதைப்போன்று வரிசையாகச் செல்லும் நெடிய தேர்களையும்
572.
வாரிக் கொள்ளா வரை மருள் வேழம் - யானைபிடிக்குமிடத்தில் கொள்ளாத (பகைவர்களிடமிருந்து பெற்ற), மலை போன்ற யானைகளையும்
573.
கறங்கு மணி துவைக்கும் ஏறுடைப் பெரு நிரை - கழுத்தைச்சூழ்ந்த மணிகள் ஒலிக்கும் காளைகளையுடைய பெரிய பசுக்கூட்டங்களையும்
574.
பொலம் படைப் பொலிந்த கொய் சுவற் புரவிபொன்னால் செய்த சேணம் முதலியவற்றால் பொலிவுற்ற, கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரைக்கொண்ட குதிரைகளையும்

575. நிலம் தினக் கிடந்த நிதியமொடு அனைத்தும் - (எடுக்க எடுக்கக்குறையாமல்)மண் தின்னும்படி கிடந்த (நுகர்வதற்கு மிகையாகப் பொருள் குவிந்து கிடந்த )பொருட்குவியலுடன், அனைத்தையும் 

576. இலம்படு புலவர் ஏற்ற கைந் நிறையவறுமையில் வாடும் புலவர்கள் ஏந்திய கைகள் நிறைய,

577. கலம் பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக் கையின் - அணிகலன்களை அள்ளித்தரக் கவிழ்ந்த இறுக்கமாக இல்லாத தொடிகளையுடைய பெரிய கைகளில்

578. வளம் பிழைப்பு அறியாது வாய்வளம் பழுநி - வளம் குன்றுதல் இல்லாது, வாய்த்த வளமும் செழித்து மிகுந்துள்ள,

579. கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென - மூங்கில் வளரும் நவிரமலையின் உச்சியில்,விரைவாக

580. மழை சுரந்தன்ன ஈகை நல்கி - மழை சொரிவதைப் போன்ற கொடையால் பரிசுகள் வழங்கி

581. தலைநாள் விடுக்கும் பரிசில் மலை நீர்முதல்நாளிலேயே வழியனுப்புபவன், மலையிலிருந்து விழுகின்ற அருவிகள்
582.
வென்று எழு கொடியின் தோன்றும் - வென்று உயரும் கொடியைப்போலத் தோன்றும்

583. குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே!  - மலைகள் சூழ்ந்த குடியிருப்புகளைக்கொண்ட நாட்டிற்கு உரிமையுடையவனாகிய நன்னன்.

கருத்துரை:

நூல் போன இடம் கண்களுக்குத் தெரியாதபடி நுண்ணிய நூலால் செய்த ஆடையை, உங்கள் இடையில் உடுக்கும்படி தருவான். அங்கு நீங்கள் பலநாட்கள் தங்கினாலும், பெண்நாய் கடித்துக் கொண்டுவந்த பசிய கொழுப்புடைய தசைத் துண்டுகளுடன், நீண்ட வெண்ணெல்லின் அரிசியை எல்லையில்லாது, முதல் நாள்போல் விருப்பத்துடன் பெறுவீர்கள். அங்கு இன்னும் பலநாட்கள் தங்காது, “நாங்கள் செல்ல எண்ணுகின்றோம் எங்கள் ஊருக்குஎன நீங்கள் மெல்லெனக் கூறி, அவனைவிட்டு புறப்படுவீர்களானால், தலைவனாகிய நீ பொற்றாமரை சூடவும், விறலி பொன்னாலான அணிகலன்களை அணியவும் செய்வான். அத்தோடு மட்டுமல்லாமல், நெடிய தேர்களையும், மலை போன்ற யானைகளையும், காளைகள் உடைய பசுக்கூட்டத்தையும், பொன்னாலான சேணத்தையுடைய குதிரைகளையும், குறைவில்லாத பொருள்களையும் முதல்நாளிலேயே கொடுத்து உங்களை வழியனுப்புவான். அவன் மலையிலிருந்து விழும் அருவி வெற்றிக்கொடியப்போலத் தோன்றும். அத்தகைய மலைகள் சூழ்ந்த குடியிருப்புகளைக்கொண்ட நாட்டிற்கு உரிமையுடையவன் நன்னன்.

Comments

Popular posts from this blog

மலைபடுகடாம் – அறிமுகம்

உங்கள் கவனத்திற்கு