மலைபடுகடாம் – அறிமுகம்
மலைபடுகடாம் – அறிமுகம்
தமிழ் மொழியின் தொன்மை
இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1].
அந்த
நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்” என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.
இதிலிருந்து,
தொல்காப்பியத்துக்கு
முன்னரே
பல
இலக்கண
நூல்கள்
இருந்திருக்க
வேண்டும்
என்று
தெரிகிறது.
எள்ளிலிருந்து
எடுக்கப்படுவதுதான்
எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன.
சங்க இலக்கியம்
சங்க
காலம்
என்பது
கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கின்றனர். சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, மூன்று முதல் 140 அடிகளுடைய பாடல்களில் சிறந்தவற்றை,
எட்டு
நூல்களாகத்
தொகுத்தார்கள்.
அந்த
எட்டு
நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு. எட்டுத்தொகை என்ற சொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்தொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன.
பத்துப்பாட்டு
கீழ்வரும் பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
பத்துப்பாட்டில் உள்ள
நூல்கள்:
1. திருமுருகாற்றுப்படை,
2. பொருநராற்றுப்படை,
3. சிறுபாணாற்றுப்படை,
4. பெரும்பாணாற்றுப்படை,
5. முல்லைப்பாட்டு,
6. மதுரைக் காஞ்சி,
7. நெடுநெல்வாடை,
8. குறிஞ்சிப்பாட்டு,
9. பட்டினப்பாலை,
10. மலைபடுகடாம்.
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களும் ஆற்றுப்படை என்னும் வகையைச் சார்ந்தவை. இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களும் மதுரைக்காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நான்கும் அகத்திணையைச் சார்ந்தவை.
ஆற்றுப்படை
கூத்து என்பது நாடகம். கூத்தர் என்பவர் நாடகத்தில் வல்லவர்; பாணர் என்பவர் குழல், யாழ் முதலிய இசைக்கருவிகளோடு பாடுபவர். பொருநர் என்பவர் ஏர்க்களம் அல்லது போர்க்களம் சென்று பாடும் கூத்தர். விறலி என்பவள் தன் உள்ளக்குறிப்பை நடிப்பின் வழியாக வெளிப்படுத்தும் திறமை மிக்கவள். கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியரும்
தமக்கு ஆதரவாக இருந்த வள்ளலிடம் (அல்லது மன்னனிடம்) தம் கலைத்திறனைக் காட்டிப் பரிசு பெற்று மீள்வர். அவ்வாறு மீண்டுவருபவர்
வள்ளல்களை நாடிச் செல்லும் தம்மைப் போன்ற கலைஞரை வழியில் கண்டால், அவர்மீது இரக்கம்கொண்டு, தம்மை ஆதரித்த வள்ளலிடம் சென்று பரிசு பெறுவதற்கு அவர்களை ஆற்றுப்படுத்துவர் (வழி கூறி அனுப்புவர்). இவ்வாறு ஆற்றுப்படுத்துதல் “ஆற்றுப்படை” என்று அழைக்கப்படுகிறது.
கூத்தன், பாணன் பொருநன், விறலி ஆகியோரை ஆற்றுப்படுத்துவதைப் பற்றிய பாடல்கள் முறையே கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என்று அழக்கப்படுகின்றன.
திருமுருகாற்றுப்படையில் முருகப் பெருமானின் அருள்பெற்ற ஒரு பக்தன் மற்றொரு பக்தனை முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்கு ஆற்றுபடுத்துகிறான். சிறுபாணாற்றுப்படையில் ஒரு பாணன் மற்றொரு பாணனை ஓய்மா நாட்டு மன்னன் நல்லிக்கோடனிடம் செல்வதற்கு ஆற்றுப்படுத்துகிறான். பெரும்பாணாற்றுப்படையில் ஒரு பாணன் மற்றொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையனிடம் சென்று பரிசு பெறுவதற்கு ஆற்றுப்படுத்துகிறான், பொருநராற்றுப்படையில் ஒரு பொருநன் மற்றொரு பொருநனைக் கரிகால் வளவனிடம் ஆற்றுப்படுத்துகிறான். மலைபடுகடாம் என்ற பாடலில், ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனை நன்னனிடம் சென்று பரிசு பெறுவதற்கு ஆற்றுப்படுத்துகிறான். மலைபடுகடாம் என்ற பாடலில் ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனை ஆற்றுப்படுத்துவதால், மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை என்றும் அழைக்கப்படுகிறது.
மலைபடுகடாம்
கடாம் என்ற
சொல்லுக்கு யானையின் உடலில் தோன்றும் மதநீர் என்று பொருள். மலையை ஒரு பெரிய
யானையாகவும், மலையில் எழும்
பலவகை இனிய ஓசைகளை, யானையின் உடம்பில் மதநீர் பெருகும் போது, அதைச் சுற்றி
வட்டமிடும் பலவகை வண்டுகளால் எழும் ஓசையாகவும், வண்டுகளின் தொல்லையால் யானையிடமிருந்து எழும்
ஓசைகளாகவும் பாடலாசிரியர் உருவகம் செய்துள்ளார். அதனால் இப்பாட்டு மலைபடுகடாம் என்ற பெயர் பெற்றது.
மலைபடுகடாம் 583 அடிகளைக்கொண்ட அகவற்பா வகையைச் சார்ந்த பாட்டு. இதை இயற்றியவர் இரணிய
முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் என்னும் புலவர் ஆவார். பழைய தொண்டை
நாட்டின் 24 கோட்டங்களில் ஒன்று பல்குன்றக்கோட்டம். இது தற்போதைய திருவண்ணாமலை
மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களின் சில
பகுதிகளை உள்ளடக்கியது. இதில் செங்கம், போளூர், ஆரணி ஆகிய நகரங்கள் அடங்கும்.
இப்பாட்டுடைத் தலைவன் செங்கண்மா என்ற நகரத்தைத் தலநகராககொண்டு பல்குன்றக்
கோட்டம் என்ற நாட்டை ஆட்சி செய்த நன்னன் என்ற மன்னன். நன்னனின்
தலைநகரான செங்கண்மா இன்றைய திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள செங்கம் ஆகும். மலைபடுகடாம்
கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் என்றும் டாக்டர் மா. இராசமாணிக்கனார்[2]
குறிப்பிடுகிறார்
இப்பாட்டில், நன்னனது
மலயுயடிவார வளம், மலை
வழிகள், காடுகள், மலைமீது
உள்ள முல்லை நிலம், பாலைநிலம், மருதநிலம், மலைகளில் கேட்கும் பலவகை ஓசைகள், மலைவாழ்
மக்களின் பல வகையான உணவுப் பொரருட்கள், நவிர மலை, அங்குள்ள சிவன் கோவில், மலைகளில்
உள்ள அரண்கள், நாடு
காவலர்களின் இயல்புகள், நடுகற்கள், நன்னனின் முற்றத்துச் சிறப்பு, நன்னனின்
கொடைச் சிறப்பு முதலியன மிகவும் விரிவாகவும் அழகாகவும் வருணிக்கப்பட்டுள்ளன.
இப்பாட்டில்
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள், நன்னனின் அரண்மனைக்குச் செல்லும் வழி, அந்த வழியில் உள்ள விலங்குகள், அங்குள்ள மக்களின் விருந்தோம்பல், அவர்களின் உணவுவகைகள் ஆகியவற்றைப் புலவர் இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் விளக்காமாக வருணித்திருப்பதை ஆழ்ந்து படிக்கும்பொழுது, அவர் நம்மை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த நன்னிடம் அழைத்துச் செல்வதைப்போல் நாம் உணர்கிறோம். மலைபடுகடாம் பல அரிய செய்திகள் அடங்கிய ஒரு களஞ்சியம் என்றால் அது மிகையாகாது.
Comments
Post a Comment