மலைபடுகடாம் – பொருட்சுருக்கம்

 

மலைபடுகடாம் பொருட்சுருக்கம்

 

கூத்தர்களின் இசைக்கருவிகள்

வளமையை உண்டாக்கும் மழையைப் பொழிந்த இருண்ட நிறத்தையுடைய வானத்தில் விண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப்போல் ஒலிக்கும் மத்தளம் வலித்து இறுக்கிக் கட்டிய வார்க்கட்டுடையது.  கஞ்சதாளம் வெண்கலத்தை உருக்கித் தகடாகத் தட்டிச் செய்யப்பட்டது. கொம்பு வாத்தியம் மயிலிறகும் தழையும் கட்டப்பெற்றது. நெடுவங்கியம் யானையின் தும்பிக்கைபோல் துளைகள் உள்ளது. தூம்பு இளி என்னும் நரம்பின் ஓசையைத் தன்னிடத்தே தோற்றுவிக்கும் இயல்புடையது. குழல் பாட்டின் சுருதி குன்றாமல் மேற்கொண்டு நிற்கும். தட்டைப் பறை தவளையின்  குரலை உடையது. எல்லரி தாளத்திற்கேற்ப ஒலிக்கும். பதலை முரசு தாளத்தைச் சொல்லும் மாத்திரையை உடையது. இவற்றோடு சிறுபறையையும் வேறுபல வாத்தியங்ளையும்  பைகளில் இட்டுச் சுருக்கிக் கட்டப்பட்டு, பலாக்காய்க் கொத்துகள் போன்ற தோற்றத்தை உடையனவாக இருக்கும். அவ்வாறு கட்டப்பட்ட வாத்தியங்களை காவடிபோல் கூத்தர்கள் தம் தோளில் சுமந்து செல்வர்.

 

கூத்தர்கள் கடந்துவந்த மலைவழியின் இயல்பு

கடுக்காய் மரம் மிகுதியாக வளர்ந்த இடம் பெரிதான மலைச்சரிவில்,  படுக்க வைத்தாற் போன்ற பாறைகளின் பக்கத்தில் கீழே கிடக்கும் பாறைகளை எடுத்து நிறுத்திவைத்ததைப் போன்ற குறுகலான, ஏறுதற்குக் கடினமான சிறிய வழி உள்ளது. அந்த வழியில், தம் வில்லில் அம்பைத் தொடுத்து, கானவர் தமது மனைவியருடன் சேர்ந்திருப்பர். அவர்கள் இடற்பாடு செய்யாமல், வழிப்போக்கர் -களைப் போகச்செய்வர். செல்லுதற்கரிய அரிய உயரமான வழியில், நீங்கள் அஞ்சாமல் மனவுறுதியுடன் செல்லுங்கள்.

 

பேரியாழின் இயல்பு

பேரியாழ் பெண்கள் கையில் அணியும் வளையல் போன்று ஒன்பது வார்க்கட்டுகளை உடையது. அதன் நரம்புகள் வெண்சிறுகடுகளவேனும் அவிழாதபடி உருவி ஓசை ஓர்ந்து பார்த்துக் கட்டப்பட்டவை. ஒலித்தல் அமைந்த பத்தல் வரகின் கதிர் ஒழிகின தன்மைபோல நுண்ணிய துளைகள் செய்து, துளைகள் நிரம்பும்படி ஆணிகள் இறுகத்தைத்து யானைக்கொம்பாற் புதிதாகச் செய்த யாப்பு அமைக்கப்பட்டிருக்கும். பிசினோடு சேர்ந்த  தோலாலாகிய போர்வை பொன்னிறமுடையது. பேரியாழ், போர்வைத்  தோலிற்கும் யாப்பு என்னும் உறுப்புக்கும்  இடயே அமைந்த உந்தி என்னும் உறுப்பைக் கொண்டது. அதன் வளைந்து ஏந்திய தண்டு களாப்பழத்தின் நிறமுடையது. இத்தகைய உறுப்புகளைக் கொண்டது பேரியாழ்.

 

கூத்தர் தலைவனை அழைத்தல்

கூத்தர் குடும்பத்தின் தலைவனே! நீ பேரியாழைப் பயன்படுத்தி, இசை நூலோர் வகுத்த நெறியிலிருந்து பிறழாமல், அரசர்களின் அவைக்கேற்பப் பாடும் அனுபவம் மிக்க பாணர்களுடன் வந்திருக்கிறாய். உன்னோடு விறலியரும் வந்திருக்கிறார்கள். உயர்ந்து ஓங்கிய மலைப்பாதையில் ஏறி வந்தபொழுது, அந்த விறலியரின் பாதங்களை அங்குள்ள கற்கள் வருத்தியதால், அவர்கள் பாதங்கள் ஓடியிளைத்துத் தளர்ந்த நாயின் நாக்கைப்போல் உள்ளன. அவர்களின் தாழ்ந்து தொங்கும் கூந்தல் அசைவது, மயிலின் தோகை அசைவதைப்போல் உள்ளது. அவர்களின் கண்கள் மானின் கண்ணோடு உருவத்தால் ஒத்தும், நோக்கால் மாறுபட்டும், சிவந்த வரிகளையுடையனவாகவும் உள்ளன. அவர்கள் ஒளிபொருந்திய வளையல்களை அணிந்திருக்கிறார்கள்.  மலைப்பாதையில் நடந்துவந்தபொழுது ஏற்பட்ட துன்பம் நீங்கி  இப்போழுது அவர்கள் தளர்ச்சியோடு இருப்பது, பிள்ளைப்பேற்றின் பொழுது துன்புற்ற ஒருபெண் அத்துன்பம் நீங்கித் தளர்ச்சியோடு இருப்பதுபோல் உள்ளது. குளத்தில் குளிக்காமலேயே குளிப்பதுபோல் மகிழ்ச்சி அளிக்கும் நிழலில் நீங்கள் அனைவரும் தங்கி இளைப்பாறுகிறீர்கள்.

 

நன்னனிடம் சென்றால் நல்ல பயன் பெறுவீர்கள்

மலையுச்சியில் உதிர்ந்த  நல்ல பூக்கள் செறிந்த ஆறு கடலை நோக்கிச் செல்வதுபோல் நாங்கள் நன்னனிடமிருந்து பரிசுகளைப் பெற்று வருகின்றோம். பழங்களைச் சொரியும் காட்டில் அவற்றை உண்பதற்குச் சுற்றத்தாருடன் விரைந்து பறக்கும் பறவைகளைப் போல் நன்னிடம் நீங்களும் செல்லுங்கள். அவன் அழகிய மாலையை அணிந்த மார்பினன்; ஓவியத்தால் அழகு செய்யப்பட்ட முலையையும், வளைந்த மூங்கிலைப் போன்ற திரண்ட தோள்களையும், மலர்போலும் குளிர்ச்சியை உடைய கண்களையும் உடைய மங்கையரின் கணவன்; பகைவர்களின் நிலத்தைப் பாழ்படச் செய்யும் வலிமை உடையவன். பிறர் புகழைக்  கூறுதல் என்னும் விதையை விதைத்து, அவர் தரும் பரிசை விரும்பும் பரிசிலர்க்கு, வெள்ளப் பெருக்கால் வந்த நீர்போலப் பரிசளிப்பான்.  அவன் தன் அறிவிற்கு மாறாகிய கேடுகளை நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடையவன்;  வில்தொழில் பயின்ற பெரிய கையினையும், சிறந்த அணிகலன்களையும் உடையவன். அவன் தரும் பரிசுகளை உறுதியாக விரும்பி அவனிடம் செல்வீராக. நீங்கள் புறப்பட்ட நேரம் நன்னிமித்தம் உடையதாக இருந்ததால் எம்மைச் சந்தித்தீர்கள்.

 

கூத்தன் நன்னனைப் பற்றிக் கூறுதல்

நன்னனை அடைவதற்குச் செல்லும் வழியின் தன்மையையும், தங்குவதற்கான நல்ல இடங்களையும், பிற நாடுகளில் இல்லாத செல்வத்தைத் தவறாது கொடுக்கும் அவன் நாட்டில் விளையும் உணவுகளையும், அவன் நாட்டில் உள்ள மலைகளின் தன்மையையும், சோலைகளின் தன்மையையும், விலங்குகள் விரும்பித் திரியும் காட்டின் தன்மையையும் நான் கூறுவேன்.   பகைவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்து அவர்களுடைய அரிய அணிகலங்களைக் கொண்டுவந்து புலவர்களுக்கு வழங்கும் நன்னனின் மழைபோன்ற வள்ளன்மையைப் பற்றிக் கூறுவேன். அவன் தன் அரசவையிலிருந்து, தன்னை இகழ்வோரைத் தன்வயப்படுத்தும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும், தன்னைப் புகழ்பவர்க்கு தன் ஆட்சி முழுவதையும் கொடுத்தாலும் மனநிறைவடையாத அவனுடைய எண்ணத்தைப் பற்றியும் சொல்வேன். அவனுடைய அவையில், தாம் கற்றவற்றைச் சொல்லும் ஆற்றல் உடையவர்கள் இருப்பாரகள். அந்த அவையில், தாம் கற்றவற்றைக் கூறும் திறமை இல்லாதவர்கள் இருந்தால், அவர்களின் திறமையின்மையை மறைத்து, தாம் பொருளைச் சோர்வில்லாமல் சொல்லிக் காட்டி எல்லோரும் ஏற்றுக்கொளும்படி செய்யும் அவனுடைய சுற்றத்தாரின்  செயலைப் பற்றியும் கூறுவேன்.

 

கடல் சூழ்ந்த இவ்வுலகம் நடுங்கும்படி அச்சம் தோன்றும் கடுமையான வலிமையுடைய பெரும் புகழுடைய நவிரம் என்னும் நன்னனின்  மலையில் நஞ்சை உண்ட சிவபெருமான் இருப்பான்.  பரந்த இருளை நீக்கிப்  பகற்பொழுதைத் தோற்றுவிக்கும் கதிரவனைப்போல் தனது பகைவர்களை அழிப்பவன் நன்னன்.   அவனுடைய குற்றமில்லாத சிறப்பையும்பகைவர் நாடு தொலைவில் இருந்தாலும், அங்குச் சென்று பகைவரின் தூசிப்படையை வலிமையுடன் வென்றுக் கொன்று,  யானைப்படையை வேற்போரில் வென்ற திறமை மிக்க வீரர்களுக்கு நாடும் ஊரும்  வேறு சில பரிசுகளும் அளிப்பதைத் தன் கடமையாகக்கொண்ட நன்னனைத் தொன்றுதொட்டு மறக்குடியில் வந்த மறவர்கள் புகழ்வர். இரையைத் தேடித் திரியும் முதலைகள் உள்ள அகழியும் வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்த மதிலும் உடையது நன்னுடைய ஊர்.  இவற்றைப் பற்றியெல்லாம் நான் கூற, நீ கேட்பாயாக!

 

 

 

வழியின் நன்மையைப் பற்றிக் கூறுதல்

கேட்பாயாக! இப்பொழுது, நீ வேளிர் குலத்தைச் சார்ந்த நன்னனை  நினைத்துச் செல்கின்ற திசைதான், மிகுந்த செல்வம் நிறைந்த  புதுவருவாயையுடைய திசைகளுள் என்றும் புதியதாகவே இருக்கும் தன்மையுடையது. இது அந்த வழியில் உள்ள இடங்களின் பண்பு. விதைத்தவை எல்லாம் விளையவேண்டுமென்று அங்குள்ளவர்கள் விரும்பியவாறே விளையும்படி மேகம் மின்னி மழைபெய்யும். இருண்ட வானத்தில் மேகம் பிளந்து மின்னலாகிய வடுவுடன் மழைபெய்த கொல்லைநிலத்தில், கார்த்திகை விண்மீன்போல் புல்லிய கொடியையுடைய முசுண்டை வெள்ளையாக மலர்ந்திருக்கும். வயல்களில் முளைத்த பலகிளைகளையுடைய எள்ளுப் பயிர்கள் நீலமணிபோல் விளங்கும். நீர் நிறைந்த சுனைகளையுடைய காட்டில் மிகுதியாக மழைபெய்வதால், மகுளியென்னும் நோய் பரவாமல், முற்றிக் கருத்து நிறைந்த எண்ணெயுடைய எள்ளின் ஏழுகாய்கள் ஒரு பிடியில் அடங்கும்படி கொழுத்திருக்கும்.  விளையாட்டுக்காகப் போரிடும் யானைக் கன்றுகளின் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் துதிக்கைகளைப் போல் கதிர்களையுடைய தினைமுற்றி அறுக்கும் பருவத்தை அடைந்திருக்கும். தினை அரிந்த தாள்களில் அரிவாளின் வாயை ஒத்த காய்களைக்கொண்ட அவரையின் பூக்கள் தயிர்த்துளிகள்போல் உதிர்ந்து கிடக்கும். எருமை மாடுகள் படுத்துக் கிடப்பதுபோல் இருக்கும் பாறைகள் உள்ள வழியில், வாதிப்பவனின் இணைந்த கை விரல்களை ஒத்த  வரகின் தாள்களை அறுப்போர் அரிவாளால் அரிவர்.  ஐவனம் என்னும் நெல்லும் மிகுதியாக  விளைந்து முற்றி இருக்கும். வேற்படையுடைன்கூடிய வீரர்கள் விழுந்து கிடப்பதைப்போல் காற்றில் தலை சாய்ந்து கரும்புகள் வெட்டப்பட்டு ஆலைக்குச் செல்லும் நிலையில் இருக்கும். மழைபெய்த காட்டில், மூங்கில் நெல் அவல் இடிக்கும் பக்குவத்தில் முற்றி விளைந்திருக்கும். உழாமல் விதைக்கப்பட்டு, களைக் -கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில் வெண்சிறுகடுகுச் செடிகள் நெருங்கி வளர்ந்திருக்கும். கரிய நிறமுடைய நெய்தல் பூக்கள், வயல்களில் நிறையப் பூத்திருக்கும். கையால் செய்யப்படாமல் இயற்கையாக அமைந்த பாவை உருவில் வளர்ந்த அழகு மிகுந்த இஞ்சி உறைப்பை உடையதாக இருக்கும்.  கொடிகள் செழித்துப் படர்ந்த கவலை, மாவுடைய கிழங்குகளை வீழ்த்தும். யானை முகத்தில் குத்தும் அங்குசம்போல், கூரிய முனை உடைய வாழைப் பூக்கள் மலைப் பக்கங்களைக் குத்தும். நெருங்கிய வாழைக் குலைகள் பழுத்திருக்கும். நெல் முற்றிய பெருமூங்கில்கள் அசைந்துகொண்டிருக்கும். நிலத்தின் வளத்தால், பருவகாலம் இல்லாத பொழுதும் மரங்கள் பயனைக் கொடுக்கும். காற்று அசைவதால் நாவல் மரங்கள் பழங்களைப் பாறையில் உதிர்க்கும். நீர்ப்பதமுடைய உயவைக் கொடியும் கூவைக் கிழங்கும் நிறைந்திருக்கும்.  அவை  உண்ணுவதற்கு வேறு எதையும் தேடிப் போகாதவாறு வழிப்போக்கர்களைத் தடுக்கும். தேமாங்கனிகள் மேல்தோல் வெடித்து விதைகளை உதிர்க்கும். பருத்த அடியையுடைய பலாமரங்களின் கனிகள் முற்றிப் பழுத்து, வெடித்து, அதன் சுளைகளும் கொட்டைகளும் எங்கும் சிதறிக் கிடக்கும்.  பேராந்தைப் பறவைகள் ஆணும் பெண்ணுமாக மாறிமாறி ஒலிக்கும். மலைச் சாரல்களில் மழை மிகுதியாகப் பெய்ததால், பலாமரத்தின் அசையும் கிளைகளில் உள்ள காய்கள், கூத்தர்கள் கொண்டுசெல்லும் மத்தளம்போல் மரக்கிளைகளில் தொங்கும்.

கானவர் குடியிருப்பு

மழையால் செழித்து வளர்ந்த செங்காந்தளின் நெருப்பைப்போல் ஒளியுடைய புதிய அரும்பைத்  தசையென்று தவறாக நினைத்து, பொலிவிழந்த முதுகையுடைய  ஆண் பருந்து எடுக்கும். எடுத்தது தசை அல்லாததால் அதை உண்ணாமல் அவற்றை ஆண் பருந்து பாறைகள் மீது போடும். பாறைகள்மீது போடப்பட்ட இதழ்கள் பரந்து, வெறியாடுகின்ற களத்தைப்போல் இருக்கும்.  திருமண வீடுபோல் மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே கிடைக்கும் தேனையும், கிழங்கையும், தசை நிறைந்த கூடைகளையும் உடைய கானவர், சிறிய கண்களையுடைய பன்றியின் தசைகளில் பழுதுள்ளவற்றை நீக்கி, போரில் இறந்த யானைகளின்  தந்தங்களில் காவடிபோல் அவற்றைச் சுமந்து செல்வர். அந்தக் கானவர்களின் வளம் மிக்க பலவிதமான புதுவருவாயையுடைய சிறிய ஊர்களில் நீங்கள்  தங்கினால், நீங்களும் உங்களுடைய மிகப் பெரிய  சுற்றமும் பல உணவு வகைகளைப் பெறுவீர்கள்.

 

வழியிலுள்ள சிற்றூரில் நிகழும் விருந்து

அன்று அவ்விடத்தில் இளைப்பாறி, இரவிலும் அவர்களுடன் தங்குவீராக. காலையில், எரியும் நெருப்புபோல் ஒளிரும் பூங்கொத்துக்களை நீங்களும் உங்கள் சுறத்தாரும்  சூடிச் சிவந்த அசோக மரங்களுள்ள நல்ல வழியில் செல்வீராக. அசைகின்ற மூங்கில்கள் ஒலிக்கும் கடினமான ஏற்ற இறக்கங்களான பாதைகளையுடைய மலைச்சரிவை அடுத்துள்ள  சிற்றூர்களை அடைந்து, ”பகைவரைப் பொறுக்காமல் புரியும் போரில் வெற்றி உண்டாகும் வலிய முயற்சியும், மானஉணர்ச்சிமிக்க, வலிமைமிக்க நன்னனுடைய கூத்தர் யாம்என்று கூறுவீர்களாக. உம்முடைய சொந்தவீடுபோல வாசலில் நிற்காமல் உள்ளே புகுந்து உரிமையுடையவர்போலக் கேட்காமலேயே, அவருடன் நட்புக் கொள்ளுங்கள். தொலைவிலிருந்து வந்த உங்கள் வருத்தம் நீங்க, இனிய மொழிகள் கூறி, பருத்த தசைத்துண்டுகள் சொரிந்து நெய்யில் வெந்த,  நிறம் மிகுந்த தினைச்சோற்றை அவர்கள் உங்களுக்குத் தருவார்கள்.

 

வீடுகள் தோறும் விருந்து

மேலும், அவ்வூர் மக்கள் மலைமீது ஏறிக் கொண்டுவந்த பண்டங்களை உங்களுக்கு வழங்குவர். மூங்கில் குழாயில் பெய்யப்பட்ட தேனால் செய்த கள்ளை அளிப்பர். அதைக் குறைவில்லாமல் குடித்த பிறகு, நெல்லால் சமைத்த கள்ளைக் குடித்து மகிழுங்கள். மறுநாள் விடியற்காலையில், கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற உம்முடைய குடிமயக்கம் தீர, பலாப்பழத்தின் விதைகளையும், கடாமானின் கொழுத்த தசையையும், முள்ளம்பன்றியின்  கொழுப்புடைய தசையையும், உடும்பின் தசையையும், மூங்கிலரிசியையும் புளி கலந்த மோரில் இட்டு, சுரபுன்னை நெருங்கிய மலையெங்கும்  மணக்கும்படிக் குறமகள் சமைப்பாள்.  அவ்வாறு குறமகள் சமைத்த   உணவை, மன மகிழ்ச்சியோடு, தம் பிள்ளைகளையும் உறவினர்களையும் கொண்டு உங்களைப் போகவிடாது தடுத்து, வீடுகள்தோறும் உங்களுக்குக் கொடுப்பார்கள்.

மலைநாட்டில் நெடுநாள் தங்க வேண்டாம்

போர் செய்யும் மிக்க வலிமையையுடைய  நன்னனைக் கருதிச்செல்லும் நீங்கள் அவனிடமிருந்து பெற விரும்பும் பரிசையும் மறக்குமளவுக்கு மலைப்பகுதியில் உள்ள மக்களின் விருந்தோம்பல் இருக்கும். அவனுடைய மலைப்பகுதி அத்தகையது. அதனால் நீங்கள் அங்கே நெடுநாட்கள் தங்கக்கூடும். ஆனால், அங்குள்ள  குவளையின் தொழுகைக்குரிய பூக்களை நீங்கள் தெரியாமல் தொட்டாலும், மலையில் வாழும் பெண் தெய்வங்களின் இருப்பிடத்தை நீங்கள் கண்டாலும், நீங்கள் உயிர் போகுமளவுக்கு அஞ்சி நடுங்குவீர்கள். எனவே, நீங்கள் பல நாட்கள் அங்குத் தங்காமல் மலையை விட்டிறங்கி  நிலப்பகுதிக்குச் செல்லுங்கள்.

 

இரவில் செல்லாதீர்கள் 

விளைந்து முற்றிய தினைப்புனத்தை அழிக்கும் பன்றிகளுக்கு அஞ்சி, அவை புகும் வழிகள்தோறும், அடார் என்னும் கருவிகளை மலைக்குறவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்அதனால், நள்ளிருள் நீங்கிக் கதிரவனின் கதிர்கள் விரியும் அதிகாலை வரையில் அவ்விடத்தில் தங்கிவிட்டு, அதன்பின் நீங்கள் செல்லுங்கள்

 

கடந்து செல்லும் வகை

செறிந்து பலரும் செல்லாத வழியில் நீங்கள் போகத் துணிந்தால், மேட்டு நிலத்தில் உள்ள உடைந்த பரல் கற்களையுடைய பள்ளத்தில் உள்ள பிளவுகளில் பாம்புகள் மறைந்து  ஒடுங்கியிருக்கும் குழிகள் உள்ளன என்பதை குறித்துவைத்துக்கொண்டு, மரங்களில் ஏறிக் கைதட்டிப் பார்த்து, செறிந்த வளையல்களை அணிந்த உங்கள் விறலியர் இறைவனைக் கைகூப்பி வாழ்த்த, அவ்வழியிலிருந்து சிறிது விலகி வலப்பக்கத்து வழியில் செல்லுங்கள்.

 

கவண் கற்கள் படாமல் தப்பிச் செல்லும் விதம்

தினைப்புனத்தை யானைகள் அழிக்காதவாறு, குறவர் உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி இருந்து காவல் காப்பர். அவர்கள்  கைகளைத் தட்டி, அகன்ற மலையின் புதர்க்காட்டில் கூட்டமாகத் திரியும் யானைகள் நிலைகுலையுமாறு கவண்கற்களை எறிவர். அவர்கள் எறியும் கற்கள் மூங்கில் தண்டுகளில் தத்தித்தத்திச் சென்று ஓசை எழுப்பும். அந்த ஓசையைக் கேட்டு, குரங்குகள் தங்கள் குட்டிகளோடு பயந்தோடும். அந்தக் கவண்கற்கள் வேகம் குறையாமல் வரும். எனவே, நீங்கள் மரங்களின் பின் ஒளிந்துநின்று செல்லுங்கள்.

 

வழுக்கும் இடங்களைக் கடத்தல்

நீங்கள் செல்லும் வழியில், இரவை ஒத்த இருள் அடர்ந்த காடு இருக்கும். அந்தக் காட்டில் உள்ள ஆற்றில்,  நீர்ச்சுழிகளும், ஆழமான மடுக்களும் முடுக்குகளும் இருக்கும்.  அவற்றில் யானையை விழுங்கக்ககூடிய முதலைகள் இருக்கும். அந்தக் காட்டாற்று வழியில் நடந்து சென்றால், அங்கு வழுக்கும் இடங்கள் இருக்கும். அந்த இடங்களில் வழுக்காது உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். மரங்களைச் சூழ்ந்த பருத்த கொடிகளைப்  பற்றிக்கொண்டு , செம்மறியாட்டை ஒத்த பொலிவிழந்த தலைகளையுடைய உங்கள் பிள்ளைகளுடன் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொண்டு நீங்கள் செல்லுங்கள்.

 

பாசி படிந்த குளக்கரைகளைக் கடந்து செல்லுதல்

அசையும் மலையெருக்கு வளரும் மலைச்சாரலில், விழுந்தவரைக் கொல்லும் ஆழமான குளம் இருக்கும். அந்தக் குளத்திற்கு அருகே, வழுவழுப்பினால் கீழுள்ள தரையை மறைக்கும் நுண்ணிய தன்மையுள்ள பாசி படர்ந்திருக்கும். அந்தப் பாசி படர்ந்த தரையில் அடிவைத்தால், அது அடியைத் தளரச் செய்யும்.  அதனால், அந்த இடம் நடப்பதற்குக் கடிமானதாக இருக்கும். அங்குச் செல்லும்பொழுது, வழி முழுவதும் உள்ள, பின்னி வளர்ந்த நுண்ணிய கோல்களையுடைய சிறுமூங்கிலையும் நாணலையும் பிடித்துக்கொண்டு செல்லுங்கள்.

 

கடவுளைத் தொழுதல்

உயர்ந்த நவிர மலையில், மழைபோல் வில்லிடத்திலிருந்து புறப்படும் அம்புகளும், தூசிப்படையுடன்  போர்த்தொழில் பயின்ற யானைகளும் உள்ளன.  மலை உச்சியில் ஒளியுடைய பூக்கள் உள்ளன. குளங்களை உடைய ஆற்று வழியில், பழைய மதிலையுடைய கோவிலில் தொழுவதற்கு அரிய மரபினையுடைய கடவுளை நீங்கள் கண்டால், அக்கடவுளை வணங்கி நீங்கள் செல்லுங்கள்நன்னனுடைய வளமான நவிர மலையில் , இடைவிடாமல் மழை பெய்வதால், உங்களுடைய இசைக்கருவிகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

கவனமாகச் செல்ல அறிவுறுத்தல்

சோழியைப் போன்ற வெண்மையான அடிப்பக்கத்தையுடைய மயிலிறகுகளைக்கொண்ட, தோகையையுடைய மயில்கள் காட்டில் ஆடியிளைத்து நிற்கும். கடிய ஒலியுடைய பறையையுடைய கூத்தர்களின் பிள்ளைகளைப்போல் நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்புகளில் குரங்குகள் பாயும். செங்குத்தான உயர்ந்த மலையில், தேர்ச்சக்கரம்போல், தேனீக்கள் கட்டிய, தெய்வமகளிர் விரும்பும் தேனடைகள் காணப்படும். அவற்றை விரைவாகக் காண்பதைத்  தவிருங்கள், அது உமக்கு உரிய செயல் அன்று,   ஏனெனில், வரிசையாகச் செல்லும்பொழுது, உங்கள் மெல்லிய அடி தவறினால் நீங்கள் வழி தப்புவீர்கள்.

 

இரவில் குகைகளில் தங்குதல்

மலையைச் சேர்ந்த வழியினையுடைய காட்டில் நீங்கள் சென்றால், பரணில் உள்ள தினைக் காவலன் எய்த அம்பினால் மார்பில் புண்பட்டு விழுந்த பன்றியைக் காண்பீர்கள். அந்தப் பன்றி வெண்மையான கொழுப்பையும், சொரசொரப்பான கழுத்தையும், கரிய நிறத்தையும் உடையதாக இருக்கும். மூங்கில் உரசுவதால் உண்டான தீயில் வாட்டி, அந்தப் பன்றியை, மயிர்போகச் சீவித் தின்று, குவளை மலர்கள் உள்ள சுனையின் தெளிந்த நீரைக்  களைப்புத் தீரக் குடியுங்கள். தின்னாமல் மிகுந்த தசை உணவைப்  பொதியாகக் கட்டிக்கொண்டு, உங்கள் பிள்ளைகளுடன், இரவுப்பொழுதில் செல்லாமல் உங்களைப் பாதுகாத்து, உங்கள் இல்லத்துள் புகுந்தாற்போல, வழியில் உள்ள மலைக் குகையில் தங்குங்கள்.

 

செம்மையான பாதையில் செல்லுமாறு கூறுதல்

இரவில் நீங்கள் யாவரும் கூடியிருந்து இளைப்பாறி, கதிரவனின் கதிர் விரிந்த விடியற்காலையில் உறக்கத்திலிருந்து எழுந்து, காட்டில் உள்ள செம்மையான வழியில் செல்லுங்கள்.

 

முன் எச்சரிக்கைகள்

குளத்தைப் பார்த்ததைப் போன்ற, அகன்ற பசுமையான(குளிர்ந்த), அழகிய அவ்விடத்தே வலிமை மிகுந்து கோபத்துடனிருக்கும் யானையின் செருக்கை அழிக்கக்கூடிய, கீழே விழுந்துகிடக்கும் மரத்தைப் போன்ற பெரிய பாம்புகள் இருக்கும். அவைகளிடமிருந்து விலகிச் சென்றால்,  தொலைதூரத்திலும் மணம்வீசும் பூக்களும், உண்டவர்களால் மறக்க முடியாத அளவுக்குச் சுவையுள்ள  பழங்களும் இருக்கும் இடங்களைக் காண்பீர்கள். அவை பயன் மிகுந்தவையாக இருந்தாலும், மனிதர்கள் அவற்றை நெருங்கார். நீண்ட காம்பையுடைய அப் பூக்க்களையும், அப் பழங்கள் உள்ள பெரிய மரக்கூட்டங்களையும் இடப்பக்கமும், வலப்பக்கமும் கவனத்துடன்  பார்த்து, அவற்றின் அடையாளங்களை அறிந்து, அவற்றையெல்லாம் அணுகாமல் செல்லுங்கள். கிளைகள் பலவும் முற்றிய, பூவாது காய்க்கும் மரமாகிய ஆலமரத்தில் ஒன்றுசேர்ந்த பல இசைக்கருவிகளையொப்ப ஒலி செய்யும் பறவைகளின் கூட்டத்தையுடைய நாடுகளை எல்லாம் காணும்படி, அகன்ற இடத்தையுடைய  மலையில் மெல்லமெல்ல  செல்லுங்கள்.

 

குறவரும் மயங்கும் குன்றம்

பெரிய நிழல் தரும் மரங்கள் நெருங்கிவளர்ந்த குறுங்காட்டில் கதிரவனின் வெயில் படாத  வெளியைக்கொண்ட அகன்ற இடங்களில், திசை தடுமாறும் காலமாயினும், வேட்டையாடும் விலங்குகளைத் தேடித் திரியும் மலையில் வாழும்  குறவர்களும் திசை தெரியாமல் மயங்கும்  குன்றுகளுக்கு நீங்கள் சென்றால், அகன்ற இடத்தையுடைய பாறையில் கூடி, கல்லென்னும் ஓசை எழும்படி, மேலும் செல்லாமல், உமது இசைக்கருவிகளை இசைப்பீராக.

 

வழி மயங்கினார்க்குக் குறவர்கள் வந்து உதவி புரிதல்

இனிய ஓசை  உள்ள அருவிகளையுடைய மலை உச்சியில், காடுகளைக் காவல் காக்கும் கானவர் பலர் உளர்.

அவர்கள், துறைதப்பி வலிமை குன்றிய மக்கள்   நீரில் அகப்பட்டு ஆரவாரம் செய்வதைக் கண்டு, விரைந்து ஓடி வந்து, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உண்பதற்கு இனிமையான பழங்களையும், சூடுவதற்கு  மலர்களையும் கொடுப்பார்கள். இடையூறு நிரம்பிய பாதையில் அவர் முன் செல்ல உம்முடைய மனத்துயரம் முற்றிலும் நீங்கி  மகிழ்ச்சி அடைவீர்கள். வழி தெரிந்தவர்கள் கூறிய திசைகளைப் பின்பற்றி குறியவும் நெடியவும் ஆகிய மலைவழியில் இறங்கிச் செல்லுங்கள். அங்குப் பார்த்தவர்கள் அஞ்சத்தக்க பக்கமலைகளில் உள்ள மரநிழலில் தங்குங்கள். நீங்கள் அந்த மரநிழலில் தங்கியிருக்கும்பொழுது, பலவகையான ஓசைகளைக் கேட்பீர்கள்.

 

மலையில் ஆரவாரம்

மலையில் ஆண் கருங்குரங்கு பலாப்பழத்தைத் தோண்டியதால், பலாப்பழம் காயம் மிகுந்து ஊற்றெடுத்து மலை முழுதும் மணம் கமழும். அந்த மலையில் உள்ள அருவியில் குளித்து அதன் பயனை நுகரும் வானத்துத் தெய்வ மகளிர், நீரைக் குடைந்து விளயாடும்பொழுதெல்லாம் தாளம் தெரிகின்ற உங்களுடைய  இசைக்கருவி போன்ற இனிய ஓசை பிறக்கும். தினைப்புனத்தில் புகுந்து தினையைத் தின்னும் ஆண் யானையை மலையின் மேலிருக்கும் பரணில் இருந்து காவல் செய்யும் கானவர் விரட்டும்பொழுது ஆரவாரம் உண்டாகும். நெடிய குகையில் தங்கும் முள்ளம்பன்றி தாக்கியதால் தவறி விழுந்த குறவருடைய அழுகை ஒலி எழும். புலி பாய்ந்ததால் தம் கணவர் மார்பில் ஏற்பட்ட நீண்ட பிளவாகிய விழுப்புண்ணை ஆற்றுவதற்காக, ஆற்றுக் கருமணல் போல் அலை அலையான நெறிப்பு உள்ள மயிரினையுடைய இடைச்சியர் பாடும் ஓசை கேட்கும். முதல்நாளில் பூத்த பொன் போன்ற கொத்தினையுடைய வேங்கை மலர்களைச் சூடுவதற்குப் பெண்கள் புலிபுலி என்று அச்சமில்லாமல் ஆரவாரம் செய்வர். கருவுற்ற  பெண்யானைக்கு உணவைக் கொண்டுவந்து கொடுத்துப் பாதுகாப்பதற்காகச் சென்ற களிற்றைப் புலி தாக்கியதால்,  பெண்யானை கதறித் தன் சுற்றத்தாரை அழைக்கும் குரல்,  இடி முழக்கம் போல் ஒலிக்கும். தன் குட்டியைத் தழுவ மறந்த பெண் குரங்கு, எளிதாய் அணுகமுடியாத மலைப்பிளவுக்குள் விழுந்துவிட்ட தன் தாவுதலை முற்றிலும் கற்றுக்கொள்ளாத குட்டிக்காகத் தன் சுற்றத்தோடு கூடிநின்று, துன்பத்தால் ஆரவாரம் செய்யும். ஆண்கருங்குரங்கு ஏறமுடியாதென்று கைவிட்ட, உயர்ந்த மலையில், உறுதியாக நட்டுச் சார்த்திய மூங்கில் ஏணிகள் வழியாக தேனீக்கள் சேர்த்து வைத்தத் தேனை கொள்ளையாகக் கொண்ட கானவர், மகிழ்ச்சியால்  ஆரவாரம் செய்வர்.  மலையில் உள்ள பொருள்களைத் தொகுத்துக்கொண்ட குறவர்கள், இவை நன்னனுக்குத் பொருத்தமான திறைப்பொருளாக அமையும் என்று மகிழ்ந்து, விடியற்காலையில் கள்ளைக் குடித்து, தம் மனைவியருடன் மான்தோல் போர்த்திய சிறுபறையைக் கொட்டி மகிழ்ச்சியில் குரவைக் கூத்தாடி ஒலி எழுப்புவர்.  நல்ல அழகிய நெடுந்தேர் தெருவில் ஓடி வந்ததுபோல், மலையிலிருந்து வரும் ஆற்றின் ஒலியை மலைப்பிளவுகள் எதிரொலி செய்யும். பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட வலிமையான யானையின் மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு, வடமொழி கலந்த மொழியில் பேசி அவற்றைப் பயிலச் செய்யும் யானைப் பாகர்களுடைய ஆரவாரம் ஒருபக்கம் எழும்.  ஒருபக்கம், மூங்கில் தட்டையைப் புடைத்துக் கிளிகளை  விரட்டும் மகளிரின் ஓசையும், புனங்கள்தோறும் கிளிகளை விரட்டுகின்ற பெண்களின் கூச்சலால் எழும் ஆரவாரமும் கேட்கும். தன் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த காளையும்,  மலையிலிருந்து வந்த  காளையும்  வலிமையுடன் புண் உண்டாகும்படி ஒன்றை ஒன்று தாக்க, முல்லை நிலத்தின் கோவலர், குறிஞ்சி நிலத்தின் குறவர்களுடன் சேர்ந்து வெற்றி தோன்ற ஆரவாரிப்பர். செழுமையான இதழ்களைக்கொண்ட காட்டுமல்லிகையும் குறிஞ்சிப்பூவும் வாடும்படி காளைகள் போரிடும் ஆரவாரம் இருக்கும்.      காந்தளின் துடுப்புப் போன்ற கமழும் மடலால் அடித்து, வளமான குலைகளை உடைய பலாவின் சுளை முற்றின இனிய பழத்தை உண்டு, அதன் மிகையான விதையின் பயனைக் கொள்வதற்காக, கன்றுகளைக் கட்டிக் கடா விடும் பிள்ளைகளின் ஆரவாரம் கேட்கும். மழைபொழிவதைப்போல் சாறு பிழியப்படும்  ஆலைகள்தோறும் விரைவாகக் கரும்பின் கணுக்களை நறுக்குவதால் ஏற்படும் ஒலி இருக்கும். தினையைக் குத்துகின்ற மகளிருடைய  வள்ளைப் பாட்டும், சேம்பையும் மஞ்சளையும் வளர்த்துக் காப்பவர்கள் பன்றியை விரட்டுவதற்குக் கொட்டும் பறை ஓசையும் மலையில் எதிரொலிக்கும். இவ்வோசைகள் யாவும், நிரம்பி ஒன்றுசேரப் பொருந்தி, பள்ளங்களிலும் மலையிலும், நெருங்கிப் பலவற்றுடன், எல்லை இல்லாத பெருமளவில் மலையில் எழும் ஒலி,  யானை பிளிரும் ஒலிபோல் திசைகள்தோறும் ஒலிக்கும்.

 

நன்னனது மலை

பல நிறங்கள் பொருந்திய மலர்களைக்கொண்டு கட்டப்பட்ட மாலைகள் அணிந்த பெண்கள் ஆடுவதற்கு ஏற்ப முழவு ஒலிக்கும் கண் உறக்கம் அறியாத அகன்ற ஊரில் நடைபெறும்  திருவிழாக்களை ஒத்தது நன்னுடைய  அகன்ற இடத்தையுடைய மலை. கண்குளிரக் கண்டும் செவிகுளிரக் கேட்டும், உண்ணுதற்குரிய பல உணவுகளைக் கொண்டாடி உண்டும், ‘மேலும் இத்தகைய இன்ப நுகர்ச்சி எய்துவதாக நமக்குஎன்று  நீங்கள் விரும்பிப் பழைய உறவினர் போலும் முறைமை உடையவர்களாகச் சில நாட்கள் அங்குத் தங்குங்கள். பல சிறந்த போர்களில் வெற்றி அடைந்த, செல்வப் பெருமை மிக்க நன்னனின் இடி முழங்கும் முகில் கூட்டத்தையுடைய பெரிய மலை உங்கள் பின்னால் செல்ல, வியப்பு மிக்க யாழையுடைய விறலியர் நறுமணமான கரிய மலையில் குறிஞ்சிப்பண்ணில் பாட, இறைவனைத் தொழுது, பாராட்டிப்  புகழ்ந்து செல்லுங்கள்

 

குன்றும் குகைகளும் நெருங்கிய மலை வழி

கரிய நிறமுடைய  பெரிய மலையில், பஞ்சுபோலப் பொங்கியெழுந்து கையால் எட்டித் தொடுமளவில் உள்ள  கார்காலத்து மேகக் கூட்டம் தூவுவதைப்போல் நீர்த் திவலைகளை வீசும். திக்குத் தெரியாமல் மிக விரைவாகச் செல்லும் உங்கள்  சுற்றத்துடன், தோளில் தொங்கவிட்ட உங்களுடைய  இசைக்கருவிகள் நனைந்து தொய்வடையாதபடி, கிணற்றைப் போன்ற குகைக்குள் புகுந்துகொள்ளுங்கள்.  பெரிய கற்களின் திரட்சி முறிந்து விழும் மலைகளைச் சேராதீர்கள். அங்கிருக்கும் மலைகளில் பல குழிகள் இருக்கும். அந்தக் குழிகளில் வருத்ததைக் கொடுக்கும் இடையூறுகள் பல.  அக்குழிகளில் நின்று பார்த்தால் அவை கண்ணின் ஒளியைக் கவரும். அந்தக் குழிகளின் அருகே செல்லுங்கால், மார்ச்சனை அடர்ந்த முழவின் அடிக்கும் கோலை ஊன்றும் கோலாகக் கொண்டு, வழுக்காமல் உங்களைப் பாதுகாத்துக்கொண்டு செல்லுங்கள்.  வெய்யிலில் வேல் காய்ந்தாற்போன்ற வெப்பம் மிக்க கூர்மையான பாறைகளில் நடந்தால், அவை உங்கள் கால்களைச்  சுடும். ஆகவே, நிழல் உள்ள வழிகளில், கதிரவனின் வெப்பம் குறைந்த அந்திப் பொழுதில் செல்லுங்கள்.    

அரண்களும் நடுகற்களும் உள்ள வழிகள்

நீங்கள் செல்லும் வழியில், மிகுந்த புகழையுடைய நன்னனை விட்டு நீங்காத அவனுடைய படைத்தலைவர்களும், மிக உயர்ந்த, மேகக்கூட்டங்களோ என்று நினைக்கத்தோன்றும் பல யானைகளும், போரிட வந்த  பகை அரசர்களின் நிலையை அழிக்கும் அரண்களும் உள்ள சிறுகாடுகள் இருக்கும். அந்தச் சிறுகாடுகளில் பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள் பிணைந்திருக்கும். அந்தக் காட்டு வழியில் செல்லும்பொழுது, முன்னே செல்பவன் தன் முகத்தில் அடிக்காமல் இருப்பதற்காகக் கையால் வளைத்து விட்ட வேகம்கொண்ட மூங்கிலின் திரண்ட கோல் உங்கள் யாழின் பத்தலையும் முழவின் கண்ணையும் கெடுக்காதபடி பாதுகாத்துக்கொள்ளுங்கள். முன்செல்பவனின் கையைப் பிடித்து மெல்ல மெல்லச் செல்லுங்கள். பகைவர்கள் போரில் புறமுதுகிட்ட ஓடியபொழுது, ஆரவாரம் செய்து,  தங்கள் உயிரைக் கொடுப்பதற்கு நாணம் இல்லாது போரிட்ட வீரர்களின் நினைவாக அவர்களின் பெயர் எழுதிய நடுகற்கள் நிறைந்திருக்கும். கேட்போர் மகிழ்ச்சி அடையும் தாளக்கட்டுடைய உம்முடைய பாட்டை நடுகல் வீரர்கள் விரும்புமாறு பாடி, தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும் மரபுப்படி உங்கள் யாழை இயக்கி, நீங்கள் விரைந்து செல்லுங்கள். முன்பு நன்கு வழியை அறியாததால் வழிதவறி பின் அவ்விடத்திற்கு மீண்டும் நீங்கள் வருவீர்கள் ஆயின், பல வழிகள் கூடின அச்சந்திகளைக் கையால் துடைத்து, அடுத்து அவ்வழியில் வருபவர்களுக்கு அறிகுறியாக ஊகம்புல்லை கட்டி வையுங்கள்.  

 

விருந்தோம்பல்

நீங்கள் போகும் திசைகளில் போரில் இறந்த வீரன் இவன் என்று அவன் பெயரைப் பிறருக்கு அறிவிக்கும் பொருட்டு, கடம்ப மரத்தின் அடியில் நட்ட  நடுகற்கள் கடவுள் தன்மை மிக்கவையாதலால், அக் காடு பிற காடுகளை இகழ்வது போன்றது. அந்தக் காட்டில், நன்னனைப் பொருந்தாது நீங்கிய அவனுடைய ஏவலை ஏற்காத பகைவர்கள் நடுங்கும் சுரங்கள்  பல உள்ளன. அந்த இடங்களில், “தேன் வடிகின்ற மாலைகளையும், தேர்களைப் பரிசிலர்க்குத் தரும் கவியும் கைகளையுடைய, தனக்கென்று ஒருபொருளையும் பாதுகாக்காத நன்னனைக் காண நாங்கள் செல்கின்றோம்என்று நீங்கள் கூறுங்கள். நீங்கள் அவ்வாறு கூறினால், மிகுந்த செல்வம் உடைய நன்னனுடைய பழைய ஊர்போல் அவ்விடமும் நம்மை ஒத்த பரிசிலர்க்கு நன்மையே செய்யும்.  நீங்கள் களைப்புற்ற இடத்தில் இளைப்பாறி, அச்சம் இல்லாமல் செல்லுங்கள்.  

 

காட்டில் புலி பாய்ந்துகொன்ற பெண்மானை நினைத்துக் கலைமான் கூச்சலிடும்; வில்லின் ஓசைக்கு அஞ்சிய சிவந்த கண்ணையுடைய மரையின் ஆண், விரைந்து ஓடும்.  வேற்று நிலத்தில் மேயும் காளைகளை உடைய ஆநிரையில் உள்ள,  சங்குபோன்ற வெள்ளைப் பசுக்களின் இனிய பாலை, ஆநிரைகளைக் காக்கும் இடையர்களின் வளையல் அணிந்த மகளிர் நீங்கள் மகிழும்படி கொண்டு வந்து உங்களுக்குத் தருவார்கள். அதைக் குடித்தால், உங்கள் துன்பம் உங்களை விட்டு நீங்கி நீங்கள் புதியவர்கள் ஆவீர்கள்.  பண்டமாற்றால் பெற்ற கலவை நெல்லைப்போல் கிடாய்கள் கலந்த செம்மறியாட்டுக் கூட்டம் வெள்ளாடுகளுடன் கலக்கும்.  கலந்து கல்லென்ற ஓசையுடைய காட்டில் கடல்போல் ஒலிக்கும் இவ்வகையான ஆட்டுக் கூட்டங்கள் நிற்கின்ற காட்டில், இரவில் சென்றால், இடையர் உமக்கென்று சமைக்காமல் தமக்கென்று சமைத்த பாற்சோற்றையும் பாலையும் பெறுவீர்கள். அங்கு,  மெல்லிய மயிரை அடைத்த மெத்தையைப்போல், ஆட்டுத் தோலைத் தைத்துச் செய்த படுக்கையில்,   நெருப்பைத் துணையாகக் கொண்டு தங்கிவிட்டு நீங்கள் செல்லுங்கள்.

 

வேட்டுவர்களின் உதவி

நீங்கள் செல்லும் காட்டுவழியில், கூப்பிடு தூரத்தையும் கடக்கக்கூடிய கூரிய நல்ல அம்பையும் கொடிய வில்லினையும் உடைய வேட்டுவர்களின்  கூட்டத்தைக் காண்பீர்கள். அவர்களைக் கண்டால்தனக்குப் படியாதாரை அழித்த, யாருக்கும் பணியாத  ஆளுமையுள்ளவனும், பூங்கொடி போன்றவளின் கணவனும் ஆகிய நன்னனிடம் நாங்கள் செல்கின்றோம்என்று நீங்கள் சொன்னால், அவர்கள் தசைகளையும் கிழங்குகளையும்  கொடுத்து உங்களை வற்புறுத்தி உண்ணச் செய்வார்கள். அவர்கள் உங்களைப்  பாதுகாப்பவர்களே அன்றி, வருத்துபவர்கள் இல்லை. பின்னர், அவர்கள் போகச்சொன்ன வழியில் செல்லுங்கள்; அதுவே அக்காட்டின் தன்மையாம்.

 

நீர் அருந்திக் குளித்துச் செல்லுதல்

தேன் உண்டாக மலர்ந்த கடம்ப மரத்தின் மென்மையான பூங்கொத்துகளையும், யானை முறித்த அழகிய தளிர்களையுடைய யாமரத்தின் பூக்களையும், மரல் நாரில் மாலையாகக் கட்டிச் சூடுவீராக. பரற்கற்ளையுடைய மேட்டுநிலத்தில் உள்ள வழியில் மழைபெய்து  குளிர்ந்ததால், அங்குள்ள நீரைக் குடியுங்கள், நீரில் குளித்துவிட்டு வழிக்கு முகந்துகொண்டு செல்லுங்கள்.

 

புல் வேய்ந்த குடிசைகளில் உணவு பெறுதல்

வேங்கை மரத்தின் சிவந்த பூக்களைப் போன்ற மூங்கிலரிசியினால் செய்த சோற்றில், மேட்டுநிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியைக் கலந்து, அவரை விதையினால் சமைத்த புளிக்கரைத்த புளியங்கூழைப் பகலில் நடந்து வந்த உங்கள வருத்தம்  தீரக் குடிசைகள்தோறும் பெறுவீர்கள்.  நீங்கள் அங்கே தங்கினால், அரிசிச் சோற்றில் வெண்ணிறமான மாவைத் தூவிப் பெரிய சோற்றுருண்டையில், நெய்விழுதை உள்ளே இட்டுச் செய்த உணவைத்  தினமும் பெறுவீர்கள்; உண்பவர்களை வேறு எங்கும் செல்லாதபடி  தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும் பெறுவீர்கள்.  எளிதில் தீப்பற்றும்  குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி, குளிர் முற்றிலும் நீங்கும்படி, இனிதாகச் சேர்ந்து உறங்கி, பொழுது புலர்ந்த அதிகாலையில் பறவைகளின் ஒலியைக் கேட்டுச் செல்லுங்கள்.

 

நன்னனது தண்பணை நாட்டின் தன்மை

நன்னனுடைய குளிர்ந்த மருத நிலங்களையுடைய நாடு, காஞ்சி மரத்தையும், நீர்வந்து மோதுகின்ற அறுகுகளையும், மென்மையான விளைநிலங்களையும் உடையது. அங்குள்ள ஊர்களில், நீங்கள் பல நாள் தங்கினாலும், ஒருநாள் மட்டும் தங்கிவிட்டுச் சென்றாலும், யாழில் பண்களை மாறிமாறி வாசிக்கும்பொழுது எவ்வாறு இனிமையாக இருக்குமோ, அதுபோல் நல்ல பல பொருள்களை மாறிமாறி உண்ணும்படி பெறுவீர்கள்.

 

உழவர் செய்யும் விருந்தோம்பல்

சண்பங்கோரை நெருங்கி வளர்ந்த குளத்தில், வலையை வீசுபவர்கள் பிடித்துக் கொண்டுவந்த வாளை மீனின் தசையை, வரால் மீனின் தசைத் துண்டுகளுடன்டன் கலந்து, பகன்றை மலர்கள் சூடிய கள் விற்கும் மகளிர் தருவார்கள். நண்டுகள் ஆடித்திரியும்  வயலுக்கு அருகே உள்ள மேட்டு நிலத்தில் மலையை ஒத்த வைக்கோல் போர்களைக் கீழே தள்ளிக் கடாவிடும் உழவர்கள்  நெல்லை முகந்து தருவார்கள். நெல்லின் பசிய முளைகளாலான தெளிந்த கள்ளை விடியற்காலையில் பெறுவீர்கள். முள்ளை நீக்கி ஆக்கின கொழுப்பால் வெள்ளை நிறத்தையுடைய மீன் தசையையுடைய வெண்ணிறமான சோற்றை உங்கள் சுற்றத்துடன் உண்ணுங்கள்.  எருதுகளை அடித்து ஓட்டும் உழவர்களின் பாட்டோடு இயையுமாறு உங்கள் நல்ல யாழில் மருதப் பண்ணில் பாடி, அவ்விடத்தில் இளைப்பாறிச் செல்லுங்கள்

 

சேயாற்றின் கரை வழியே செல்லுதல்

மருத நிலத்து வயல்களில், நெல்லை அறுப்பவர்கள் கொட்டின மருதப் பறையின் ஓசைக்கு அஞ்சி, எருமைக் கூட்டத்திலிருந்து கடா ஒன்று ஆரவாரித்து விரைந்து வலிமையுடன் உங்களை நோக்கி வருவதை அறிந்து, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். குயவனின் மண்பாண்டம் செய்யும் உருளையைப் போன்ற நீர்க்குமிழிகள் சுழன்று, விரைந்து சென்று வாய்க்காலில் ஓய்வு இல்லாமல் ஓடும் சேயாற்றின் வளமையான ஒரு கரையை வழியாகக் கொண்டு செல்லுங்கள்.

 

நன்னனது மூதூரின் இயல்பு

செல்வம் நிறைந்த, மிக ஓங்கிய மதில்களையுடைய நன்னன் ஊரில் வாழும் பழமையான குடிமக்கள் அங்கிருந்து குடிபெயர்ந்து வேறு இடங்களுக்குச் செல்ல மாட்டார்கள்.  அங்குள்ள தெருக்கள் அகன்றதாயினும் இடம்போதாத சிறந்த பெரிய கடைத்தெருக்களை உடையன. அந்தத் தெருக்களில் மக்களின் ஆரவாரம் கடல் போலவும் மேகங்களின் இடி முழக்கத்தைப் போலவும் இருப்பதைப் பார்த்தால், அங்குத் திருவிழா நடைபெறுகிறதோ என்று எண்ணத் தோன்றும். அங்குப் பகைவர்கள் செல்ல அஞ்சுவார்கள். அங்கு வாழ்பவர்கள் வெறுப்பின்றி விருப்பத்தோடு இனிதாக வாழ்வர். சோலைகளில் வண்டுகள் இசைபாடும் நன்னனின் பழைய வெற்றியை உடைய அந்த மூதூர் மிக அருகில் உள்ளது.

 

மூதூர் மக்கள் விருந்து எதிர்கொள்ளுதல்    

நன்னனோடு பொருந்தாத பகைவர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு, அவற்றில் உள்ள சதைகளைப் பருந்துகள் உண்ணும்படி, நுழைவாயிலில் கடிய வேலில் சாத்திவைத்து, மறவர்கள் காவல் காப்பர். அந்தக் கடுமையான காவலையுடைய நுழைவாயிலில் ஐயமில்லாமல் நுழையுங்கள். தொலைவிலிருந்து வந்து மன்றத்தில் தங்கியிருக்கும் மற்ற பரிசிலர், உங்களைக் காண்பர். உங்களைப் பார்த்தவுடன், நீங்கள் வெல்லும் போரில் வல்ல முருகனைப்போல் உள்ள நன்னனிடம் பரிசு பெறுவதற்காக வந்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, உங்களை அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் விருந்தினராக ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் நடந்து வந்த வருத்தம் தீர அவர்களுடன் தங்குங்கள்.

 

அரண்மனை வாயிலில் காணும் பொருள்கள்

நன்னனின் தலைவாயிலினிடத்தே கடம்ப மரத்தின் அருகில் இருந்த காட்டுப்பசுவின் கன்றும், யானையின் கன்றும், வாயினால் ஒலி எழுப்பாத கரடியின் வளைந்த கால்களை உடைய குட்டியும், வளைந்த கால்களை உடைய மலை ஆடும், வலிய தலையையுடைய பெரிய ஆண் செம்மறி ஆடும், பாம்பின் வலிமையை அழித்த கீரியும், புலி பாய்ந்து கொன்ற மரையானின் பெரிய காதுகளை உடைய குட்டியும்,  சிவந்த நிலத்தில் பரற்கற்கள்மேல் தவழும் உடும்பின் ஆணும், மலையில் ஆடும் மயிலும், காட்டுக் கோழியின் பெடையை அழைக்கின்ற குரலையுடைய சேவலும், முழவு போன்ற பெரும்பழமும், இனிய மாம்பழங்களும், நறைக் கொடியும், நூறைக்கிழங்கும், கற்பூரமும், பல விலை உயர்ந்த மணிகளும், புலியால் கொல்லப்பட்ட யானைகளின் முத்துடைய தந்தங்களும்,  வெண்காந்தள் மலர்களும், புன்னை மலர்களும், திலக மலர்களும், சந்தன மரங்களும், பசிய மிளகுக் கொத்துகளும்,  மூங்கில் குழாயில் முற்றிய தேனால் செய்த கள்ளின் தெளிவும், மூங்கில் குழாயில் தோய்த்த எருமைத் தயிரும், தேன் சொரியும்  தேன் கூடுகளும்,  ஆசினிப் பலாப்பழங்களும், மேற்கு மலையில் பிறந்த குளிர்ந்த பெரிய காவிரி ஆறு கடலில் செல்கின்ற ஆழத்தையுடைய புகார் முகத்தை ஒப்ப நிறைந்திருக்கும்.  

 

விறலியர் நன்னனைப் போற்றுதல்

முகில்கள் போன்று வளப்பம் மிக்க யானைகளின் தாதாகிய எருச் செறிந்த முற்றத்தை அடையுங்கள். அடைந்து, முகிலின் முழக்கம்போல் முழங்கும் கண்ணையுடைய முழவு அதிரமூங்கிலாலாகிய தூம்பு (பெருவங்கியம்) என்னும் இசைக்கருவியின் திறந்த கண்கள் ஒலிக்க, மருதத்தை இசைத்த கரிய தண்டினையுடைய சிறிய யாழின் நரம்பினுடைய ஓசைக்கு மேல் போகாது, கூடி ஒன்றுபட்டு, கடமையை அறிந்த விறலியர்கள் பழைய மரபின் முறையில் தப்பாமல் பெரும் வலிமையுடைய கடவுளை வாழ்த்தட்டும்.

 

நன்னனைப் போற்றுதல்

புதிய பாடல்களைப் பாடி, ”சூளுரைத்து அதனை நிறைவேற்றிக் குறையாத நல்ல புகழோடு இருந்து மறைந்தோரின் வழிவந்தவனே! தம் புகழ் இங்கு அழியாது, உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்படி

நல்லதையும் தீயதையும் ஆரய்ந்து அறிந்து உணர்ந்த வள்ளல்கள் மறைந்ததால், அவர்கள் மேற்கொண்ட கொடையை மேற்கொண்டு, கடமையைச் செய்துமுடித்த அண்ணலே!” என்று கூறி, அவனது வெற்றிகளால் கிடைத்த பலபுகழையும், அவன் வெற்றிகளையும் புகழ்ந்து கூறுங்கள். ஆனால், நீங்கள் அவற்றைச் சொல்லும்பொழுது, நன்னன் உங்களைச் சொல்லி முடிக்க விடமாட்டான்.

 

நீங்கள் வந்ததே போதும்

 என் மேல் விருப்பம் கொண்டு நீங்கள் வந்ததே போதும்.  நீங்கள் வந்த  வழியில் அடைந்த  வருத்தம் பெரிது.” என்று நன்னன் கூறுவான். பின்னர் படைத்தலைவரோடே பொலிவுபெற்ற செல்வத்தையுடைய தன் அரண்மனையின் முற்றத்திற்கு உங்களை அவன் அழைத்துச் செல்வான்.  ” உயர்ந்த அரச உரிமையையும் கொடுமை இல்லாத அமைச்சர்களையும் அகன்ற நாட்டினையும் உடையவர்களாக இருந்தும், சுருங்கிய அறிவுடன், பரிசில் வேண்டி வந்தவர்களுக்குஇல்லை எனக் கூறி விரித்த கைகளோடு தங்கள் பெயர் தங்களுடன் அழிந்த மன்னர்கள் மலையிலிருந்து பெருகி ஓடுகின்ற சேயாற்றங் கரை மணலிலும் பலராவர். எனவே, நம்முடைய வாழ்வு, நமக்கென்று வரையறுத்து வைக்கப்பட்டக் காலமட்டும், நமது புகழ் வானத்தைப்போல் விரிந்து வளர்ந்து செழிக்க வேண்டும்.” என்று அவன் நினைப்பான். பின்னர், பரிசுபெற விரும்பிச் சென்றுள்ள உங்களைக் காட்டிலும், மிக மகிழ்ச்சியுடன் உங்களை அவன் இனிமையாக நோக்குவான்.

 

நன்னனது கொடைச் சிறப்பு

நூல் போன இடம் கண்களுக்குத் தெரியாதபடி நுண்ணிய நூலால் செய்த ஆடையை, உங்கள் இடையில் உடுக்கும்படி தருவான். அங்கு நீங்கள் பலநாட்கள் தங்கினாலும், பெண்நாய் கடித்துக் கொண்டுவந்த பசிய கொழுப்புடைய தசைத் துண்டுகளுடன், நீண்ட வெண்ணெல்லின் அரிசியை எல்லையில்லாது, முதல் நாள்போல் விருப்பத்துடன் பெறுவீர்கள். அங்கு இன்னும் பலநாட்கள் தங்காது, “நாங்கள் செல்ல எண்ணுகின்றோம் எங்கள் ஊருக்குஎன நீங்கள் மெல்லெனக் கூறி, அவனைவிட்டு புறப்படுவீர்களானால், தலைவனாகிய நீ பொற்றாமரை சூடவும் விறலி பொன்னாலான அணிகலன்களை அணியவும் செய்வான். அத்தோடு மட்டுமல்லாமல், நெடிய தேர்களையும், மலை போன்ற யானைகளையும், காளைகள் உடைய பசுக்கூட்டத்தையும், பொன்னாலான சேணத்தையுடைய குதிரைகளையும், குறைவில்லாத பொருள்களையும் முதல்நாளிலேயே கொடுத்து உங்களை வழியனுப்புவான். அவன் மலையிலிருந்து விழும் அருவி, வெற்றிக்கொடியைப்போலத் தோன்றும். அத்தகைய  மலைகள் சூழ்ந்த குடியிருப்புகளைக்கொண்ட நாட்டிற்கு உரிமையுடையவன் நன்னன்.

Comments

Popular posts from this blog

மலைபடுகடாம் – அறிமுகம்

மலைபடுகடாம் – மூலமும் உரையும்

உங்கள் கவனத்திற்கு